சாலையில் வாகனம் பழுதா? - டிவிஎஸ் புது வடிவம்!
 
வசரமாக எங்காவது பயணம் செய்யும்போதுதான், நம் வாகனத்துக்கு ஏதாவது ஒரு பிரச்னை வந்து தொல்லைப்படுத்தும். இதற்காகவே, சில வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கும் 'ரோடு சைடு அஸிஸ்ட்' என்ற சேவையை அளிக்கின்றன. அதில் குறைபாடுகள், கட்டணம் அதிகம் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், முழுமையான சேவை என்பது இன்னும் நமக்கு எட்டாக்கனிதான். அதற்கு தீர்வாக புது வடிவில் வந்திருக்கிறது இந்தக் கூட்டணி!  
 
டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன்ஸ், ஆட்டோமொபைல் சர்வீஸ் துறையில் முன்னோடி நிறுவனம் என்பது நாம் அறிந்ததே. இந்த நிறுவனம் ஏற்கெனவே '24X7 ரோடு சைடு அசிஸ்ட்டென்ஸ்' (24X7 Road Side Assistance ) என்ற பெயரில், சாலையில் பழுதடையும் வாகனங்களுக்கான சேவையை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் செய்துகொண்டிருக்கிறது. இதை மேலும் விரிவுபடுத்தவும் மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது டிவநேஸ். இதற்காக,  இதே துறையில் இங்கிலாந்தில் செயல்பட்டுவரும் 'ஆட்டோமொபைல் அசோஸியேஷன்' (The Automobile Association) எனும் நிறுவனத்துடன் இணைந்து, டிவிஎஸ் ஆட்டோ அஸிஸ்ட் எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
 
 இதன் மூலம் டிவிஎஸ் நிறுவனம் உலகலாவிய ஆட்டோமொபைல் சர்வீஸ் துறையில் இந்தக் கூட்டணி மூலம் கால்பதிக்கிறது. இதுவரை கார் மற்றும் இலகு ரக வாகனங்ளுக்கு மட்டுமே சர்வீஸ் என்றிருந்த நிலை மாறி, கன ரக கமர்ஷியல் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ என ஆனைத்து ஆட்டோமொபைல் வாகனங்களுக்கும் சர்வீஸ் அளிக்க திட்டமிட்டு உள்ளது. மேலும், வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்களையும் புதிய சேவைகளையும் உலகலாவிய தரத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என்கிறது டிவிஎஸ்.
 
பத்திரிகையாளர் சந்திப்பில் பாப் மெக்கன்ஸி மற்றும் ஆர்.தினேஷ்
 
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய டிவிஎஸ் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் இயக்குனரான ஆர்.தினேஷ், '' சாலையில் பழுதடையும் வாகனங்களுக்கு துரித சேவை அளிப்பதில் முன்னோடியாகத் திகழும் டிவிஎஸ் நிறுவனம், கூட்டு நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்பம் மூலம் பல புதிய சேவைகளையும் வழங்கும். இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் அனைத்து நாடுகளிலும் உள்ள வாகன உற்பத்தியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரே மாதிரியான சேவையை, ஒரே குடையின் கீழ் வழங்க முடியும்'' என்றார்.
 
''இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சியடைந்துவரும் இந்தத் தருணத்தில், இங்கே கால்பதிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கிலாந்திலும் பிறநாடுகளிலும் வாடிக்கையாளர்களைக் கையாண்ட அனுபவம், இந்தியாவில் கைகொடுக்கும் என நம்புகிறேன்'' என்றார், ஆட்டோமொபைல் அசோஸியேஷன் நிறுவனத்தின் தலைவர் பாப் மெக்கன்ஸி.
 
இங்கிலாந்தில் உள்ள ஆட்டோமொபைல் அசோஸியேஷன் நிறுவனம் ரோடு சைடு அசிஸ்ட் சேவை புரிவதில் 40 சதவிகித சந்தை பங்களிப்பைக் கொண்டுள்ளதோடு, 1.5 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பெரிய நிறுவனமாகும்.
 
டிவிஎஸ் ஆட்டோமொபைல் சொல்யூஷன் நிறுவனம், நம் நாட்டின் 28 மாநிலங்களில் 1,795 இடங்களில் 4,000-க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற மெக்கானிக்குகளைக்கொண்டு, மிகப் பெரிய நெட்வொர்க் கொண்டுள்ளது. இந்தியாவில் 10 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது டிவிஎஸ் நிறுவனம்.
 
நல்வரவு!  

படம்: தி.ஹரிஹரன்