ரேடாருக்கு ஓகே சொன்ன இந்திய அரசாங்கம்!

 

 

ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், சாலை பாதுகாப்பை உயர்த்துவதற்கான முயற்சியாக, குறைந்த அளவு அலைவரிசைகளைப் பயன்படுத்துவதற்கான உரிமையை, ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு அளிக்க இருக்கிறது மத்திய அரசாங்கம். இதனால், ரேடார் சார்ந்த ஓட்டுநருக்கு உதவும் சாதனங்களைக் கார்களில் பொருத்தி, காரின் பாதுகாப்பை அதிகரிக்க முடியும். 36 - 38 MHZ, 433 - 434.79MHZ, 302 - 351 MHZ, 76 - 77GHZ ஆகிய அலைவரிசை அளவுகளை இதற்காக ஒதுக்க முடிவெடுத்திருக்கிறது மத்திய அரசாங்கம். சில காலத்திற்கு முன்னால், இந்த அலைவரிசை அளவுகள், தொலைத்தொடர்பு துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, பார்க் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் க்ரூஸ் கன்ட்ரோல், AUTONOMOUS எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற தொழில்நுட்பங்களை இனி வரும் கார்களில் பிரச்சனையின்றி சேர்க்க முடியும் என்று, அரசாங்கத்தின் முடிவை வரவேற்றுள்ளது BOSCH. ஆனால், 24 GHZ மற்றும் 79 GHZ அலைவரிசைகளை பயன்படுத்துவதற்கான உரிமையை தங்களுக்கு வழங்கினால் மட்டுமே, நவினமான ரேடார் சார்ந்த ஓட்டுநருக்கு உதவும் சாதனங்களை சிக்கலின்றி செயல்படுத்த முடியும் என்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். மேலும் இந்த தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட கார்களை இங்கு தயாரித்து, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு அதிகமாவதற்கான சாத்தியக்கூறுகள் இதனால் தென்படுகின்றன.