கமர்ஷியல் வாகனங்கள்: பாடி பில்டிங் ரகசியங்கள்!
Posted Date : 18:27 (04/11/2015)
Last Updated : 18:32 (04/11/2015)

 

மினி பஸ், டவுன் பஸ், எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் ஏர் பஸ், ஸ்லிப்பர் பெர்த் பஸ், ஏ.ஸி வால்வோ, மல்ட்டி ஆக்ஸிள் பென்ஸ், இசுஸு என நீண்டுகொண்டே செல்கின்றன பேருந்தின் வகைகள். முன்பெல்லாம் பேருந்தில் பயணம் செய்வது என்றாலே அலுப்பும் சலிப்பும் ஏற்படும். ஆனால், இன்று ஒவ்வொரு பேருந்துமே அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு, நம்மை 'வா... வா' என்று சுண்டி இழுக்கின்றன. இதில்தான் எத்தனை வகைகள்... எத்தனை நுணுக்கங்கள்...!

 
அஸ்திவாரம்:
 
நீளமான இரண்டு இரும்புத் தூண்கள்; அதனை இணைத்து முன்னும் பின்னும் பொருத்தப்பட்ட சக்கரங்கள்; முன் பக்க இரும்புத் துண்டில் அமர்ந்திருக்கும் இன்ஜின்... இப்படித்தான் புதிதாய் பிறந்த குழந்தை போல தொழிற்சாலையில் இருந்து வெளியே வருகிறது பேருந்தின் அஸ்திவாரமான 'சேஸி'. இந்த அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் கட்டிடமே (பாடி பில்டிங்) அதற்கு பேருந்து என்ற அந்தஸ்தைக் கொடுக்கிறது. தென்னிந்தியாவில் பேருந்துகளைக் கட்டமைக்கும் பணிக்கு முக்கிய இடமாகத் திகழ்வது கரூர். 
 
 
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஒரிசா போன்ற வடமாநிலங்களில் இருந்தும்கூட சேஸிகள் பாடி பில்டிங்குக்காக கரூர் வருகின்றன. துபாய், இலங்கை, அந்தமான் போன்ற இடங்களுக்கும் பேருந்துகளைக் கட்டமைத்து ஏற்றுமதியும் செய்கிறார்கள். பேருந்துகளில் பல வகைகள் இருந்தாலும், இவற்றில் 'ஸ்டேஜ் கேரேஜ் வெஹிக்கிள்' என்றழைக்கப்படும் புறநகர் பேருந்து மற்றும் நகரப் பேருந்து போன்றவற்றுக்கு கரூர் மிகவும் பிரசித்தம்.
 
எப்படி உருவாகிறது பேருந்து?
 
ஏற்கனவே கூறியதைப்போல, சேஸி மீதுதான் எந்த வகையான பேருந்தையும் கட்டமைக்க வேண்டும். ஒரு சேஸி பேருந்தாக உருவாக சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட உபகரணங்களும், சுமார் முப்பது தொழிலாளர்களும், சராசரியாக 20 நாட்கள் கால அவகாசமும் தேவைப்படுகின்றன. பேருந்தை உருவாக்குவது என்பது ஒரு கூட்டு முயற்சி. இதில், முப்பதுக்கும் மேற்பட்ட நிலைகள் இருக்கின்றன. இவற்றை ஆறு கட்டங்களாகப் பிரிக்கலாம். சேஸியை பாடி பில்டிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பேருந்தின் முதலாளி, தனது பேருந்தின் வடிவத்தைத் தேர்ந்தெடுப்பார். 
 
இந்த வடிவம் மோட்டார் வாகனச் சட்டத்துக்கு உட்பட்டதா எனத் துவங்கி தேவைப்படும் வசதிகள், வேலைப்பாடுகள், பாடி கட்டுமானத்துக்கான பட்ஜெட்... இவற்றையெல்லாம் முடிவு செய்த பின்புதான் பேருந்து கட்டுமானத்துக்குத் தயாராகிறது. வாடிக்கையாளர் தேர்வு செய்த வடிவத்தினைப் பொறுத்துதான் அந்தப் பேருந்து கட்டுவதற்கான செலவும், அதை எந்தெந்த தொழிலாளர்களுக்குப் பிரித்துத் தருவது என்பதும், பாடி பில்டிங் நிறுவனத்தில் முடிவு செய்யப்படுகிறது.
 
 
கூண்டு கட்டுதல்:
 
முதலில் மேற்கொள்ளப்படுவது கூண்டு கட்டுமானப் பணி. தடித்த இரும்புச் சேனல்களைத் துண்டாக்கி சேஸின் குறுக்காக குறிப்பிட்ட இடைவெளிகளில் பொருத்துவார்கள். பிறகு, இரும்பு ஆங்கிள்களை வளைத்து அதனையும் சேஸியில் வெல்டிங் செய்து பொருத்துவார்கள். இந்த வேலை நிறைவு பெறும்போது, பார்ப்பதற்கு எலும்புக் கூடு போன்று இருக்கும். இதைத்தான் 'ஸ்ட்ரக்சர்' (Structure) என்கிறார்கள். இதுதான் பேருந்தின் வடிவத்தைத் தீர்மானிக்கிறது.
 
மர வேலைப்பாடு:
 
அடுத்ததாக மர வேலைப்பாடுகள். வளைத்துப் பொருத்தப்பட்ட ஆங்கிள்களில் மரத் துண்டுகளை இழைத்துப் பொருத்துவார்கள். பேருந்தின் தரைத் தளத்துக்கு 'டைமண்ட் பிளைவுட்கள் அமைக்கப்படும். இந்த இரண்டு வேலைகளும் வீட்டின் தரைத் தளம் போன்றது.
 
 
தகடு தகடு!
 
மூன்றாவதாக மேற்கொள்ளப்படும் தகடுகள் (Sheet Metal) பொருத்தும் பணி. வாடிக்கையாளர் விரும்பிய டிசைனை மோல்ட் செய்து பேருந்தின் முகப்பிலும், பின் பக்கமும் பொருத்தப்படும். பக்கவாட்டுப் பகுதியையும் தகடுகளால் மூடியதும் கூடு போல இருந்த பேருந்துக்கு ஒரு வடிவம் கிடைத்து விடும்.
 
ஃபிட்டிங்:
 
இந்த வேலைகள் நடைபெறும் போதே... இதன் வடிவமைப்புக்குத் தகுந்ததுபோல கண்ணாடிகள் மற்றும் அதற்கான ஃப்ரேம்கள், இருக்கைகள் போன்றவை தயாரிக்கும் பணி நடைபெறும். இவை தனித் தனி துறைகளாகச் செயல்படுகின்றன. அதன்பின் பேருந்தில் 'ஃபிட்டிங்' வேலைகள் துவங்கும். இருக்கைகள், கைப்பிடிகள், படிகளில் பிடிகள், ஸ்பீக்கர்கள், ஒயரிங் வேலைகள் போன்றவை நடக்கும். முகப்பிலும், பின்புறமும், பக்கவாட்டு ஜன்னல்களிலும் கண்ணாடிகளைப் பொருத்துவது பேருந்தின் உருவாக்கத்தில் முக்கியமான கட்டமாகும். உள்ளே இருக்கைகள் சிறப்பாக இருந்தால்தான் பயணிகள் மனதில் பேருந்து இடம் பிடிக்க முடியும். இருக்கைகள் விஷயத்தில் புதுப் புது மாடல்களைத்தான் பேருந்து கட்டுபவர்கள் விரும்புகிறார்கள்.
 
பெயின்டிங்:
 
முகப்பு விளக்குகள் உள்பட அனைத்தும் முடிந்த பின் பேருந்தினைப் பார்ப்பதற்கு ஒப்பனை இல்லாத உலக அழகி மாதிரியே இருக்கும். அதே பேருந்து பெயின்டிங் பூத்துக்குள் கொண்டு செல்லப்பட்டு, வண்ணம் பூசிய பின் அழகுப் பெட்டகமாக உருவாகிவிடுகிறது. பலர் இந்த வண்ணப் பூச்சோடு விடாமல் பக்கவாட்டில் பத்தாயிரத்திற்கும் மேல் செலவு செய்து ஓவியங்களையும் தீட்டுகின்றனர். முகப்புகளில் வித்தியாசத்தைக் காட்டுவதற்குத்தான் பாடி பில்டிங் நிறுவனங்களுக்கு இடையே பெரும் போட்டியே நடக்கிறது.
 
 
விலை என்ன?
 
ஒரு பேருந்தை கட்டுமானம் செய்வதற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் தொடங்கி 7.5 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். இதுவே மினி பஸ் என்றால் 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை ஆகும். கரூரைப் பொறுத்தவரை இங்கு வரக்கூடிய சேஸிகளில் தொண்ணூறு சதவிகிதத்துக்கும் மேல் அசோக் லேலண்ட் நிறுவனத்தைச் சேர்ந்தது தான். டாடா நிறுவனத்தின் சேஸிகள் மிகக் குறைவாகத்தான் வருகின்றன.
 
முன்பு, ஒரு சேஸியின் விலையில் இருந்து 80 சதவிகிதம் பேருந்து கட்டுமானம் செய்வதற்கு செலவு ஆகும். ஆனால், இப்போது 60 சதவிகிதம் வரைதான் ஆகிறது. மேலும், கரூர் - பாடி கட்டுமானத்தின் தரத்துக்குப் பெயர் பெற்றதாக இருக்கிறது. அதனால்தான் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பேருந்து கட்டுமானத்துக்கு கரூரை நாடி வருகின்றனர்.
 
TAGS :