பஸ் பாடி பில்டிங்: தொழில் அனுபவம் பேசுகிறது!
Posted Date : 09:56 (05/11/2015)
Last Updated : 09:59 (05/11/2015)

 

பாடி கட்டுமானத் துறையில் கோவையைச் சேர்ந்த எல்.ஜி.பி. நிறுவனம் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. கரூரில் இருக்கும் பெரும்பான்மையான நிறுவனங்களுக்கு 'தாய்' நிறுவனம் போன்றது எல்.ஜி.பி பஸ் பாடி பில்டிங் நிறுவனம். 1990-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் வடிவமைக்கும் டிசைன்தான் பலருக்கு ரோல் மாடலாக இருந்திருக்கிறது. அதன் பின்பு, இந்தத் துறையில் பலர் இறங்க... வாடிக்கையாளர்களைக் கவர புதிய முயற்சிகளும், புதிய வடிவமைப்புகளும் உருவாகின.

மாருதி கோச் பாடி பில்டிங் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சௌந்தரராஜனிடம் பேசியபோது. ''வாடிக்கையாளர்களை திருப்தி செய்யும் விதமாக பேருந்துக்கு பாடி கட்டித் தரும் அதேவேளையில், அதில் அமர்ந்து பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்குச் செய்யும் வேலையாகவே கருதி செய்கிறோம்'' என்றார்.

 

 

பீ.டீ கோச் பாடி பில்டிங் நிறுவனத்தைச் சேர்ந்த முருகானந்தம், ''கரூரில் பேருந்து கட்டுமானம் செய்து ஏற்றுமதி செய்தது முதன்முதலில் நாங்கள்தான். இன்றளவும் துபாயிலிருந்து எங்களுக்கு ஆர்டர்கள் வருகின்றன. தரமாகப் பேருந்துகளைக் கட்டித் தருவதால்தான் இந்தத் தொடர்பு நீடிக்கிறது. பெங்களூரூவில்தான் ஆம்னி பஸ்கள் கட்டப்படுகின்றன. ஆனால், புறநகர், நகரப் பேருந்துகள் என்றால் கர்நாடக வாடிக்கையாளர்கள் தேடி வருவது கரூரைத்தான். கரூருக்கு வரும் ஆர்டர்களில் பாதி, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வருவது என்பது குறிப்பிடத் தக்கது'' என்றார்.

 

ராயல் கோச் ரமேஷ், ''சேலத்தில் எங்களின் பழைய பேருந்து ஒன்றை வாங்கிச் சென்ற ஒரிஸாக்காரர் ஒருவர், அதன் தரத்தை பார்த்துவிட்டு, புதிதாக இரண்டு பேருந்துகளுக்கு ஆர்டர் தந்தார். ஒருமுறை கர்நாடகாவின் கார்ப்பரேஷன் பேருந்துகள் 200-க்கு பாடி கட்டும் ஆர்டரை பல்முனைப் போட்டிகளுக்கு இடையே நாங்கள் வென்றோம். கர்நாடகாவில் கொஞ்சம் அடிக்கும் நிறத்தில்தான் பேருந்துக்கு வண்ணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். நம்மவர்கள் மென்மையான நிறத்தைதான் அதிகம் விரும்புகின்றனர். அதே போல, மாநிலத்திற்கு மாநிலம் பல்வேறு வேறுபட்ட விருப்பங்கள் இருக்கின்றன. இவற்றைப் புரிந்துகொள்வது இந்தத் துறையில் வெல்வதற்கு அவசியம்'' என்றார்.

 

 

பேருந்து கட்டுமானப் பணியில் 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர் தங்கராஜ். கரூர் பஸ் பாடி பில்டர்ஸ் அசோசியேஷனின் தலைவர். அவரிடம் பேசியபோது, ''இந்தத் துறை நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கரூரில் ஐம்பது நிறுவனங்கள் வரை இருக்கின்றன. அரசு பேருந்துகளுக்கு அரசே பாடி கட்டிக்கொள்ளத் தொடங்கியிருப்பது பல நிறுவனங்களுக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், தமிழகம் முழுவதும் ஓடும் பஸ்களில் பெரும்பான்மையானவை கரூரில் கட்டப்பட்டவை என்பதில் எங்களுக்குப் பெருமை'' என்றார்.

TAGS :