சுப்ரோ பிராண்டில், 7 புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தியது மஹிந்திரா!
Posted Date : 13:02 (18/02/2017)Last updated : 13:02 (18/02/2017)

 

இந்தியாவின் யுட்டிலிட்டி வாகனப் பிரிவின் மார்க்கெட் லீடராக இருக்கும் மஹிந்திரா நிறுவனம், சுப்ரோ பிராண்டின் முற்றிலும் புதிய பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்ட மினி வேன், மினி டிரக், ஸ்கூல் வேன், சரக்கு வேன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்வாகனங்கள் அனைத்தும் BS - 4 மாசு விதிகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுப்ரோ மினிவேன் மற்றும் மினி டிரக் ஆகியவை, டீசல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களைக் கொண்டிருக்கின்றன. தவிர மேலே சொன்ன சுப்ரோ பிராண்ட் வாகனங்கள் அனைத்திலும் இருப்பது, ஒரே 2 சிலிண்டர், 909சிசி, DI டீசல் இன்ஜின்தான்.
 
இதில் மினி வேன், மினி டிரக், சரக்கு வேன் ஆகிய மாடல்களில், 26bhp பவர் - 5.5kgm டார்க் - 4 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் - 21.46கிமீ அராய் மைலேஜ் - 12 இன்ச் வீல் - ஹைட்ராலிக் ஸ்டீயரிங் - 70கிமீ டாப் ஸ்பீடு போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதுவே சுப்ரோ ஸ்கூல் வேன் என்றால், மற்ற வேரியன்ட்களுடன் ஒப்பிடும்போது, 45bhp பவர் - 9.8kgm டார்க் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் - 23.5கிமீ அராய் மைலேஜ் - 13 இன்ச் வீல் - பவர் ஸ்டீயரிங் - 95 கிமீ டாப் ஸ்பீடு என கூடுதல் திறனுடன் கவர்கிறது. MAKE IN INDIA கொள்கைக்கு ஏற்ப, சுப்ரோ பிராண்ட் வாகனங்கள் அனைத்தும், புனேவில் உள்ள மஹிந்திராவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. 

சுப்ரோ மினி டிரக்: 

 
டாடாவின் ஏஸ் உடன் போட்டியிடும் இது, 850 கிலோ எடையை சுமந்து செல்லும் திறனைக் கொண்டிருக்கிறது. சுப்ரோ மினி டிரக்கில் இருக்கும் ஃப்யூல் ஸ்மார்ட் - டிரைவ் பை வயர் ஆகிய தொழில்நுட்பங்கள் காரணமாக, 23.17கிமீ அராய் மைலேஜ் கிடைக்கிறது. இதன் ரூஃப் லைனிங் உடனான கேபின், காரில் இருப்பதுபோன்ற இடவசதி மற்றும் டேஷ்போர்டைக் கொண்டுள்ளதாக மஹிந்திரா கூறியுள்ளது. மேலும் மொபைல் சார்ஜிங் பாயின்ட், அட்ஜஸ்டபிள் சீட், ஃப்ளோர் மேட், பூட்டும் வசதி உடனான க்ளோவ் பாக்ஸ் எனப் பிராக்டிக்கலாகவும் இருக்கிறது சுப்ரோ மினி டிரக். முன்பக்கம் காயில் ஸ்ப்ரிங் மற்றும் பின்பக்கம் 7 பட்டைகளால் ஆன லீஃப் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் செட்-அப் இருப்பதால், சிறப்பான ஓட்டுதல் தரம் மற்றும் அதிக எடையைத் தாங்கும் திறன் கிடைக்கும் என நம்பலாம்.
 
2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இது, ஓட்டுனர் மற்றும் பயணியின் பாதுகாப்புக்காக LSPV பிரேக்ஸ், ELR சீட் பெல்ட், அதிக 1950மிமீ வீல்பேஸ், 0.9மிமீ தடிமனைக் கொண்ட ஷீட் மெட்டலால் உருவாக்கப்பட்ட மோனோகாக் சேஸி ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ஒரே வேரியன்ட் - 2 கலர்கள் - 2 வருடம்/60,000 கிமீ வாரன்டியுடன் கிடைக்கும் இந்த மினி டிரக்கின் சென்னை எக்ஸ் ஷோரும் விலை, 4.34 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்களைவிட அதிக மைலேஜைத் தருவதால், சுப்ரோ மினி டிரக்கை ஒருவர் 4 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்தால், 1.24 லட்ச ரூபாயை மிச்சப்படுத்த முடியும் என மஹிந்திரா கூறியுள்ளது. 

சுப்ரோ மினி வேன்:
 
 
டாடாவின் ஏஸ் மேஜிக் உடன் போட்டியிடும் இது, LX மற்றும் VX எனும் இரண்டு வேரியன்ட்களில், 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. LX வேரியன்ட்டில் Semi Hard Top இருக்க, VX வேரியன்ட் Hard Top-ஐக் கொண்டிருக்கிறது. மேலும் Closed Body கட்டுமானத்தைக் கொண்டிருக்கும் VX வேரியன்ட்டில், கூடுதல் பாதுகாப்புக்காக Side Impact Beam, Child Lock உடனான ஸ்லைடிங் டோர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இதுவே LX வேரியன்ட்டில் வழக்கமான கதவுதான் உள்ளது.
 
மற்றபடி இரண்டு வேரியன்ட்டிற்கும் பொதுவாக, டூயல் டோன் இன்டீரியர், மொபைல் சார்ஜிங் பாயின்ட், பூட்டும் வசதி உடனான க்ளோவ் பாக்ஸ், 8 பேருக்கான இடவசதி, LSPV பிரேக்ஸ், 806மிமீ ஓவர்ஹேங் உடனான முன்பக்கம் ஆகியவை இருக்கின்றன. 650 கிலோ எடையைச் சுமக்கும் திறன் கொண்டிருக்கும் இதன் சென்னை எக்ஸ் ஷோரும் விலை, 4.62 லட்சம் (LX) மற்றும் 4.76 லட்சம் (VX) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 2 வருடம்/60,000 கிமீ வாரன்டியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுப்ரோ சரக்கு வேன்:

 
மினி வேன் வகையிலேயே, கார்கோ பயன்பாட்டுக்குப் பிரத்யேகமாக வெளிவந்திருக்கும் முதல் டீசல் சரக்கு வேன் இதுதான் என மஹிந்திர பிரகடனப்படுத்துகிறது. 2330 லிட்டர் இடவசதி இருப்பதால், இ-காமர்ஸ் நிறுவனங்கள், சிறு/குறு தொழில் முனைவோர் ஆகியோரைக் குறிவைத்து இந்த வாகனம் களமிறங்கியிருப்பது புரிகிறது. கேபினுக்குள்ளே கார்கோ ஸ்பேஸ் மற்றும் ஓட்டுனர் - பயணிகளுக்கு இடையே இரும்பு க்ரில் கொண்ட தடுப்பு இருப்பதால், பொருட்கள் முன்னே வந்து விழாது என நம்பலாம்.
 
மேலும் சுப்ரோ மினி வேன் VX போல இதுவும் Closed Body கட்டுமானம், ஸ்லைடிங் டோர், LSPV பிரேக்ஸ், 806மிமீ ஓவர்ஹேங் உடனான முன்பக்கம், மொபைல் சார்ஜிங் பாயின்ட், பூட்டும் வசதி உடனான க்ளோவ் பாக்ஸ் எனப் பிராக்டிக்கல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் செமையாக ஸ்கோர் செய்கிறது சுப்ரோ சரக்கு வேன். வெள்ளை கலர் மற்றும் ஒரே வேரியன்ட்டில்தான் இது விற்பனைக்கு வந்துள்ளது. 700கிலோ எடையைச் சுமக்கும் திறன் படைத்த சுப்ரோ சரக்கு வேனின் சென்னை எக்ஸ் ஷோரும் விலை, 4.58 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்ரோ மினி வேன் போல, இதுவும் 2 வருடம்/60,000 கிமீ வாரன்டி கொண்டிருக்கிறது.

சுப்ரோ ஸ்கூல் வேன்:

 
சுப்ரோ பிராண்டில் உள்ள வாகனங்களிலேயே, மேக்ஸி வேனுக்கு அடுத்தபடியாக 26bhp/5.5kgm - 45bhp/9.8kgm பவர்/டார்க், 4/5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 12/13 இன்ச் வீல்கள் எனப் பல ஆப்ஷன்களுடன், பவர் ஸ்டீயரிங் உடன் கிடைக்கும் மாடல் இதுதான். 8 குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனம் என்பதால், இதன் பாதுகாப்பில் மஹிந்திரா அதிக கவனம் செலுத்தியுள்ளது தெரிகிறது. கதவு கண்ணாடிக்கு கிரில், முதலுதவி பெட்டி மற்றும் தீ அணைப்பான், Emergency Exit, Child Lock உடனான ஸ்லைடிங் டோர், 0.9மிமீ தடிமனைக் கொண்ட ஷீட் மெட்டலால் உருவாக்கப்பட்ட மோனோகாக் சேஸி, வேகக் கட்டுப்பாடு கருவி ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். மேலும் கேபினுக்குள்ளே, லஞ்ச் பேக் மற்றும் தண்ணிர் பாட்டில்களை வைப்பதற்குத் தனித்தனியே இடம் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.
 
Safe Eye தொழில்நுட்பம் இருப்பதால், குழந்தைகளின் பெற்றோருக்கு ஸ்கூல் வேன் வீட்டுக்கு அருகில் வரும்போதும், பள்ளிக்கூடத்தை எட்டிவிட்ட பிறகும் SMS சென்றுவிடும்; மேலும் ஸ்கூல் வேன் என்ன வேகத்தில் செல்கிறது, எங்கே இருக்கிறது போன்ற தகவல்களை, GPS வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். தவிர ஸ்கூல் வேனுக்குள்ளே நடப்பதை வீடியோவாகவும் பதிவு செய்ய முடியும்; இதனுடன் ஸ்கூல் வேன் அதிக வேகத்தில் சென்றாலோ, செல்ல வேண்டிய பாதையில் இருந்து தவறினாலோ, ஏதாவது விபத்து ஏற்பட்டாலோ, உடனடியாக பள்ளிக்கும், பெற்றோருக்கும் SOS மெசேஜ் சென்றுவிடுகிறது. இப்படி மாடர்ன் தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பான வாகனமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சுப்ரோ ஸ்கூல் வேனின் சென்னை எக்ஸ் ஷோரும் விலை, 5.15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 - ராகுல் சிவகுரு.