மீண்டும் உயரும் கார் விற்பனை!
Posted Date : 11:37 (09/03/2017)
Last Updated : 12:30 (09/03/2017)

 

பொதுவாகவே பிப்ரவரி - மார்ச் மாதம் என்றாலே, பரபரப்புக்குக் குறைவிருக்காது. நடப்பு நிதியாண்டு முடியும் தருவாயில், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல மகிழ்ச்சியில் திளைக்கும் நிலையில், ஒரேயொரு நிறுவனம் மட்டுமே சற்று வருத்தத்தோடு இருக்கிறது. வரலாற்று முக்கியம் வாய்ந்த "பண மதிப்பு நீக்கம்" கடந்த நவம்பரில் அமல்படுத்தப்பட்டதில் இருந்தே, ஆட்டோமொபைல் சந்தை கொஞ்சம் மந்தமான நிலையில்தான் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் விற்பனை எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், பல கார் நிறுவனங்கள் கணிசமான வளர்ச்சியைக் எட்டியுள்ளன. 

 
என்றென்றும் மவுசு குறையாத மாருதி சுஸூகி:
 
 

இந்திய ஆட்டோமொபைல் துறையின் "மாஸ் மாஸ்டர்" மாருதி சுஸூகி, இந்தாண்டு பிப்ரவரி மாத விற்பனையில் 11.7 % வளர்ச்சியைக் காட்டியுள்ளது. அதாவது, 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் மொத்தம் 1,08,115 கார்களை விற்பனை செய்திருந்த மாருதி சுஸூகி, இந்தாண்டு 1,20,599 கார்களை பிப்ரவரியில் விற்பனை செய்துள்ளது.
 
மாருதியின் மினி செக்மென்ட் ஹேட்ச்பேக் கார்களான ஆல்ட்டோ & வேகன்-ஆர் ஆகியவை விற்பனையில் 6.8% சரிவைக் கண்டிருந்தாலும், காம்பேக்ட் செக்மென்ட் கார்களான ஸ்விஃப்ட், டிசையர், பெலினோ ஆகியவை 9.4% வளர்ச்சியை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமில்லாமல், சரியாகக் கடந்தாண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விட்டாரா பிரெஸ்ஸா, அதற்குள்ளாகவே ஒரு லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. எனவே மாருதி சுஸூகியின் விற்பனை வளர்ச்சிக்கு, பிரெஸ்ஸா முக்கிய பங்காற்றியிருக்கிறது எனலாம். 

 
ஹுண்டாய்க்குக் கைகொடுத்த க்ரெட்டா:
 

2017 பிப்ரவரியில், ஹுண்டாயின் விற்பனை எண்ணிக்கை 4% வளர்ச்சியை எட்டியுள்ளது. அதாவது, 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் மொத்தம் 40,716 கார்களை விற்பனை செய்த ஹுண்டாய், இந்தாண்டு 42,327 கார்களை பிப்ரவரியில் விற்பனை செய்துள்ளது. கடந்த ஜூலை 2015-ல் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரெட்டா, இதுவரை 1.5 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. அதுவும் பிப்ரவரி 2017-ல் மட்டும் 9,002 க்ரெட்டா கார்கள் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கடந்தாண்டு பிப்ரவரியில் 9,013 கார்களை ஏற்றுமதி செய்த ஹுண்டாய், இந்தாண்டு பிப்ரவரியில் 10,407 கார்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 15.5 % வளர்ச்சியை எட்டியுள்ளது." நாளுக்கு நாள் மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்று ஹுண்டாய் வளர்ச்சி அடைந்துவருகிறது என்பதை இந்த விற்பனை எண்ணிக்கையின் வளர்ச்சி சதவீதம் உறுதிபடுத்துகின்றன" என்கிறார் ஹூண்டாய் இந்தியாவின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் ராகேஷ் ஶ்ரீவத்சவா. 

 
வளர்ச்சியில் ஹோண்டா:
 

கார் விற்பனையில் ஒட்டுமொத்தமாக 8.5% வளர்ச்சியைக் காட்டியிருக்கும் ஹோண்டா, உள்நாட்டு விற்பனையில் 9.4% வளர்ச்சியை எட்டியுள்ளது. ஏனெனில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் விற்பனையான 13,020 கார்களுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு பிப்ரவரியில் 14,249 கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.
 
அதேபோல ஏற்றுமதியிலும் 7.75% வளர்ச்சியை எட்டியுள்ளது ஹோண்டா. 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு எண்ணிக்கை, 10 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. வருகின்ற மார்ச் 16, 2017 அன்று WR-V கார் வெளியாக இருப்பதால், ஹோண்டாவின் விற்பனை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

 
டாடாவை தூக்கிவிடும் டியாகோ:
 

கடந்தாண்டு பிப்ரவரியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்த 10,728 கார்களிலிருந்து 1,544 கார்கள் முன்னேறி, இந்தாண்டு பிப்ரவரியில் 12,272 கார்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், 14.39% வளர்ச்சியை டாடா எட்டியுள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியிருப்பது டியாகோதான் என்று சொல்லப்படுகிறது. மேலும், டாடாவின் புது மாப்பிள்ளையான ஹெக்ஸாவும் கணிசமான வளர்ச்சிக்கு வித்திடுவதாகச் சொல்லப்படுகிறது. 

 
தெறிக்கும் க்விட், பறக்கும் ரெனோ:

 
இந்தாண்டு பிப்ரவரியில் 11,198 கார்களை விற்பனை செய்து, அதிகபட்சமாக 26% வளர்ச்சியை எட்டியுள்ளது ரெனோ. ஏனெனில் 2016 பிப்ரவரியில், 8,834 கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ரெனோவின் இந்த பரபரக்கும் வெற்றிக்கு முக்கிய காரணம், விற்பனை எண்ணிக்கையில் தெறிக்கும் க்விட் தான்! மேலும், இந்தியாவில் இன்னும் பலமாகக் காலூன்ற, க்விட்டை அடிப்படையாகக் கொண்டு Climber எனும் மாடலைக் களமிறக்க உள்ளதுடன், பலவித திட்டங்களையும் முன்வைத்து செயல்பட்டு வருகிறது இந்த பிரெஞ்ச் நிறுவனம். 

 
வளர்ச்சிப் பாதையில் ஃபோர்டு, நிஸான், டொயோட்டா:
 
 

2016 பிப்ரவரியில் விற்பனையான 5,483 கார்கள் என்றளவில் இருந்து முன்னேறி, இந்தாண்டு பிப்ரவரியில் 8,338 கார்களை விற்பனை செய்துள்ளது ஃபோர்டு. மற்ற நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது குறைவாக இருந்தாலும், உள்நாட்டு விற்பனையில் 20% வளர்ச்சியை எட்டியுள்ளது நிஸான். அதேபோல இந்தாண்டு பிப்ரவரியில் 11,543 கார்களை விற்பனை செய்து, 11.94% வளர்ச்சியை எட்டியுள்ளது "ஜப்பான் கிங்" டொயோட்டா. 

 
மஹிந்திரா & மஹிந்திரா:

 
இந்தியாவில் செயல்படும் பெரும்பாலான கார் நிறுவனங்கள் தமது விற்பனையில் வளர்ச்சியைக் காட்ட, மஹிந்திராவின் மாதாந்திர விற்பனை மட்டும் குறைந்திருக்கிறது. கடந்தாண்டு பிப்ரவரியில் விற்பனையான 41,348 எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு பிப்ரவரியில் 40,414 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது மஹிந்திரா. அதாவது 2% வீழ்ச்சியைக் கண்டுள்ளது இந்நிறுவனம். 
 
  - இரா. கலைச் செல்வன்.
 
 
TAGS :   MARUTI SUZUKI, HYUNDAI, HONDA, TATA MOTORS, RENAULT, FORD, NISSAN, TOYOTA, MAHINDRA, KWID, TIAGO, CITY, CRETA, BREZZA, PETROL,DIESEL