2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட க்விட் Climber கான்செப்ட் காரை, ஒரு வருடத்திற்குப் பிறகு தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது ரெனோ. 68bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டும் கிடைக்கும் இந்த காரின் அறிமுக டெல்லி எக்ஸ் ஷோரும் விலைகள், முறையே 4.30 லட்சம் (RXT (O) - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்) மற்றும் 4.60 லட்சம் (RXT (O) - 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமான க்விட் காருடன் ஒப்பிடும்போது, காரின் தோற்றம் மற்றும் கேபினில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றாலும், மெக்கானிக்கலாக எவ்வித மாறுதல்களும் இல்லை.
 
 
 
காரின் முன்பக்கத்தில், பனி விளக்கைச் சுற்றியிருக்கும் பகுதி வித்தியாசமாக இருப்பதுடன், ஆரஞ்ச் வேலைப்பாடுகளுடன் கூடிய மேட் சில்வர் ஸ்கஃப் பிளேட் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. 1.0 லிட்டர் இன்ஜின் கொண்ட க்விட்டின் பக்கவாட்டில் இருந்த கிராஃபிக்ஸ் இங்கே இல்லை; அதற்கு பதிலாக, Climber என காரின் முன்பக்க கதவு - விண்ட் ஷில்டில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியர் வியூ மிரர்கள், இண்டிகேட்டர்கள், ரூஃப் ரெயில் ஆகியவற்றில் ஆரஞ்ச் வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இதனுடன் க்விட்டிலே முதன்முறையாக, 6 ஸ்போக் அலாய் வீல், க்விட் Climber மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலுக்கு எனப் பிரத்யேகமாக, நீல நிறம் இருக்கிறது.
 
 
காரின் உட்புறத்தில், பல இடங்களில் ஆரஞ்ச் வேலைப்பாடுகள் வியாபித்திருக்கிறது. சென்டர் கன்சோல், ஏஸி வென்ட்கள், சீட் கவர், டோர் பேடுகள், ஸ்டீயரிங் வீல், கியர் லீவர் ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுதவிர ஹெட்ரெஸ்ட் மற்றும் ஸ்டீயரிங் வீலில்  Climber எனப் பொறிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைச் சுற்றி, புதிதாக க்ரோம் பட்டை ஒன்று உள்ளது.  வழக்கமான க்விட்டுடன் ஒப்பிடும்போது,  Climber மாடலின் விலை 25 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருக்கிறது. எனவே குறைந்த பட்ஜெட்டில், பக்காவான கிராஸ் ஓவர் டிஸைனில் அசத்தக்கூடிய கார் வேண்டும் என்பவர்களுக்கு, ரெனோவின் க்விட் Climber மாடல் சரியான சாய்ஸாக இருக்கும் என நம்பலாம். 

 - ராகுல் சிவகுரு.