4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில், நெக்ஸான் எனும் செக்ஸியான காரை இந்த ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது டாடா மோட்டார்ஸ். 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், முதன்முறையாகக் காட்சிக்கு வைக்கப்பட்ட நெக்ஸான் கான்செப்ட்டின் டிஸைனில் இருந்து உருவாகியிருக்கும் இந்த காரின் அகலமான க்ரில், DRL உடனான புரொஜெக்டர் ஹெட்லைட், கூபே போன்ற ரூஃப் லைன், LED டெயில் லைட், ரூஃப் ரெயில், 17 இன்ச் அலாய் வீல்கள் என கட்டுமஸ்தான தோற்றத்தில், அசப்பில் ரேஞ்ச் ரோவர் இவோக் போல படுஸ்டைலாக இருக்கிறது. ஃபோர்டு எக்கோஸ்போர்ட், மாருதி சுஸூகி விட்டாரா ப்ரெஸ்ஸா, மஹிந்திரா TUV 3OO கார்களுக்குப் போட்டியாக இந்த காம்பேக்ட் எஸ்யுவியைப் பொஷிசன் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
 
 
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நெக்ஸான் Prototype காரைக் காட்சிக்கு வைக்கப்பட்ட போது, பலரையும் ஆச்சரியப்படுத்தியது அறிந்ததே. இதனைத் தொடர்ந்து, தற்போது நடந்து கொண்டிருக்கும் 87வது ஜெனிவா மோட்டார் ஷோவில் நெக்ஸான் Geneva Edition காட்சிபடுத்தப்பட்டு உள்ளது. காம்பேக்ட் எஸ்யூவிகளிலே முதன்முறையாக, மல்ட்டி டிரைவ் மோடுகளை நெக்ஸானில் சேர்த்துள்ளது டாடா.
 
காரின் வெளிப்புறத்தைப் போலவே, உட்புறமும் தரமான மெட்டீரியல்களால் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள், என்றுமே இடவசதியில் சோடை போனது இல்லை. எனவே, தாழ்வான ரூஃப் கொண்டிருந்தாலும், உயரமானவர்களுக்கும் வசதியாக இருக்கும்படி பின்பக்க இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருப்பதும் ப்ளஸ்.
 
 
கிளைமேட் கன்ட்ரோல் ஏஸி, ரியர் ஏஸி வென்ட், 6.5 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் உடனான Harman ஆடியோ சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா என அதிக சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஜெஸ்ட் மற்றும் போல்ட் தயாராகும் அதே X1 ஃப்ளாட்ஃபார்மில் நெக்ஸான் தயாரிக்கப்பட உள்ளது. 110bhp பவரை வெளிப்படுத்தும் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜின், 105bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. சரியாகச் சொல்வதென்றால், தாமதமாகக் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டிற்குள் நுழைந்திருக்கும் டாடா, போட்டியாளர்களிடமிருந்து தனித்து தெரிவதற்காக மெனக்கெட்டிருப்பது காரைப் பார்க்கும் போதே புரிகிறது. தற்போது இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கும் நெக்ஸான், இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்திய சாலைகளில் தடம் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 
 - ராகுல் சிவகுரு.