2018 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்: ஜெனிவா மோட்டார் ஷோ ஸ்பெஷல்!
Posted Date : 11:48 (13/03/2017)
Last Updated : 11:55 (13/03/2017)

 

YSD எனும் புனைப் பெயரைக் கொண்டிருக்கும், முற்றிலும் புதிய ஸ்விஃப்ட் காரை, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 87வது ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தியுள்ளது மாருதி சுஸூகி. அடுத்த ஆண்டு துவக்கத்தில், இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஹேட்ச்பேக், பெலினோ மற்றும் இக்னிஸ் தயாரிக்கப்படும் அதே பிளாட்ஃபார்மின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் தயாரிக்கப்படுகிறது.
 
HEARTECT என்ற பெயரைக் கொண்ட அந்த பிளாட்ஃபார்ம், பெலினோ (890 கிலோ) மற்றும் இக்னீஸ் (825 கிலோ) ஆகிய கார்களைவிட எடை குறைவான மற்றும் திடமான கார்களைத் தயாரிக்கவல்லது என மாருதி சுஸூகி தெரிவித்துள்ளது. இதிலிருந்து வெளிவரும் முதல் காரான புதிய ஸ்விஃப்ட், பழைய காரைவிட 120 கிலோ எடை குறைவானதாக இருக்கிறது (840 கிலோ)!  எனவே கடந்த 2005-ல் இந்தியாவில் களமிறங்கிய முதல் தலைமுறை ஸ்விஃப்ட் காரின் அசத்தலான ஓட்டுதல் அனுபவத்தை, இந்த மூன்றாவது தலைமுறை ஸ்விஃப்ட் வழங்கும் என நம்பலாம். 

 
இந்தியா, ஜப்பான், ஹங்கேரி ஆகிய இடங்களில் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது 2018 ஸ்விஃப்ட்; இந்தியாவில் விற்பனைக்கு வரப்போகும் புதிய ஸ்விஃப்ட், ஐரோப்பியா மற்றும் ஜப்பான் போன்ற உலக கார் சந்தையில் இருக்கும் கார்களைப் போலவே இருக்கும். ஆனால் நம்மூர் சாலைகளுக்கு ஏற்ப காரின் கிரவுண்ட் கிளியரன்ஸ், சர்வதேச மாடலைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இது ஸ்விஃப்ட் காரின் தாழ்வான தோற்றத்தைப் பாதிக்குமே என கார் ஆர்வலர்கள் வருத்தப்பட்டாலும், அவர்களை சமாதானப்படுத்தும் விதமாக, LED DRL - டெயில் லைட், புரொஜெக்டர் ஹெட்லைட், C-பில்லரில் கதவு கைப்பிடி என முன்பைவிட அதிக சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது புதிய ஸ்விஃப்ட். மேலும் முன்பைவிட நீளத்தில் 20மிமீயும், உயரத்தில் 15மிமீயும் குறைந்திருந்தாலும், 20மிமீ கூடுதல் வீல்பேஸ் மற்றும் 40மிமீ கூடுதல் அகலத்தைக் கொண்டிருக்கிறது புதிய ஸ்விஃப்ட். மற்ற மாருதி கார்களைப் போலவே, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்கள், இந்த காரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

கேபினுக்குள்ளே இருக்கும் ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், பெரிய கிளைமேட் கன்ட்ரோல் டயல், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை செம ஸ்டைல் ரகம். காரின் பாதுகாப்புக்கு ABS, EBD, 2 காற்றுப்பை, ISOFIX ஆகியவை ஸ்டாண்டர்டாக இருப்பது வரவேற்கத்தக்கது. பூட் ஸ்பேஸும் முன்பைவிட 60 லிட்டர் அதிகரித்திருக்கிறது (265 லிட்டர்). இந்தியாவில் மாருதி சுஸூகியின் பிரிமியம் ஹேட்ச்பேக்காக இருந்துவந்த ஸ்விஃப்ட், கடந்த 2015-ல் வெளியான பெலினோவிடம் தனது இடத்தை இழந்தது.
 
ஆனால் 12 ஆண்டுகளாக, போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் கோலோச்சி வரும் ஸ்விஃப்ட் காருக்கு, ஒரு பக்காவான மாஸ் மார்க்கெட் வேல்யூ இருக்கிறது. எனவே அடுத்த ஆண்டில் 2018 ஸ்விஃப்ட் விற்பனைக்கு வரும்போது, அது வழக்கமான மாருதி சுஸூகி டீலர்களில்தான் விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது. இதற்கு இன்னோரு காரணமும் இருக்கிறது; பிரிமியமான நெக்ஸா டீலர்களின் எண்ணிக்கை 200 என்றால், வழக்கமான மாருதி சுஸூகி டீலர்களின் எண்ணிக்கை 1,000 என்பது கவனிக்கத்தக்கது! 
 

சர்வதேச மாடலில் பல இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், எது இந்தியாவுக்கு வரும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இருந்தாலும், தற்போதைய காரில் இருக்கும் அதே 4 சிலிண்டர் இன்ஜின் - கியர்பாக்ஸ்களுடன், புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் இந்நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களையும், 2018 ஸ்விஃப்ட் காரில் SHVS உடன் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.
 
சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் பின்னாளில் வரலாம். மேலும் பெலினோ RS போல, ஸ்விஃப்ட் Sport மாடல் ஒன்றையும் பின்னாளில் அறிமுகப்படுத்தும் முடிவில் இருக்கிறது மாருதி சுஸூகி. இதில் வெளிநாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் இன்ஜின் பொருத்தப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! தவிர இந்த மாடலை, நெக்ஸா ஷோரும்களின் வாயிலாக விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

 - ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   MARUTI SUZUKI, SWIFT, 2018, GENEVA MOTOR SHOW, DUALJET, MULTIJET, BOOSTERJET, HEARTECT, BALENO, INDIA, HYUNDAI, GRAND I10, PETROL, DIESEL, AMT, IGNIS, NEXA, RS