தள்ளுபடி விலையில் கிடைக்கும் சூப்பர் பைக்ஸ்!
Posted Date : 18:47 (16/03/2017)
Last Updated : 18:53 (16/03/2017)

 

நேக்கட் ஸ்ட்ரீட் பைக்குகளான Z250, ER-6n மற்றும் ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக்கான நின்ஜா 650R ஆகியவற்றின் மீது, 1 - 1.5 லட்ச ரூபாய் வரையிலான தள்ளுபடிகளை அள்ளி வீசியிருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த கவாஸாகி நிறுவனம். இவர்களைப் பார்த்துவிட்டு, மற்றோரு ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா சும்மா இருக்குமா? அவர்களும் தன் பங்கிற்கு, தனது ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக்கான CBR 650F-ல் ஒரு லட்ச ரூபாய் தள்ளுபடியை வழங்கியிருக்கிறது.
 
 
 
 
பல்ஸர், அப்பாச்சி, FZ, ஹார்னெட்டில் பறக்கும் இளைஞர்களின் ரூம்களில் போஸ்டர் பைக்குகளாகத் திகழும் இவை, இந்தளவு தள்ளுபடியில் கிடைக்க என்ன காரணம்? மத்திய அரசாங்கம், வருகின்ற ஏப்ரல் 1, 2017 முதலாக, BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய முடியும் என்ற அரசாணையைப் பிறப்பித்திருக்கிறது. ஆமாம், BS-IV என்றால் என்ன என்கிறீர்களா?

 
இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் வாகன மாசு அளவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அனைத்து வகை வாகனங்களுக்கான Bharat Stage மாசு விதிகளை, கடந்த மில்லினியம் ஆண்டான 2000-ல் அமல்படுத்தியது மத்திய அரசு. இதுவரை நான்கு முறை இந்த விதிகள் மேம்படுத்தப்பட்டு, தற்போது BS-IV என்றளவில் இவை உள்ளன.
 
 
 
 
கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா உட்பட 13 மெட்ரோ நகரங்களில் மட்டும், முதற்கட்டமாக நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே இந்த BS-IV மாசு விதிகள் பயன்பாட்டுக்கு வந்தன. 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள்ளாக, இரு சக்கர வாகனம் தொடங்கி லாரி, LCV போன்ற கனரக வாகனங்கள் உட்பட அனைத்து வகை வாகனங்களும், BS-IV மாசு விதிகளைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்ட வேண்டும் என்ற காலக்கெடு விதிக்கப்பட்டது. 
 
 
எனவே, ஏப்ரல் 1, 2017 முதலாக, இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான வாகனங்களும், BS-IV மாசு விதிகளுக்கு உட்பட்டதாக இருத்தல் கட்டாயமாகிறது. ஆக இந்தியா எங்கும் வியாபித்திருக்கும் வாகன டீலர்கள் அனைவரும், தன்வசம் வைத்திருக்கும் BS-III வாகனங்களை, இந்த மாத இறுதிக்குள் விற்பனை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
 
 
 
 
இதன் வெளிப்பாடாக, வாடிக்கையாளர்களைக் குறுகிய காலத்துக்குள் கவரும்படியாக, டீலர்கள் அந்தந்த வாகனத்துக்கு ஏற்ப, அதிரடியான தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது. மேலே சொன்ன வாகனங்கள அனைத்தும், அதன் வகையிலே சிறப்பான தயாரிப்புகளாக இருந்தாலும், அவற்றின் அதிக விலை காரணமாக, அதிக அளவில் விற்பனை ஆவதில்லை. பெரும்பணம் படைத்த ஆட்டொமொபைல் ஆர்வலர்களின் சாய்ஸாக மட்டுமே இருந்துவந்த இந்த பைக்குகள், தற்போது ஓரளவுக்குக் கட்டுபடியாகக்கூடிய விலையில் கிடைப்பதை, நிச்சயம் காலத்தின் கட்டாயம் என்றே சொல்ல வேண்டும்!

 
ஹோண்டாவின் CBR 250R மற்றும் கேடிஎம்மின் டியூக் சீரிஸ் பைக்குகளுக்குப் போட்டியாகக் களமிறங்கிய Z250, கடந்த ஆறு மாதத்தில் வெறும் 22 பைக்குகள் மட்டுமே விற்பனை ஆகியிருக்கிறது! ER-6n மற்றும் நின்ஜா 650R பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை, இதைவிட மோசமாக இருக்கிறது. இந்தியாவில் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளுக்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, தான் 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்திய CBR 650F பைக்கை, கடந்த 2015-ல் அறிமுகப்படுத்தியது ஹோண்டா. இது அறிமுகமான ஒரு மாதத்துக்கு உள்ளாகவே, இந்தியாவில் 50 பைக்குகளை விற்பனையாகிவிட்டன!
 
 
 
 
ஆனால் நாளடைவில் இது விற்பனையில் பின்தங்கிவிட்டது. இந்தியாவில் இருசக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் பஜாஜ் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஆகிய நிறுவனங்கள், இந்தியாவில்தான் விற்பனை செய்யும் இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்திவிட்டன. ஹோண்டா, சுஸூகி, டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள், தங்களது தயாரிப்புகளை ஒவ்வொன்றாக மேம்படுத்தி வருவதுடன், அதனை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டும் வருகின்றன. 

 
கவாஸாகி பைக்குகளைப் பொறுத்தமட்டில், ஒரு லட்ச ரூபாயைச் செலுத்தி, பைக்கை முன்பதிவு செய்வது அவசியம். பின்புதான் தேர்ந்தெடுத்த பைக், டீலரிடம் வருவதற்கு இரு வாரங்களாவது ஆகும். இந்த இடைப்பட்ட காலத்தில், மிதம் இருக்கும் தொகையை, EMI ஏதும் இல்லாமல் முழுதும் பணமாகச் செலுத்தினால் மட்டுமே, தள்ளுபடியுடன் இந்த சூப்பர் பைக்குகளை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, நின்ஜா 300R பைக்கை வாங்கும் முடிவில் இருப்பவர்கள், சுமார் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே அதிகமாகச் செலவழித்தால், நின்ஜா 650R பைக்கை இப்போது வாங்கமுடியும் என்பது பெரிய ப்ளஸ்!
 
 
 
 
ஆனால் மேலே சொன்ன பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட அல்லது அடுத்த தலைமுறை மாடல்களும், இந்தியாவில் இந்த ஆண்டில் களமிறங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதையும் நினைவில் கொள்ளவும். அதெல்லாம் சரி, இதெல்லாம் அப்படி இருக்கட்டும். தள்ளுபடியில் கிடைக்கும் சூப்பர் பைக்குகளின் விலை என்ன என்று கேட்கிறீர்களா?  (விலைகள் அனைத்தும் புனே ஆன் ரோடு)

கவாஸாகி Z250 - 3 லட்சம்  
கவாஸாகி ER-6n: 4.45 லட்சம் 
கவாஸாகி நின்ஜா 650R - 4.85 லட்சம் 
ஹோண்டா CBR 650F - 7.60 லட்சம்

என்ன விலைகளைப் பார்த்துவிட்டு, எனக்கு பஜாஜ் டொமினார் D400, கேடிஎம் டியூக் 390, ராயல் என்ஃபீல்டு க்ளாஸிக் 500 பைக்கே போதும் பாஸ் என்கிறீர்களா?
 
- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   HONDA, CBR 650F, KAWASAKI, Z250, ER-6N, NINJA 650, PUNE, MUMBAI, DELHI, SUPER BIKES, PARALLEL TWIN ENGINES, PETROL, BAJAJ, DOMINAR D 400, KTM, DUKE 390, 2017, BS-III, BS-IV, EMISSION NORMS, DISCOUNTS.