இந்தியாவில் முதன்முறையாக ஃபிசிட்டா 2018 - உலக ஆட்டோ மோட்டிவ் காங்கிரஸ்!
Posted Date : 11:03 (28/03/2017)Last updated : 11:03 (28/03/2017)

 

37-வது ஃபிசிட்டா (FISITA) உலக ஆட்டோமோட்டிவ் காங்கிரஸ், சென்னையில் வருகின்ற 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. எஸ்.ஏ.இ இந்தியா (SAE INDIA) மற்றும் ஃபிசிட்டா (FISITA) ஆகியவை SAE இன்டர்நேஷ்னல் ஆதரவுடன், இந்த 4 நாள் கருத்தரங்கம் மற்றும் சர்வதேச மாநாட்டினை சென்னை வர்த்தக மையத்தில் நடத்துகின்றன. “குறைந்த விலையில், நீடித்த இயக்கத்திற்கான நிலையான தொழில்நுட்பம்’’ (Disruptive Technologies for Affordable and Sustainable Mobility) என்பதே இந்த மாநாட்டின் முதன்மையான கருப்பொருளாகும்.

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் ஃபிசிட்டாவின் கௌரவ விருதைப் பெறவுள்ள முதல் இந்தியருமான டாக்டர். பவன் கோயங்கா அவர்கள் கூறுகையில், “1947 ஆம் ஆண்டு முதல் ஃபிசிட்டா உலக ஆட்டோ மோட்டிவ் கருத்தரங்கம் நடைபெற்றுவருகிறது. இத்துறையின் நிபுணர்கள் - பொறியாளர்கள் - நிர்வாக அதிகாரிகளை ஒன்றாக இணைத்து, ஆட்டோமோட்டிவ் துறையின் நடப்பு போக்குகள் குறித்த கருத்துக்களையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது. மேலும் ஆட்டோமோட்டிவ் துறையை தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்குப் பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. 37வது ஃபிசிட்டா உலக ஆட்டோமோட்டிவ் மாநாடு, சென்னையில் நடத்தப்படுவது குறித்து பெருமையடைகிறோம்.” என்றார்.
 
 
 

டாக்டர் கோயங்கா மேலும் கூறியதாவது: உலகம் முழுவதும் வாகனத் தொழில்துறை, கணிசமான மாற்றங்களை சந்தித்துவருகிறது. புதுமையான தொழில்நுட்பம் மற்றும் புதிய வியாபாரக் உக்திகள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படுவதால், தற்போதைய நிலைமையை இவை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம். தவிர இன்றைய காலகட்டத்தில் தொலைத்தொடர்பு, மின்மயமாக்கல், போக்குவரத்து ஆகியவற்றை பகிர்ந்துகொண்டு செயலாற்றும் நிலையில்தான் நாம் உள்ளோம். இதை மனதில்கொண்டு, இந்த மாநாட்டின் கருப்பொருள் அமைந்துள்ளது சிறப்பு. உலக நிபுணர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பதன் வாயிலாக, அனைவருக்கும் கட்டுப்படியாகக்கூடிய விலையில், நீடித்த வாகன இயக்கத்திற்கான எதிர்காலத்திற்கு ஒரு மேடையாக ஃபிசிட்டா அமைகிறது எனலாம். இம்மாநாட்டை இந்தியாவில், குறிப்பாக சென்னையில் நடத்துவதற்கு அனுமதி கிடைத்திருப்பது, உலகளவில் நம் நாட்டின் வாகனம் சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் வியாபாரம் அடைந்துள்ள வளர்ச்சியையே குறிக்கிறது.

ஃபிசிட்டா 2018 - வழிகாட்டுதல் குழுவின் தலைவர் டாக்டர். அரவிந்த் பரத்வாஜ் கூறுகையில், ''எஸ்ஏஇ இந்தியா (ஆட்டோமோட்டிவ் பொறியாளர்கள் சொசைட்டி) ஆனது, எஸ்ஏஇ இன்டர்நேஷனல் அமைப்பில் இடம் பெற்றுள்ள மிகப்பெரிய இணைப்பு சங்கமாகும். இந்த சங்கத்தில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்டோமோட்டிவ் துறையில் மிகக்பெரிய மாநாட்டினை வளர்ந்த நாடுகளில் இருந்து, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நடத்தும் வாய்ப்பினை, எஸ்ஏஇ இந்தியா வெற்றிகரமாக பெற்றுள்ளது. இந்தியாவில் ஆட்டோமோட்டிவ் தொழில்துறை வளர்ச்சியான சந்தையாக காணப்படுவதால், இந்த மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடமாக இந்தியா திகழ்கிறது'' என்று கூறினார்.
 
 
 

ஃபிசிட்டா 2018 - மாநாட்டு அமைப்பு குழுவின் தலைவர் திரு. என். பாலசுப்பிரமணியம் கூறுகையில், இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் உள்ள ஆட்டோமோட்டிவ் துறை நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தியாவில் இருந்து ஆயிரம் பிரதிநிதிகளும், சர்வதேச அளவில் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் இதில் பங்கேற்க உள்ளனர். எதிர்கால ஆட்டோமோட்டிவ் தொழில்துறைக்கு பயன்படும் வகையில், புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வகையிலான 500 ஆராய்ச்சிக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன. மேலும் இந்த கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து, 150க்கும் மேற்பட்ட கண்காட்சி அமைப்பாளர்கள் கலந்துகொண்டு, தங்களது புதிய தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்த உள்ளனர். 

எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள், வாகன ஓட்டுநர்களுக்கு உதவக்கூடிய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் வாகனங்கள், பாதுகாப்பு, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு உள்ளிட்டவை இந்த துறையின் சிறப்பம்சங்களாக உள்ளன. மென்பொருள், போட்டி மற்றும் திறன் ஆகியவை, ஆட்டோமோட்டிவ் தொழிலின் முதற்தேவையாக உள்ளன. ஆட்டோமோட்டிவ் தொழில் துறையில், வாகனங்கள் இயங்கும் போது, அதன் சேவையை ஒருங்கிணைத்தல், கடைசியாக வாகனத்தை பயன்படுத்தும் நுகர்வோருக்கு மதிப்புமிக்க பல சேவைகளை அளித்தல் ஆகிய பிரச்சனையில்லா தொழில்நுட்பங்கள், தற்போது இந்தத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பிரிவின் முக்கிய பகுதியாகவே மாறிவருகின்றது. பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட  நோக்கங்களுக்காக, வாகனத்தில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் போது, அவர்களுக்கு ஏற்படும் பல தேவைகளை நிறைவேற்ற வேண்டிய நிலையே உள்ளது. 
 
 
                                         
 

மாநாட்டின் கருப்பொருள் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. ஃபிசிட்டா 2018 பற்றி மேலும் அறிந்து கொள்ள, www.fisita-congress.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும். 

 - ராகுல் சிவகுரு.