உலகெங்கும் ராயல் என்ஃபீல்டு பைக் வைத்திருப்போரை பொருளாதாரச் சூழல், மதம், குடும்பக் கலாச்சாரம் போன்ற எந்த பாகுபாடும் இன்றி ஒன்றாகத் திரண்டு, பைக் ரைடு செல்வதே ''ONE RIDE''-ன் நோக்கம். 2010-ல் முதன்முறையாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது 7-வது சீஸனை எட்டியுள்ளது.
 
 
 
 
எப்போதும்போலவே ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் இந்த பைக் ரைடு, இம்முறையும் ஏப்ரல் 2, 2017 அன்று சென்னையில் 3 இடங்களில் நடைபெற்றது. ஒரே நேரத்தில், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுதும் இருக்கக்கூடிய 14 நாடுகளில் இருக்கக்கூடிய பிரதானமான 23 நகரங்களில், இத்தகைய ''ONE RIDE'' பைக் ரைடுகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அன்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
அதாவது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெல்போர்ன்னில் முதலில் தொடங்கப்பட்டு, அமெரிக்காவில் இருக்கும் மில்வாக்கி நகரத்தில் கடைசியாக ஆரம்பமானது. இந்தியாவில் பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டன. 
 
 
 

நாங்கள் சென்னை பெசன்ட் நகரில் இருக்கும் ராயல் என்ஃபீல்டு - பிராண்ட் ஸ்டோரில் நடைபெற்ற ''ONE RIDE 2017''-ல் பங்குபெற்றோம். பைக் ரைடுக்கான முன்பதிவு ஆரம்பமானது, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு என்றாலும், சுமார் 200-க்கும் அதிகமான ரைடர்கள் இதில் கலந்துகொண்டது, அவர்கள் தங்கள் பைக்கில் பயணம் செய்ய எவ்வுளவு விரும்புகிறார்கள் என்பதை உணர்த்தியது.
 
 
 
 
''ONE RIDE 2017''-க்கான பயண தூரம் மற்றும் பாதையாக, பிராண்ட் ஸ்டோரில் இருந்து, முதலியார்க்குப்பத்தில் இருக்கும் அயூர் ரெஸார்ட் வரையிலான 100கிமீ தூரம் நிர்ணயிக்கப்பட்டது. இதனை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சேல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், சர்வீஸ் பிரிவுத் தலைவரான ஷாஜி கோஷி, 7 மணிக்குக் கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.
 
 
 
 
ஒரே நேரத்தில் அனைவரும் கிளம்பாமல், குழுக்களாகவே ரைடர்கள் தங்களது பயணத்தைத் தொடங்கினர். ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட், க்ளொவ்ஸ், காலுக்கான பேடு, ஷூ சகிதம் பாதுகாப்பு உபகரணங்களுடன் அனைத்து ரைடர்களும் இதில் பங்கேற்றனர். 
 

 
 
மேலும் அவர்கள் தொடர்ச்சியாகப் பயணிக்காமல், ஆங்காங்கே நிறுத்தி புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்கள். குழுக்களாகப் பயணிக்கும்போது, அவர்கள் மற்றவர்களுக்கு இடையூறாக இல்லாமல் சாலை விதிகளைப் பின்பற்றினர்.
 
 
 
 
இப்படிப்பட்ட ''ONE RIDE''-ல் பங்கேற்க, நீங்கள் கான்டினெட்டல் ஜீடி, ஹிமாலயன், எலெக்ட்ரா, புல்லட், தண்டர்பேர்டு ஆகிய ராயல் என்ஃபீல்டு தயாரிப்புகளில் ஏதாவது ஒன்றின் உரிமையாளராக இருத்தல் அவசியம். இதற்கான முன்பதிவு தொகை வெறும் 300 ரூபாய்தான் என்பது பெரிய ப்ளஸ்!
 
 
 
 
எனவே புத்தம்புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகளை வைத்திருந்தோரும், இந்த பைக் ரைடில் மகிழ்ச்சியாகக் கலந்துகொண்டனர். பெசன்ட் நகர் தவிர, ராயல் என்ஃபீல்டின் OMR - பிராண்ட் ஸ்டோர் மற்றும் பூந்தமல்லியில் இருக்கும் அரவிந்துஜா மோட்டார்ஸில் இதே  ''ONE RIDE 2017'' நடத்தப்பட்டது.
 
 
 
 
முன்னதாக, ரைடில் கலந்துகொண்ட அனைவருக்கும், பைக் ரைடின் பாதை, பயண விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து விளக்கப்பட்டது. 

 
 - ராகுல் சிவகுரு.