கடந்த ஒரு வாரமாகவே, BS-III & BS-IV பற்றித்தான் நாடெங்கும் ஒரே பேச்சு! இந்தியா முழுவதும் மீதமிருந்த BS-III டூ-வீலர்கள், கமர்ஷியல் மற்றும் கனரக வாகனங்கள் என மொத்தம் 8.24 லட்சம் வாகனங்களை, மார்ச் 30-31, 2017 ஆகிய இரண்டு நாட்களில் விற்றுத் தீர்த்தன வாகன உற்பத்தியாளர்கள். இந்நிலையில், தாங்கள் ஆகஸ்ட் 2015 முதலே குறைந்த அளவுகளில் BS-IV வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டதுடன், கடந்த மார்ச் 2017 முதலாக BS-IV வாகனங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாகவும், இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான BS-IV வாகனங்களை விற்பனை செய்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது பாரத் பென்ஸ் - டெய்ம்லர் நிறுவனம்.
 
 
 
 
மேலும் அதில் 200 லட்சத்துக்கும் அதிகமான கிமீ தூரத்தை தமது வாடிக்கையாளர்கள் பயணித்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. குறிக்கப்பட்ட காலக்கெடுக்குவுக்கு முன்னதாக, அதாவது ஏப்ரல் 1, 2017-க்கு முன்பாகவே சுற்றுச்சூழலுக்கு உகந்த BS-IV வாகனங்களை பாரத் பென்ஸ் - டெய்ம்லர் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கிவிட்டதால், 9 டன் முதல் 49 டன் வரையிலான பல்வேறு அளவுகளில்தான் தயாரித்துவரும் வாகனங்களைப் போதுமான இடைவெளியில் BS-III-ல் இருந்து, SCR தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, BS-IV விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்த முடிந்தது எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
 
 
 
 
BS-III வாகனங்களைக் கைவசம் வைத்திருந்த இவர்களின் போட்டியாளர்கள், சுமார் 35 சதவிகித தள்ளுபடி கொடுத்ததாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. பல மில்லியன் கிமீக்கு பரிசோதனை செய்யபட்ட பின்பே, இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. எனவே கடந்த நவம்பர் 2016 முதலாகவே BS-IV வாகனங்களுக்குக் கேரளா மாறிவிட்டது கவனிக்கத்தக்கது. தாங்கள் தயாரித்திருக்கும் BS-IV வாகனங்கள், BS-III வாகனங்களைவிட அதிக மைலேஜ் தருவதாக வாடிக்கையாளர்கள் கூறியதாகவும் பாரத் பென்ஸ் - டெய்ம்லர் நிறுவனம் சார்பில் சொல்லப்படுகிறது.
 
 
 
 
கடந்த 2016-ம் ஆண்டில், பணமதிப்பு நீக்கம் ஏற்பட்டாலும் 13,081 வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்திருக்கிறது பாரத் பென்ஸ் - டெய்ம்லர் நிறுவனம். மேலும் 130-க்கும் அதிகமான சேல்ஸ் & சர்வீஸ் சென்டர்களைத் தொடக்கிவிட்ட இந்நிறுவனம், 40 ஆயிரத்துக்கும் அதிகமான BS-III வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 7,500 வாகனங்கள் மற்றும் 35 மில்லியன் உதிரிபாகங்கள் ஆகியவை, இந்தியாவிலிருந்து ஜப்பான் - ஐரோப்பியா - அமெரிக்கா - பிரேசில் - இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு பாரத் பென்ஸ் - டெய்ம்லர் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
ஓரகடத்தில் தொழிற்சாலையை வைத்திருக்கும் இந்நிறுவனம், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 50 ஆயிரம் வாகனங்களைத் தயாரித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2017 முதலாக,GST மற்றும் டிரக்குகளுக்கே உரித்தான விதிமுறைகள் புழக்கத்தில் வர உள்ளன. இதில் ஏபிஎஸ், ஏஸி ஆகியவை டிரக்குகளில் கட்டாயமாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்!
இப்படி மூன்று வருடங்களில் அசூர வளர்ச்சியைப் பெற்றிருக்கும் பாரத் பென்ஸ் - டெய்ம்லர் நிறுவனம், தற்போது அடுத்த தலைமுறைக்கான கனரக வாகனங்களை விரைவில் களமிறக்க உள்ளது.
 
 
 
 
இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் 16 முதல் 49 டன் வரையிலான அளவுகளில்தான் தனது புதிய வாகனங்கள் வெளிவரப்போவதாகச் சொல்லப்படுகிறது. 2012 முதலாக இந்தியாவில் 90 சதவிகித உள்ளூர் பாகங்களுடன், ஏஸி கேபினுடன் கூடிய தரமான வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்யும் பாரத் பென்ஸ் - டெய்ம்லர் நிறுவனம், மிட்சுபிஷியின் FUSO நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளதை இங்கு சொல்லியாக வேண்டும். எனவே புதிய புரொடக்‌ஷன் லைனின் உதவியுடன், 9 டன் வரை சுமக்கக்கூடிய FUSO டிரக்கை வெளியிட இருக்கிறது பாரத் பென்ஸ் - டெய்ம்லர் நிறுவனம்.
 
 
 
 
பின்பு கவாஸாகியின் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் E-Canter எனும் எலெக்ட்ரிக் டிரக்கை, இந்தாண்டில் அறிமுகப்படுத்தும் முடிவில் இந்நிறுவனம் உள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் காரணமாக, ஒருமணி நேரத்துக்குள்ளாகவே சுமார் 80 சதவிகித பேட்டரியைச் சார்ஜ் செய்துவிட முடிகிறது; மேலும் 3 டன் எடை வரை சுமந்து செல்லக்கூடிய திறனைக் கொண்டிருக்கிறது E-Canter. இந்தியாவில் டீசல் வாகனங்களுக்கான வரவேற்பு குறைந்து வருவதனாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களைத் தயாரிக்கும் எண்ணத்திலும், இந்த E-Canter வாகனத்தை பாரத் பென்ஸ் - டெய்ம்லர் நிறுவனம் வெளியிட இருக்கிறது. 
 
 
 

 
 
 
 - ராகுல் சிவகுரு.