2017 ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், புல்லட் 500 பைக்கில் என்ன ஸ்பெஷல்?
Posted Date : 21:47 (07/04/2017)
Last Updated : 21:54 (07/04/2017)

 

 

 

கடந்த ஒரு வாரத்தில், இந்தியா முழுவதும் BS-III மற்றும் BS-IV விதிகள் பற்றித்தான் ஒரே பேச்சு! என்னதான் BS-III-ல் இருந்து BS-IV-க்கு மாறுவதற்கு, டூ-வீலர்களைத் தயாரிப்பவர்களுக்கு ஒரு வருடம் காலக்கெடு வழங்கப்பட்டது. என்றாலும், ஏப்ரல் 1, 2017-க்கு முந்தைய இரு நாட்களில்தான் (மார்ச் 30 - 31, 2017), தங்கள் கைவசம் இருந்த BS-III டூ-வீலர்களை அதிக தள்ளுபடியில் நிறுவனங்கள் விற்றுத்தீர்த்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், ராயல் என்ஃபீல்டு - பஜாஜ் போன்ற ஒருசில டூ-வீலர் தயாரிப்பாளர்கள் மிகச் சரியாகச் செயல்பட்டார்கள். ஆனால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தைப் பொறுத்தவரை, குறைவான தயாரிப்பு - அதிக டிமாண்ட் இருந்ததாலேயே இது சாத்தியமானது கவனிக்கத்தக்கது.
 
 
 
 
எனவே அந்த நிறுவனம் BS-IV டூ-வீலர்களைத் தயாரிக்கத் தொடங்கியதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கார்புரேட்டர் கொண்ட 350சிசி மாடல்கள் (புல்லட் 350, எலெக்ட்ரா 350, கிளாஸிக் 350, தண்டர்பேர்டு 350) மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் (EFI) இருக்கும் 500சிசி மாடல்கள் (கிளாஸிக்  500, தண்டர்பேர்டு 500, கான்டினென்ட்டல் ஜிடி) ஆகியவை, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் (AHO) மற்றும் BS-IV விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்ட இன்ஜின் ஆகியவை பொருத்தப்பட்டது. எனவே இந்த பட்டியலில் விடுபட்டிருந்த ஹிமாலயன் மற்றும் புல்லட் 500 பைக்கிலும், BS-IV மாடலைத் தற்போது களமிறக்கி இருக்கிறது ராயல் என்ஃபீல்டு. மேலே சொன்ன பைக்குகளைப் போலவே, இதிலும்  ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் (AHO) மற்றும் கார்புரேட்டருக்குப் பதிலாக ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் இடம்பெற்றுள்ளன.
 
 
 

இந்தியாவின் விலைகுறைவான அட்வென்ன்சர் பைக் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான ஹிமாலயன் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் ஏர் & ஆயில் கூல்டு - 411சிசி இன்ஜினில் இருக்கும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தினால், இது வெளிப்படுத்தும் பவர் (24.5bhp@6,500rpm) மற்றும் டார்க்கில் (3.2kgm@4,250rpm) மாற்றம் இல்லை; ஆனால் முன்பைவிட 1.1bhp அதிக பவர் மற்றும் 0.4kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது புல்லட் 500. அதுவும் கார்புரேட்டர் கொண்டிருந்த பழைய பைக்கைவிட, முறையே 150rpm மற்றும் 200rpm அதிகமாக அது ஓட்டுனருக்குக் கிடைக்கிறது. தவிர முன்பைவிட 10மிமீ குறைவான வீல்பேஸ், 20மிமீ கூடுதல் அகலம், 1 கிலோ அதிக எடை என 2017-ம் ஆண்டுக்கான BS-IV புல்லட் 500 பைக்கின் அளவுகளிலும் மாற்றங்கள் தென்படுகின்றன.
 
 
 
 
எனவே அதிக எடையுள்ள இந்த இரண்டு பைக்கின் பெர்ஃபாமென்ஸில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், பழைய பைக்குடன் ஒப்பிடும்போது EFI காரணமாக இன்ஜினின் பவர் - டார்க் டெலிவரி கொஞ்சம் ஸ்மூத்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ராயல் என்ஃபீல்டு இணையதளத்தில் இந்த மாற்றங்கள் அப்டேட் செய்யப்பட்டிருந்தாலும், எவ்வித அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை இல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது.  ஆனால் அனைத்து ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலையும் அதிகரித்திருப்பதே, மேலே சொன்ன மாற்றங்கள் அதில் இருப்பதை உணர்த்திவிடுகிறது.
 
 
 
 
தனது டாப் செல்லிங் பைக்கான கிளாஸிக் சீரிஸில் புதிய கலர்களை அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்டு, தனது மற்ற பைக்குகளில் அதனை செய்யாதது வியப்பாக இருக்கிறது! BS-IV இன்ஜின் பொருத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை ஏற்கனவே துவங்கிவிட்டது. என்றாலும் மேம்படுத்தப்பட்ட ஹிமாலயன் மற்றும் புல்லட் 500 பைக்கின் விற்பனை, அடுத்த மாதத்தில்தான் துவங்கும் எனத் தகவல்கள் வருகின்றன. இதனால் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கே உரித்தான குணங்களைக் கொண்ட பைக் எனும் புகழை, அதன் ஆர்வலர்களிடம் பெற்றிருந்த புல்லட் 500 பைக், அந்த வரவேற்பை இனிவரும் காலங்களிலும் பெறுமா என்பது போகப் போகத்தான் தெரியும்!  
 
 
 
 
இங்கே BS-IV எப்படியோ, USA - UK போன்ற வெளிநாடுகளில் இருப்பது யூரோ-IV (EURO-IV) விதிகள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. எனவே அதற்கேற்ப தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளில் (USA, UK) விற்பனை செய்யப்படும் தமது பைக்குகளில் பின்பக்க டிஸ்க் பிரேக், ஏபிஎஸ், ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் ஆகியவற்றைப் பொருத்தியிருந்தது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். ஆனால் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் (EFI) தவிர மற்ற விஷயங்கள் எதுவும், இந்தியாவில் தமது போட்டியாளர்களைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பைக்குகளில் இல்லாதது மைனஸ்தான்! 
 

 – ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   ROYAL ENFIELD, HIMALAYAN, BULLET 500, EFI, INDIA, BS-IV, EMISSION NORMS, TWO WHEELERS, 5 SPEED GEARBOX, AIR COOLING, DISC BRAKE, SINGLE CYLINDER ENGINE, UPDATE, BAJAJ, YAMAHA.