தனது முதல் தலைமுறை டிரக்குகளை அறிமுகப்படுத்தி, 5 ஆண்டுகளே நிறைவடையாத நிலையில், BS-IV விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் 9 - 49 டன் வரையிலான அடுத்த தலைமுறை கனரக பயன்பாட்டிற்கான (Haulage - Construction - Tractor) டிரக்குகளைத் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது பாரத் பென்ஸ். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், முன்பைவிட அதிக மைலேஜ், பாதுகாப்பு, பே லோடு, பராமரிப்புச் செலவுகள் ஆகியவை இருந்தாலும், பழைய BS-III விலையிலேயே BS-IV டிரக்குகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பதுதான்!
 
 
 
 
''Profit Technology'' என்ற கோட்பாடிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய டிரக்குகள், இந்தியாவில் இருக்கக்கூடிய டிரக் வாடிக்கையாளர்களின் தொழிலுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதுடன், தனது வகையிலேயே சிறந்த டிரக்குகளான இவை, கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்கவை என டெய்ம்லர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் Eric Nesselhauf கூறினார். மீடியம் பயன்பாட்டிற்கான டிரக்குகள், கடந்தாண்டிலேயே அப்டேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
 

கடந்த மார்ச் 2017 மாதம் வரையில், ஆயிரத்துக்கும் அதிகமான BS-IV டிரக்குகளை விற்பனை செய்துள்ளது பாரத் பென்ஸ் நிறுவனம்; அவை மட்டுமே 42 லட்சத்துக்கும் அதிகமான கிமீ தூரம் பயணித்திருக்கின்றன எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. தமது வாடிக்கையாளர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதுடன், BS-III எரிபொருளில்கூட BS-IV விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட டிரக்குகள் பிரச்னையின்றி இயங்கியதாகவும் சொல்லப்படுகிறது.
 
 
 
 
கடந்த 10 ஆண்டுகளாக டெய்ம்லர் நிறுவனத்தின் தயாரிப்புகளில் புழக்கத்தில் இருக்கக்கூடிய Selective Catalytic Reduction (SCR) எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாரத் பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை BS-IV விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு வந்த இந்நிறுவனத்தின் BS-IV டிரக்குகள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிமீ தூரம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே விற்பனைக்கு வந்திருக்கிறது. மாசைக் குறைக்க, Exhaust Gas Recirculation (EGR) தொழில்நுட்பத்தையே போட்டியாளர்கள் பயன்படுத்திவருகின்றனர். 
 
 
 

ஆனால் தனது பிரத்யேக AdBlue எனும் யூரியாவை அடிப்படையாகக் கொண்ட திரவத்தை, எக்ஸாஸ்ட்டில் ஸ்பிரே செய்வதன் வாயிலாக, NOx மாசு அளவுகளைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது பாரத் பென்ஸ் நிறுவனம். இந்த SCR தொழில்நுட்பம் இன்ஜினில் இருந்து தனித்து இயங்குவதற்கு, கொஞ்சுண்டு டீசல் மட்டுமே செலவாகும் என்பதால், AdBlue-வை நிரப்ப குறைவான இடைவெளியே போதுமானது. நாடெங்கும் இருக்கும் தனது 130 டீலர்களில் இந்த AdBlue கிடைக்கும் என இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
 
 
 
 
பழைய BS-III டிரக்குடன் ஒப்பிடும்போது, ஏரோடைனமிக்ஸ் - உராய்வு - பாகங்கள் - எடை போன்றவற்றில் முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் அதிக நாட்கள் நீடித்து உழைக்கக்கூடிய விதமான கிளட்ச் மற்றும் பிரேக் லைனிங், அதிகரிக்கப்பட்ட ஆயில் மாற்றும் இடைவெளி, டிஃப்ரன்ஷியல் லாக் ஆன் ஆகியிருப்பதைத் தெரிவிக்கும் பஸர், 400 கிலோ அதிகரிக்கப்பட்டுள்ள பே லோடு என BS-IV டிரக்கின் பராமரிப்புச் செலவுகளைக் குறைக்கும்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 
 
 
 

கடந்த 2012-ல் பாரத் பென்ஸ் இந்தியாவில் அறிமுகமான போதே,  பாதுகாப்புக்குப் பெயர் பெற்றன பாரத் பென்ஸ் டிரக்குகள் என்பது கவனிக்கத்தக்கது; தற்போது டிரக்குகளுக்கான பாதுகாப்பு அம்சங்களின் அடுத்த கட்டத்தை அந்நிறுவனமே எட்டியிருக்கிறது. ஓட்டுனர்களின் அயர்ச்சியைக் குறைக்கக்கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஏஸி, LED DRL உடனான ஹெட்லைட், இவ்வுளவு பெரிய வாகனத்தை எளிதாக பார்க் செய்ய உதவக்கூடிய டிஸ்பிளே உடனான ரிவர்ஸ் கேமரா, அதிக ஆயுளைக் கொண்டிருக்கும் டியூப்லெஸ் டயர்கள், டீசல் டேங்க்கில் இருக்கக்கூடிய டீசலைத் திருட்டிலிருந்து பாதுகாக்கக்கூடிய கருவி, க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட ஸ்டீல் கேபின், ஏபிஎஸ் பிரேக்ஸ் என பட்டியல் நீள்கிறது.
 
 
 
 
டிரக்கின் வெளிப்புறத்தில் இருக்கும் அகலமான க்ரில், பாடி கலரில் இருக்கக்கூடிய பம்பர்கள், பிரிமியமான தோற்றம் ஆகியவை பாரத் பென்ஸ் டிரக்குகளுக்கே உரித்தான விஷயங்கள் இங்கும் தொடர்கின்றன. டிரக்கின் உட்புறத்தில், கூடுதல் சொகுசிற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளின்மீது, தேவைப்பட்டால் துவைத்துக் கொள்ளக்கூடிய ஃபேப்ரிக் கவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆல் பிளாக் கேபினில், ஆங்காங்கே மர வேலைப்பாடுகள் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ProServ வசதியைக் கொண்டிருக்கும் இந்த டிரக்குகள், Base - Premium எனும் இரு வேரியன்ட்களில் கிடைக்கின்றன. 

 - ராகுல் சிவகுரு. படங்கள் - தே. அசோக் குமார்.