50 லட்சம் வரை விலையைக் குறைத்தது லேண்ட் ரோவர்!
Posted Date : 12:33 (20/04/2017)
Last Updated : 12:41 (20/04/2017)

 

டாடாவுக்குச் சொந்தமான லேண்ட் ரோவர் நிறுவனம், ப்ரிமியம் லக்ஸூரி எஸ்யூவிகளைத் தயாரிப்பதில் பெயர் பெற்றது. இந்நிறுவனம் இங்கு விற்பனை செய்யும் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் இவோக் ஆகியவை, உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படுகின்றன. இதுவே வெளிநாட்டில் இருந்து CBU முறையில் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் பிராண்டின் கீழ், விலை அதிகமான ஸ்போர்ட் மற்றும் வோக் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
 
 
 
 
தற்போது பிரக்ஸிட் (ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரேட் பிரிட்டன் வெளிவந்தது) காரணமாக, சர்வதேச அளவில் அந்நாட்டின் கரன்ஸியான பவுண்ட்டின் மதிப்பு குறைந்துள்ளதால், தான் தயாரிக்கும் எஸ்யூவிகளின் விலைகளைக் கணிசமாகக் குறைத்துள்ளது லேண்ட் ரோவர் நிறுவனம். டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் இவோக் ஆகியவை, முறையே 4 லட்சம் மற்றும் 3 லட்சம் ரூபாய் குறைந்திருக்கிறது.  இதுவே ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் என்றால்  30 லட்சமும், ரேஞ்ச் ரோவர் LWB வோக் என்றால் 50 லட்ச ரூபாயும் முன்பைவிடக் குறைவு!
 
 
 
 
ரேஞ்ச் ரோவர் நிறுவனத்தின் பெர்ஃபாமென்ஸ் எஸ்யூவியான SVR-ன் விலையும் 37 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. எனவே ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ, வால்வோ எனப் போட்டியாளர்களைவிட விலை அதிகம் என்ற விமர்சனத்துக்குத் தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது லேண்ட் ரோவர். இவோக்கில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட்டில் புதிய 2.0 லிட்டர் Ingenium சீரிஸ் டீசல் இன்ஜின் சேர்க்கப்பட்டதைத் தவிர இந்தாண்டில் எந்த புதிய வாகனத்தையும் இதுவரை களமிறக்கவில்லை என்ற குறைபாட்டிற்கும், வெலர் எஸ்யூவி மூலம் பதில் சொல்லியிருக்கிறது லேண்ட் ரோவர்.
 
 
 
 
இது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் 2018 ஆட்டோ எக்ஸ்போவில், ஐந்தாம் தலைமுறை டிஸ்கவரி எஸ்யூவியுடன் அறிமுகப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! ஏனெனில் லேண்ட் ரோவர் நிறுவனம், தனது இந்திய வலைதளத்தில் வெலர் எஸ்யூவி பட்டியலிடப்பட்டுள்ளதே இதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. ரேஞ்ச் ரோவர் பிராண்டின் கீழ், நான்காவது எஸ்யூவியாகப் பிரகடனப்படுத்தப்படும் வெலர், இவோக் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகிய எஸ்யூவிகளுக்கு இடையே பொசிஷன் செய்யப்படும் எனத் தெரிகிறது.
 
 
 
 
ஜாகுவாரின் F-Pace தயாரிக்கப்படும் அதே அலுமினிய IQ பிளாட்ஃபார்மில்தான் வெலர் எஸ்யூவியும் தயாரிக்கப்படுகிறது என்பதால், ப்ரிமியம் லுக்கும் - சூப்பர் பெர்ஃபாமென்ஸும் கியாரண்டி! இவோக் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் ஆகிய எஸ்யூவிகளில் உள்ள அதே இன்ஜின்கள்தான் வெலர் எஸ்யூவியிலும் இடம்பெறுகின்றன. கடந்தாண்டு உலகளவில் 6.22 லட்சம் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்திருக்கும் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் இவோக் ஆகிய எஸ்யூவிகளின் புதிய விலைகள் (டெல்லி எக்ஸ் ஷோரும்) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு;
 
 
 

ரேஞ்ச் ரோவர் LWB 3.0 வோக் (டீசல்): 1.7 கோடி ரூபாய் (பழைய விலை: 2.2 கோடி ரூபாய்)
ரேஞ்ச் ரோவர் 3.0 S ஸ்போர்ட் (டீசல்): 88 லட்சம் ரூபாய் (பழைய விலை: 1.16 கோடி ரூபாய்)
டிஸ்கவரி ஸ்போர்ட் 2.0 SD4 Pure (டீசல்): 43.80 லட்சம் ரூபாய் (பழைய விலை: 47.59 லட்சம்)
டிஸ்கவரி ஸ்போர்ட் 2.0 SD4 HSE (டீசல்): 57.16 லட்சம் ரூபாய்
இவோக் 2.0 SD4 Pure (டீசல்): 45.85 லட்சம் ரூபாய்  (பழைய விலை: 49.10 லட்சம் ரூபாய்)
இவோக் 2.0 SD4 HSE Dynamic (டீசல்): 61.40 லட்சம் ரூபாய்

 - ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   LAND ROVER, RANGE ROVER, INDIA, JAGUAR, TATA MOTORS, BREXIT, GREAT BRITAIN, EUROPEAN UNION, EVOQUE, VOGUE, SPORT, SVR, PRICE CUT, POUND VALUE, DROPPED, INGENIUM, DIESEL, ENGINES, TURBO PETROL, 4 CYLINDERS.