ஹூண்டாயின் காம்பேக்ட் செடான் காரான எக்ஸென்ட், அறிமுகமாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 3,000 கார்கள் விற்பனை ஆகிறது என்றாலும், அதில் 30 சதவிகிதம் டாக்ஸி மார்க்கெட்டில் என்பது கவனிக்கத்தக்கது. இதன் முக்கிய போட்டியாளரான மாருதி சுஸூகி டிஸையர், மாதத்துக்கு சராசரியாக 15,000 கார்கள் விற்பனை ஆகிறது! டிஸையர் தவிர ஃபோர்டு ஆஸ்பயர் & ஸ்போர்ட், ஹோண்டா அமேஸ், டாடா ஜெஸ்ட் & டிகோர், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ எனப் பலமுனைத் தாக்குதலையும் சமாளிக்க வேண்டும்!
 
எனவே சொந்தப் பயன்பாட்டிற்காகக் கார் வாங்குபவர்களைக் கவரும்படி, எக்ஸென்ட்டின் தோற்றத்தில் பல மாறுதல்களைச் செய்து மறுஅறிமுகப்படுத்தியுள்ளது ஹூண்டாய். எனவே i10 ஃபேஸ்லிஃப்ட்டில் காணப்படும் அகலமான அறுகோண வடிவ க்ரோம் க்ரில், LED டே டைம் ரன்னிங் லைட்ஸ், மேம்படுத்தப்பட்ட ஹெட்லைட் & பனி விளக்குகள், புதிய முன்பக்க பம்பர், புதிய 15 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை எதிர்பார்த்தபடியே இதிலும் இடம்பெற்றுள்ளன.
 
 
 
 
மேலும் எக்ஸென்ட்டின் பின்பக்கம், போட்டியாளர்களைவிடச் சிறிதாகத் தெரிகிறது என்ற கூற்றை மாற்றும்படியாக பெரிய டெயில் லைட், புதிய டெயில் கேட் மற்றும் ரிஃப்ளெக்டர்கள் உடனான பின்பக்க பம்பர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. காருக்குள்ளேயும் புதிய விஷயங்கள் தென்படுகின்றன. ஆப்பிள் கார் ப்ளே - ஆண்ட்ராய்ட் ஆட்டோ - சாட்டிலைட் நேவிகேஷன் - மிரர் லிங்க் - வாய்ஸ் கமாண்ட் போன்ற லேட்டஸ்ட் கனெக்விட்டி வசதிகளைக் கொண்டிருக்கும் புதிய 7 இன்ச் டச் ஸ்கிரீன், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, இருக்கைகளுக்குப் புதிய ஃபேப்ரிக், Shark Fin Antenna, Alternator Management System (AMS) ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
 
காரின் பாதுகாப்புக்காக அனைத்து வேரியன்ட்டிலும் 2 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக அளிக்கபடுவதுடன், டாப் வேரியன்ட்களான SX & SX(O)-வில் மட்டுமே ஏபிஎஸ் உள்ளது. இந்த காம்பேக்ட் செடானில் இருக்கும் 1.2 லிட்டர் Kappa பெட்ரோல் இன்ஜின், கூடுதல் மைலேஜுக்காக ரி-ட்யூன் செய்யப்பட்டுள்ளது (அராய் மைலேஜ் - 20.14 கிமீ). கிராண்ட் ஐ10 ஃபேஸ்லிஃப்ட்டைத் தொடர்ந்து, முற்றிலும் புதிய 1.2 லிட்டர் CRDi டீசல் இன்ஜின், எக்ஸென்ட் ஃபேஸ்லிஃப்ட்டிலும் அறிமுகமாகி இருக்கிறது.
 
 
 
 
75bhp பவர் - 19kgm டார்க் - 25.4 கிமீ அராய் மைலேஜை இது வெளிப்படுத்துகிறது. இது முன்பு இருந்த 1.1 லிட்டர் டீசல் இன்ஜினைவிட 3bhp பவர் - 1kgm டார்க் மட்டுமே அதிகம். இந்நிலையில், புதிய மூன்றாவது தலைமுறை டிஸையர் காம்பேக்ட் செடானின் புக்கிங் அதிகாரப்பூர்வமாகத் துவங்கிவிட்டதுடன், அது அடுத்த மாதத்தில் களமிறங்குவதற்கான சாத்தியங்களும் அதிகம்! 
ஹூண்டாய் நிறுவனம், டிஸையர் விஷயத்தில் மாருதி சுஸூகி பின்பற்றும் அதே பாணியை, எக்ஸென்ட்டில் செய்திருக்கிறது.
 
அதாவது புதிய மாடல் விற்பனைக்கு வரும்போது, பழைய மாடலின் தயாரிப்பை நிறுத்தாமல், அதனை அப்படியே டாக்ஸி மார்க்கெட்டுக்கு ஏற்ப ரி-பொசிஷன் செய்வதே ஆகும். எனவே பழைய எக்ஸென்ட்டின் தயாரிப்பு, டாக்ஸி மார்க்கெட்டுக்காகத் தொடரும் எனத் தெரிகிறது. 2 வருடம்/Unlimited கிமீ வாரன்டி - 5 கலர்கள் & வேரியன்ட்கள் - 5 ஸ்பீடு மேனுவல்/4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் எக்ஸென்ட் ஃபேஸ்லிஃப்ட்டின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலைகள் பின்வருமாறு; 
 
 
 

1.2 லிட்டர் Kappa பெட்ரோல்:

Xcent 1.2 Kappa E MT - 5.38 lakh

Xcent 1.2 Kappa E+ MT - 5.93 lakh

Xcent 1.2 Kappa S MT - 6.29 lakh

Xcent 1.2 Kappa S AT - 7.09 lakh

Xcent 1.2 Kappa SX MT - 6.74 lakh

Xcent 1.2 Kappa SX (O) MT - 7.52 lakh
 

1.2 லிட்டர் CRDi டீசல்: 

Xcent 1.2 U2 E MT - 6.28 lakh

Xcent 1.2 U2 E+ MT - Rs 6.83 lakh

Xcent 1.2 U2 S MT - Rs 7.19 lakh

Xcent 1.2 U2 SX MT - Rs 7.64 lakh

Xcent 1.2 U2 SX (O) MT - Rs 8.42 lakh
 

- ராகுல் சிவகுரு.