16 டன் இன்டர்சிட்டி பஸ்களை அறிமுகப்படுத்தியது பாரத் பென்ஸ்!
Posted Date : 21:58 (26/04/2017)
Last Updated : 22:22 (26/04/2017)

 

 

 

ஏப்ரல் 1, 2017 முதலாக, இந்தியாவில் BS-IV மாசு விதிகளுக்கு ஏற்புடைய வாகனங்களை மட்டுமே, அனைத்து விதமான வாகன உற்பத்தியாளர்களும் தயாரித்து விற்பனை செய்யவேண்டும் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. கடந்த 2017 மார்ச் மாதம் வரையில், ஆயிரத்துக்கும் அதிகமான BS-IV டிரக்குகளை இந்தியாவில் விற்பனை செய்திருந்த பாரத்பென்ஸ் நிறுவனம், கடந்த 2015-ம் ஆண்டின் இறுதியில்தான் முதன்முதலாக பஸ்கள் தயாரிப்பில் இறங்கியது.
 
அவை கல்லூரி, அலுவலகம், டூரிஸ்ட் பயன்பாட்டுக்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. எனவே புறநகரங்களுக்கிடையே சொகுசாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்யும் வகையில், 43+1 இருக்கைகளுடன் கூடிய புதிதாக 16 டன் பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் பாரத்பென்ஸ் முன்பு களமிறக்கிய பஸ், 9 டன் செக்மென்ட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
தற்போது 16 டன் எடைப்பிரிவில் வெளியிடப்பட்டிருக்கும் இன்டர்சிட்டி பஸ், சிறப்பான அம்சங்களுடன் 12 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இதில் SCR - AdBlue - BS-IV தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் 6.4 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி, பஸ்ஸின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது 238 bhp பவர் - 85 kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது.
 
இத்தகைய மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள், இந்திய சாலைகளில் 42 லட்சம் கிமீ தூரமும், உலகளவில் 8 பில்லியன் கிமீ தூரமும் ஏற்கனவே பயணித்திருக்கின்றன. இந்த 16 டன் பஸ்ஸின் உள்கட்டமைப்பை பொறுத்தவரையில், ஒவ்வொரு சொகுசான இருக்கைக்கும் இடையில் 790 மிமீ இடைவெளி -  தீயணைப்பான் கருவி - அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஏசி வென்ட் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
 
 
 
அனைத்து வித சாலைகளிலும் சொகுசாகப் பயணிக்கும் வகையில், முன்பக்க - பின்பக்க வீல்களுக்கு ஆன்ட்டி ரோல் பார் உடனான டெலிஸ்கோப்பிக் ஏர் சஸ்பென்ஷன் (Glide Suspension) பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் லேட்டஸ்ட்டான AIS-031 CMUR எனப்படும் பஸ் பாதுகாப்பு கோடிங் முறையைப் பின்பற்றி, இந்த ஏரோடைனமிக்கான இன்டர்சிட்டி பஸ்ஸின் அலுமினிய பாடி - Cast Metal-ஆல் உருவாக்கப்பட்ட லேடர் ஃப்ரேம் எனும் உறுதியான கட்டுமானத்தில் வெல்டிங் உபயோகப்படுத்தாதது கவனிக்கத்தக்கது.
 
தீப்பிடிக்கும் தன்மையற்ற போன்ற மெட்டீரியல்கள், Plywood - Vinyl Flooring, வழுக்கும் தன்மையற்ற ரூஃப் லேயர் என பஸ்ஸின் கேபின் அமைந்திருக்கிறது. மேலும் இதன் வெளிப்புற கட்டமைப்பு, மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் எந்த பகுதி விபத்தில் சேதமானாலும், மீண்டும் அதனை உடனடியாக அப்படியே புதியது போல மாற்றிக் கொள்ளலாம்.
 
 
 
 
பென்ஸின் கனரக வாகனங்களுக்கே உரிய AdBlue எனும் யூரியாவை அடிப்படையாக கொண்ட திரவத்தை, எக்ஸாஸ்டில் ஸ்பிரே செய்வதன் மூலம், NOx மாசு அளவுகளைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது பாரத் பென்ஸ். இதனுடன் செலக்டிவ் கேட்டலிட்டிக் ரிடக்ஷன் தொழில்நுட்பம், இன்ஜினில் இருந்து தனித்து இயங்கினாலும், மாசு அளவுகளைக் கணிசமாகக் குறைக்கிறது. 
 
இது இயங்குவதற்கு 380 லிட்டர் டீசல் டேங்க்கில் இருந்து சிறிதளவில் டீசல் மட்டுமே செலவாகும் என்பதால், 60 லிட்டர் AdBlue டேங்க்கை நிரப்புவதற்கு, மிகக்குறைவான இடைவெளி போதுமானதாக உள்ளது. நாடெங்கும் இருக்கும் தனது 130 டீலர்களிடம் இந்த AdBlue கிடைக்கும் என பாரத் பென்ஸ் தெரிவித்துள்ளது. வசதியான டிரைவிங் பொசிஷனுக்காக, ஸ்டீயரிங்கை டில்ட் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியும் என்பது ப்ளஸ்.
 
 
 
 
இன்ஜின் ஆயிலையும், கியர்பாக்ஸ் ஆயிலையும் 1,00,000 கிமீக்கு ஒருமுறை மாற்ற வேண்டிய அளவுக்கு பெரிய சர்வீஸ் இன்டர்வல்; ஒட்டுநரின் சோர்வைக் குறைக்கக்கூடிய (TCD - Turning Circle Diameter) உடனான ஹைட்ராலிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் ஹைட்ராலிக் கிளட்ச், LED DRL உடனான ஹெட்லைட், நீடித்து உழைக்கக்கூடிய  295/80 R22.5 டியூப்லெஸ் டயர்கள், அகலமான பிரேக் லைனிங்குடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்ஸ், அதிக மைலேஜ்;
 
சிறப்பான ஃபிட் & ஃபினிஷுடன் கூடிய கேபின், குறைவான (NVH - Noise, Vibration, Harshness) அளவுகள், 22 இன்ச் LCD டிவி, CD/DVD பிளேயர், Amplifier - ஸ்பீக்கர் செட் அப் என இது ஒரு பக்காவான தயாரிப்பாக இருக்கிறது. இதனுடன் GPS, CCTV கேமரா, LED போர்டு போன்றவற்றைப் பொருத்துவதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ARAI கொடுத்திருக்கும் பஸ்ஸின் சாய்வு நிலையின் அளவு 28 டிகிரி ஆகும்.
 
 
 
 
ஆனால், இந்த 16 டன் இன்டர்சிட்டி பஸ், 46 டிகிரி அளவு சாய்வு நிலையில் கூட அலைபாயாமல் பயணிக்கும் தன்மை கொண்டிருக்கிறது. இந்த பெரிய பஸ்ஸின் டர்னிங் ரேடியஸ், ஜஸ்ட் 19.4 மீட்டர்தான் மக்களே!

 
 - துரை. நாகராஜன், ராகுல் சிவகுரு. 
 - படங்கள்: சொ. பாலசுப்ரமணியன்.
 
 
TAGS :   BHARAT BENZ, INDIA, GERMANY, SCR, ADBLUE, BS-IV, TRUCKS, BUSES, HEAVY COMMERCIAL VEHICLES, 6 CYLINDER DIESEL ENGINE, 6 SPEED GEARBOX, 44 SEATS, AC, ABS, TCD, ALUMINIUM, CAST METAL, LADDER FRAME, VINYL FLOOR, FIRE RESISTANT ANTI SKID LAYER, HYDRAULIC CLUTCH AND STEERING, AIR SUSPENSION, ANTI ROLL BAR, ARAI, AIS-031, BUS BODY CODE, SAFETY.