கியா ஆந்திராவில் தொழிற்சாலையைத் தொடங்க, இதுதான் காரணம்!
Posted Date : 19:05 (10/05/2017)Last updated : 20:05 (10/05/2017)

 

 

 

மாருதி சுஸூகிக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் ஹூண்டாயின் குழும நிறுவனங்களில் ஒன்றான கியா மோட்டார்ஸ், நீண்ட காலமாக இந்திய கார் சந்தையைக் கவனித்துவந்தது. தற்போது ஒரு வழியாக, ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அனந்தாபூரில், தனது தொழிற்சாலையைக் கட்ட அந்நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. சுமார் 7,050 கோடி ரூபாய் முதலீட்டில், 536 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகும் அந்தத் தொழிற்சாலை;
 
2019-ம் ஆண்டின் பிற்பாதியில் கார்களை உற்பத்திசெய்யத் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்திசெய்யக்கூடிய வகையில், கியா மோட்டார்ஸின் தொழிற்சாலை கட்டமைக்கப்படும் எனவும், முதற்கட்டமாக 40 சதவிகிதம் வரையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்கள் கார் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
 
 
 
 
'தமிழக அரசியல்வாதிகள் அதிகமாக லஞ்சம் கேட்டதன் விளைவாகவே, தென்கொரியாவைச் சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம், தமிழகத்தில் தனது தொழிற்சாலையை அமைக்கவில்லை' என தொழிலதிபர் கண்ணன் ராமசாமி, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போதைய தமிழக அரசியலின் சூழ்நிலை மற்றும் கியா மோட்டார்ஸ் நிறுவனம், தமிழகத்தில் தொழிற்சாலையை அமைக்காதது குறித்து, தொழிலதிபர் கண்ணன் ராமசாமியின் ஃபேஸ்புக் பதிவு பின்வருமாறு, ''இந்தப் பதிவை, மிகுந்த மனவருத்தத்துடனேயே பதிவிடுகிறேன்.
 
 
 
 
 
தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாயின் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ், தமிழகத்தில் தனது தொழிற்சாலையைத் தொடங்கவே விரும்பியது. ஏனெனில், ஹூண்டாயின் கார் தொழிற்சாலை, ஶ்ரீபெரும்புதூரில் இருந்ததே இதற்கான காரணம். கியா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு, நாங்கள் ஆலோசகர்களாக இருந்தோம். அப்போது தமிழகத்தின் ஒரகடம் முதல் சாய்ஸாகவும், அதன் பிறகு குஜராத்தின் சனந்த் - ஆந்திராவின் ஶ்ரீசிட்டி ஆகிய இடங்களை, கியாவுக்குப் பரிந்துரை செய்தோம். தமிழகத்தில் இருக்கும் ஒரகடம் சிப்காட்டில், அவர்களுக்குத் தேவையான நிலம் இருந்தது.
 
 
 
 
ஆனால் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள், குறிப்பிட்ட நிலத்தின் மதிப்பைவிட 50 சதவிகிதத்துக்கு மேலான தொகையை லஞ்சமாகக் கேட்டனர். மேலும் வரி விலக்கு, மின் கட்டணத் தள்ளுபடி, சாலை வசதி உள்ளிட்டவற்றையும் கியா மோட்டார்ஸ் நிறுவனம் கேட்டது. அதற்கும் தனியாக, அரசியல்வாதிகள் பெரும் தொகையை லஞ்சமாகக் கேட்டனர். இதனால்தான் கியா மோட்டார்ஸ் நிறுவனம், ஆந்திரப்பிரதேசத்தைத் தேர்வுசெய்தது. ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, அந்நிறுவனத்துக்குத் தேவையான வசதிகளைச் சிறப்பான முறையில் ஏற்படுத்திக்கொடுத்தார்.
 
 
 
 
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தை தமிழகத்துக்குக் கொண்டுவருவதற்கு, நாங்கள் சுமார் இரண்டு ஆண்டுகளாக உழைத்தோம். ஆனால் எல்லாம் தற்போது வீணாகி விட்டது. தமிழ்நாட்டில் இதேநிலை தொடரும் என்றால், நம் மாநிலம் தொழில்துறை வளர்ச்சியில் கடைசி இடத்தையே பிடிக்கும்; தவிர எனக்குக் குடியரசுத்தலைவர் ஆட்சியிலும் விருப்பம் இல்லை. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை வைத்துப் பார்க்கும்போது, சில காலம் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு,
 
 
 
 
தமிழகத்தை முழுவதுமாகச் சீரமைக்கவேண்டிய கட்டாய, ஏற்பட்டுள்ளது. ஆகமொத்தத்தில், தமிழ்நாடு வெறும் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை மட்டும் இழக்கவில்லை; ஏராளமான இளைஞர்களின் வேலை வாய்ப்புகளையும் ஒருசேர இழந்துள்ளது என்றே சொல்லலாம். நான் எதுவும் செய்ய இயலாமல். தலைகுனிந்து நிற்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு, தமிழக அரசியல்வாதிகளுக்குக் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 - ராகுல் சிவகுரு.