காரில் டூர் போகப் போறிங்களா?: இங்க போக மறக்காதீங்க!
Posted Date : 21:54 (15/05/2017)
Last Updated : 17:14 (17/05/2017)

 

விடுமுறைக் காலத்தில் பயணம் அல்லது டூர் என்பது, குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் மனநிறைவைத் தரக்கூடிய விஷயமாகும். அதுவும் இந்த கோடை நேரத்தில் வெளியே செல்வது, எவ்வுளவு கடினமானது தெரியுமா? ஆனால் நண்பர்களுடனோ, குடும்பத்துடனோ ஒருசேர காரில் செல்வதற்கு, இந்தியாவில் இருக்கக்கூடிய குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையைக் கொண்ட இடங்களின் பட்டியலே இந்த கட்டுரை!
 
இவற்றில் மலைச்சாலைகள், நீளமான நெடுஞ்சாலைகள், பசுமையான சூழல் மட்டுமே, ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரமுடியும் என்றில்லை; கீழே நீங்கள் பார்க்கப்போகும் சாலைகள் அனைத்தும், நகரத்து நெரிசல், சத்தம், மாசு அளவுகளில் இருந்து ஓரளவுக்கு விலகி இருப்பதே அவற்றின் சிறப்பம்சம்!


மூனார் - ஊட்டி: 240 கிமீ

உத்தேச பயண நேரம்: 6 மணி, 30 நிமிடங்கள்
 
 

 
 
உலகின் மிகச் சிறந்த சாலைகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தமிழ்நாட்டையும் கேரளாவையும் பசுமையாகத் தொட்டுச் செல்கிறது. காடுகளினூடே செல்லும் சாலைகள், முகத்தில் அறையும் மழைச்சாரல் உடனான காற்று என நீலகிரியில் ரசிக்கக்கூடிய விஷயங்கள் அதிகம். ஆனால் இந்த மலைச்சாலையில் கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது;
 
அதுதான் குறுகலான சாலையிலும் வேகமாக பேருந்துகளை ஓட்டும் டிரைவர்கள்! கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அலுவா ரயில் நிலையம் ஆகியவை, தேவைக்கேற்ப போக்குவரத்தத் தேவைகளைப் பார்த்துக் கொள்கின்றன. தொட்டபெட்டா மலை, பைக்காரா அருவி, இந்த பாதையில் நாம் மிஸ் செய்யக்கூடாத சுற்றுலா தளங்கள் ஆகும்!


மணலி - ஶ்ரீநகர்: 900 கிமீ

உத்தேச பயண நேரம்: 21 மணி, 15 நிமிடங்கள்
 
 
 

பயண ஆர்வலர்களின் 'மெக்கா' என்றழைக்கப்படும் இந்த சாலை, வருடத்தில் சில மாதங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்! ஏனெனில் சில நேரங்களில், சீரான சாலையாக அம்பி போல இருக்கும் இது, பல நேரங்களில் கரடுமுரடானதாக ''ரோட்டக் காணோம்'' என்ற அளவுக்கு அந்நியனாக  மாறிவிடுவதே இதற்குக் காரணம்! மேலும் ஆளை உறைய வைக்கக்கூடிய குளிர் மற்றும் சாலையின் உயரம் ஆகியவை, ஒருசிலருக்கு அசொளகரியத்தை ஏற்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும் மக்களே!
 
இயற்கையின் அழகை அப்படியே ரசிக்கக்கூடிய வாய்ப்பு, இந்த 4 நாள் பயணத்தில் கிடைப்பது கேரன்ட்டி; ஆனால், பிரமிக்க வைக்கும் ஹிமாலய மலைப்பகுதி மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடிய டிரெக்கிங் போன்ற பயண அனுபவம் ஆகியவை, அனைவருக்கும் ஏற்றதாக இருக்குமா என்பதை கவனத்தில் கொள்ளவும்! பாங்காங் ஏரி, லே - லடாக், ஶ்ரீநகர், சங்கராச்சாரியா மலைப்பகுதி ஆகியவை, நீச்சயம் பார்க்கவேண்டிய இடங்கள் ஆகும். புன்டர் விமான நிலையம், குலு/ஜோகிந்தர் நகர் ரயில் நிலையம் ஆகியவை இருப்பது ப்ளஸ்!


ஜெய்சால்மர் - பிக்கானெர்: 300 கிமீ

உத்தேச பயண நேரம்: 4 மணி, 45 நிமிடங்கள்
 
 
 

இந்தியாவின் வேகமான சாலைகளில் சில, ராஜஸ்தானில் இருக்கின்றன. இந்த NH15 சாலையில் முதன்முறையாகப் பயணிப்பவர்கள், ராஜஸ்தானின் உணவு மற்றும் கலாச்சாரத்தை வழியிலேயே தெரிந்துகொள்ளலாம். மேலும் ராஜஸ்தானுக்கே உரித்தான மணல் மேடுகள் தவிர, பழம்பெரும் கோட்டைகள் மற்றும் கோயில்களை, சீரான சாலைகளில் ரசித்தபடியே செல்லலாம்.
 
ஜுனாகார்க் கோட்டை, கஜ்னெர் ஏரி, பிக்கானெர் ஏரி, பிக்கானெர் ஆகியவற்றைப் பார்க்க மறவாதீர்கள் மக்களே! ஜெய்சால்மரில் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது.


டெல்லி - நைநிடால்: 310 கிமீ

உத்தேச பயண நேரம்: 6 மணி, 30 நிமிடங்கள் 
 

 
 
இந்தியாவில் ஏரிகளின் பிறப்பிடமாகக் கைக்காட்டப்படும் இடம் இதுதான். இயற்கையின் காதலர்களுக்கு உகந்த இடமாக இருக்கும் நைநிடாலின் பரந்த சாலைகள், உத்தரகாண்ட் மாநிலத்தின் புறநகர்ப்பகுதிகனூடே செல்கின்றன. பசுமையான இந்த இடத்திற்குச் செல்வதற்கு, மார்ச் முதல் ஜூன் மாதம் சரியான நேரம். படகு பயணம், மீன் பிடித்தல், டிரெக்கிங்,  மலை ஏற்றம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு, நைநிடால் சிறந்த இடமாக இருக்கிறது. 


டெல்லி - முசொரி: 281 கிமீ

உத்தேச பயண நேரம்: 5 மணி, 30 நிமிடங்கள்
 

 
 
அனைத்து வயதினருக்கும் ஏற்ற, உத்ராஞ்சலில் இருக்கக்கூடிய மலைப்பிரதேசம்தான் முசொரி. எனவே டிரெக்கிங் - மலை ஏற்றம் தொடங்கி, ஜாலியாக நடப்பது வரை, இயற்கையின் அழகை ரசித்தபடியே செல்லமுடியும் என்பது ப்ளஸ். மேலும் குளிர்ச்சியான காற்றைச் சுவாசித்துக் கொண்டே, மனதுக்கும் உடலுக்கும் ஒருசேர ரிலாக்ஸான அனுபவத்தைத் தரவல்லது முசொரி.


டெல்லி - சிம்லா: 350 கிமீ

உத்தேச பயண நேரம்: 7 மணி நேரம்
 

 
 
தமிழகத்துக்கு ஊட்டி எப்படியோ, டெல்லிக்கு சிம்லா அப்படி; அழகான மலைகள், பெரிய பள்ளத்தாக்குகள் வழியே பயணத்தின் அலுப்பே தெரியாத அளவுக்கு மனதைக் கவர்வது உறுதி! பெரும்பாலான நேரங்களில் சாலைகள் சரியாக இருக்கும் என்றாலும், ஜிரக்புர் - பர்வானூ இடையேயான பாதை, கொஞ்சம் கரடுமுரடாகத்தான் இருக்கும். சிம்லா சென்றவுடன் செய்ய வேண்டிய முதல் வேலை என்னவென்றால், பார்க்கிங் வசதியுடன் கூடிய ஹோட்டலில் ரூம் போடுவதுதான்!
 
ஏனெனில், சிம்லாவை நடைப் பயணத்தின் போதுதான் ரசிக்கமுடியும் என்பதுடன், சாலைகள் நெரிசல்மிக்கவையாக இருப்பதும் ஒரு காரணம்; கையில் கேமரா இருந்தால், மறக்காமல் மால் ரோடு பகுதிக்குச் செல்லுங்கள் - அங்கே பிரிட்டிஷ் காலத்து இந்தியாவின் சுவடுகள் இன்னும் மீதமிருக்கின்றன மக்களே! வழக்கமான பைக்கிங் மற்றும் சுற்றிப்பார்ப்பதைத் தவிர,  ஏதாவது சாகசப் பயணம் செய்ய விரும்பினால், இயற்கையின் சூழலில் இருக்கும் மஷொபிராவுக்கு மறவாமல் விசிட் அடியுங்கள்.


டெல்லி - தர்மசாலா: 518 கிமீ

உத்தேச பயண நேரம்: 10 மணி, 30 நிமிடங்கள்
 

 
 
சிறிய நகரமான இது, தூய்மையான காற்றுக்கும் - ஆரோக்கியமான சூழலுக்கும் பெயர் பெற்றது. குடும்பத்துடன் செல்பவர்களைவிட, நண்பர்கள் அல்லது மனதுக்கு நெருக்கமானவர்களுடன் செல்வதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது தர்மசாலா! ஆன்மீகமும், இயற்கையும் ஒருசேர இருக்கும் இந்த நகரம், ஓரளவுக்கு நல்ல சாலைப்பரப்பைக் கொண்டிருக்கிறது. 
 

 - ராகுல் சிவகுரு.
 
 
 
 
TAGS :   TOUR, TRAVEL, INDIA, CAR, FRIENDS, RELATIVES, FAMILY, DELHI, OOTY, MUNNAR, MANALI, SRINAGAR, JAISALMER, BIKANER, NAINITAL, MUSOURI, SIMLA, DHARMASALA, SAFETY.