5.45 லட்சத்துக்குக் களமிறங்கியது, 2017 மாருதி சுஸூகி டிசையர்!
Posted Date : 16:57 (16/05/2017)
Last Updated : 17:04 (16/05/2017)


முற்றிலும் புதிய டிசையர் காம்பேக்ட் செடானின் டெஸ்ட்டிங் பணிகள் முடிவுபெற்ற நிலையில், இன்று அதனை 5.45 - 9.49 லட்சத்துக்கு (சென்னை எக்ஸ் ஷோரும் விலைகள்) அறிமுகப்படுத்தியது மாருதி சுஸூகி. இந்தியாவில் காம்பேக்ட் செடான்களின் விற்பனையில் பெரிய முன்னேற்றம் இல்லையென்றாலும், டாடா டிகொர் - ஃபோர்டு ஆஸ்பயர் S - ஹூண்டாய் எக்ஸென்ட் என தொடர்ச்சியாக புதிய அல்லது மேம்படுத்தப்பட்ட மாடல்கள் வரிசையாகக் களமிறங்கிய வண்ணம் உள்ளன.
 
எனவே இந்த செக்மென்ட்டின் டாப் செல்லிங் காராக இருக்கும் டிசையரை (மாதத்துக்கு 16,500 கார்கள் விற்பனை), தொடர்ந்து அதே இடத்தில் நிடிக்கவைக்கும் முயற்சியாகவே இது அமைந்திருக்கிறது. அந்த கார் பற்றிய தகவல்களை, இப்போது ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!

 
 
 
இந்தியாவில் தற்போது அறிமுகமாகி இருக்கும் டிசையர், மூன்றாவது தலைமுறை மாடல் ஆகும். மேலும் ஸ்விஃப்ட் பெயரில்லாமல் வரும் முதல் டிசையர் மாடல் இதுதான்! 

டிசையரின் முதல் தலைமுறை மாடல் 2008-ம் ஆண்டிலும், இரண்டாம் தலைமுறை மாடல் 2012-ம், ஆண்டிலும் விற்பனைக்கு வந்தன; அவை மக்களின் அமோகமான ஆதரவை இந்நாள்வரை பெற்றிருக்கின்றன;

இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமான டிசையர் கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ள மாருதி சுஸுகி, காம்பேக்ட் செடான் செக்மென்ட்டின் 50 சதவிகித மார்க்கெட்டைத் தன்வசம் வைத்திருக்கிறது! 

புதிய டிசையரின் அளவுகள் (நீளம்: 3,995 மிமீ; உயரம்: 1,515 மிமீ; அகலம்: 1,735 மிமீ). அதாவது முன்பைவிட 40 மிமீ கூடுதல் அகலம், 40 மிமீ குறைவான உயரம், அதிக ஷோல்டர் ரூம் கிடைத்திருக்கிறது! ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸ், முன்பைவிட 7 மிமீ குறைந்து, 163 மிமீயாக உள்ளது.
 
 
 

சொந்தப் பயன்பாட்டிற்கான (White Board) பிரிமியம் காராக, புதிய டிஸையரைப் பொசிஷன் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. எனவே டாக்ஸி செக்மென்ட்டுக்கு, தற்போதைய டிசையர் மாடல் ரி-பொசிஷன் செய்யப்படுகிறது; எனவே இப்போது விற்பனையில் இருக்கும் 4 மீட்டர் நீளத்துக்கும் அதிகமான டிசையர் டூர் காரின் தயாரிப்பு நிறுத்தப்படுகிறது!

பெலினோ - இக்னிஸ் - 2018 ஸ்விஃப்ட் போன்ற எடை குறைவான, உறுதியான கார்கள் தயாரிக்கப்படும் 5-வது தலைமுறை HearTect பிளாட்ஃபார்மில்தான் டிசையரும் தயாரிக்கப்பட உள்ளது! காரில் கட்டுமானத்தில் High Tensile ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

2018 ஸ்விஃப்ட்டை அடிப்படையாக வைத்து, 2017 டிசையர் தயாரிக்கப்படுகிறது; எனவே பானெட், LED புரொஜெக்டர் ஹெட்லைட் - முன்பக்க ஃபெண்டர் ஆகியவற்றில் அதன் தாக்கம், டிசையரில் அதிகமாக இருக்கிறது. பெரிய க்ரோம் க்ரில் & முன்பக்க பம்பர் புதிது! 

புதிய ஸ்விஃப்ட்டில் இருக்கக்கூடிய சொகுசான லெதர் இருக்கைகள் & 55மிமீ கூடுதல் லெக்ரூம் காரணமாக, பழைய காருடன் ஒப்பிடும்போது அதிக இடவசதி இருக்கிறது! மேலும் பின்பக்கப் பயணிகளுக்கான ஏஸி வென்ட்களும் புதிது; அதேபோல 2017 டிஸையரின் பூட் ஸ்பேஸ், 376 லிட்டர் என்றளவில் இருக்கிறது; இது முன்பைவிட 62 லிட்டர்கள் அதிகம் மக்களே!
 
 
 

பலவித கன்ட்ரோல்களுடன் கூடிய ஸ்போர்ட்டியான ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், இரட்டை இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களின் இடையே MID, சென்டர் கன்சோல், முன்பக்க ஏஸி வென்ட்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் பிளே - மிரர் லிங்க் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களைக் கொண்ட 7 இன்ச் SmartPlay டச் ஸ்க்ரீன் Infotainment சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் எனப் புதிய டிசையரின் டூயல் டோன் டேஷ்போர்டிலும், 2018 ஸ்விஃப்ட்டின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது! வுட் ஃபினிஷ் புதுசு;

2-வது தலைமுறை டிசையரில் இருந்த அதே 1.2 லிட்டர் VVT, 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் / 1.3 லிட்டர் DDiS 190, 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்களுடன், 5 ஸ்பீடு மேனுவல் / AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான், புதிய டிசையரிலும் பொருத்தப்பட்டுள்ளன!

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, சுமார் 85 கிலோ - 105 கிலோ வரை எடை குறைந்திருக்கிறது புதிய டிஸையர்! எனவே பவர் - டார்க் விஷயங்களில் மாற்றம் இல்லையென்றாலும், முன்பைவிட பெப்பியான பெர்ஃபாமென்ஸ் கியாரன்ட்டி!

6 நிறங்கள் (Oxford Blue, Sherwood Brown, Gallant Red, Magma Gray, Silky Silver, Arctic White); 8 வேரியன்ட்கள் (Lxi - Ldi, Vxi - Vdi, Zxi - Zdi, Zxi+ - Zdi+) எனப் பல்வேறு ஆப்ஷன்களில் களமிறங்கியுள்ளது, மாருதி சுஸூகியின் புதிய காம்பேக்ட் செடான்! 
 

 
 
ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட், ஃபோர்டு ஆஸ்பயர், டாடா ஜெஸ்ட், ஃபோக்ஸ்வாகன் ஏமியோ ஆகிய காம்பேக்ட் செடான்களுடன், 860 - 990 கிலோ எடையுள்ள புதிய டிசையர் போட்டியிடுகிறது. 

புதிய டிசையரின் ஆரம்ப வேரியன்ட்டைத் தவிர, மற்ற வேரியன்ட்கள் அனைத்திலும் 5 ஸ்பீடு மேனுவல் / AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் இருப்பது கவனிக்கத்தக்கது!

பயணிகளின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, 2 காற்றுப்பைகள் - ஏபிஎஸ் - ISOFIX - Pretensioner சீட் பெல்ட் போன்றவை, 2017 டிசையரின் அனைத்து வேரியன்ட்டிலும் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டிருப்பது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்!

பழைய மாடலைவிட சுமார் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கூடுதலான விலையில் வெளிவந்திருக்கும் புதிய டிசையர், 1000 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது; 22kpl (பெட்ரோல்) & 28.4kpl அராய் மைலேஜையும் கொண்டிருக்கிறது! 
 
 

 
2017 மாருதி சுஸூகி டிசையரின் சென்னை எக்ஸ் ஷோரும் விலைகள் பின்வருமாறு;

1.2 பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் / AMT கியர்பாக்ஸ்

LXi - Rs 5.45 lakh
VXi - Rs 6.37 lakh
VXi AMT - Rs 6.85 lakh
ZXi - Rs 7.07 lakh
ZXi AMT - Rs 7.55 lakh
ZXi+ - Rs 7.98 lakh
ZXI+ AMT - Rs 8.46 lakh

1.3 டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் / AMT கியர்பாக்ஸ்

LDi - Rs 6.94 lakh
VDi - Rs 7.33 lakh
VDi AMT - Rs 7.81 lakh
ZDi - Rs 8.10 lakh
ZDi AMT - Rs 8.58 lakh
ZDi+ - Rs 9.01 lakh
ZDi+ AMT - Rs 9.49 lakh


- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   MARUTI SUZUKI, DZIRE, INDIA, COMPACT SEDAN, MARKET LEADER, VW AMEO, HONDA AMAZE, HYUNDAI XCENT, FORD ASPIRE, TATA ZEST, PETROL, DIESEL, MT, AT, HEARTECT, ABS, AIRBAGS, SEATBELT, LEATHER, TOUCH SCREEN, ALLOY