விரைவில் வருகிறது எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்? ஸ்பை படம் உள்ளே!
Posted Date : 12:51 (18/05/2017)
Last Updated : 16:23 (18/05/2017)

 

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யூவியான எக்கோஸ்போர்ட், கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. 4 மீட்டர் நீளத்துக்குட்பட்ட இந்த காருக்கு, அப்போது ரெனோ டஸ்ட்டர் மற்றும் நிஸான் டெரானோவைத் தாண்டி பெரிய அளவில் போட்டியாளர்கள் இல்லை. மேலும் அந்த காருடன் ஒப்பிடும்போது, அசத்தலான விலையில் கிடைக்கக்கூடிய சிறப்பான பேக்கேஜாக இருந்தது எக்கோஸ்போர்ட். இதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கடந்த 2015-ல் மஹிந்திரா தனது TUV300 காம்பேக்ட் எஸ்யூவியையும், ஹூண்டாய் தனது க்ரெட்டா எஸ்யூவியையும் களமிறக்கின.
 
 
 
 
எனவே இவற்றுக்குப் பதிலடியாக, கூடுதல் பவர் மற்றும் சிறப்பம்சங்களுடன் கூடிய எக்கோஸ்போர்ட்டை, 2015-ம் ஆண்டு இறுதியில் உடனடியாக வெளியிட்டது ஃபோர்டு. இது ஃபோர்டு தனது முன்னிலையைச் சிறிது காலத்துக்குத்தான் தக்க வைத்துக் கொள்ள உதவியது. ஏனெனில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில், மாருதி சுஸூகியின் காம்பேக்ட் எஸ்யூவியாக விட்டாரா பிரெஸ்ஸா விற்பனைக்கு வந்தது. 
 
 
 

உடனே சுதாரித்துக் கொண்ட ஃபோர்டு நிறுவனம், எக்கோஸ்போர்ட்டின் விலையைச் சுமார் 1.5 லட்சம் வரை அப்போது குறைத்தது. அப்படி இருந்தும், விட்டாரா பிரெஸ்ஸாவின் அதிரடியான வெற்றியைத் தடுக்க முடியவில்லை. இந்த காம்பேக்ட் எஸ்யூவி அறிமுகமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், இதன் விற்பனை எண்ணிக்கையும் 1.1 லட்சத்தைக் கடந்துவிட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் டாப்-10 கார்களின் பட்டியலிலும் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறது.
 
 
 
இதற்கிடையே அதிக விலையில் கிடைக்கக்கூடிய ஹூண்டாய் க்ரெட்டாவும், அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் ஆகப் போகும் நிலையில், இதன் விற்பனை எண்ணிக்கையும் 1.5 லட்சத்தைக் கடந்துவிட்டது. எனவே மாருதி சுஸூகி மற்றும் ஹூண்டாயின் கடுமையானப் போட்டியைச் சமாளிக்க, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியை, இந்த ஆண்டு   களமிறக்குகிறது ஃபோர்டு. ஆனால் அமெரிக்காவில், இது ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது!
 

 
 
காரின் வெளிப்புறத்தில், புதிய டிஸைனைக் கொண்ட ஹெட்லைட் - டெயில் லைட், அறுகோண வடிவ கிரில், முன்பக்க - பின்பக்க பம்பர்கள், அலாய் வீல், பனி விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. காரின் உட்புறத்தில், புதிய ஸ்டீயரிங் வீல் - இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கலர் டிஸ்பிளே உடனான Sync இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மாற்றியமைக்கப்பட்ட சென்டர் கன்சோல், காரின் கலருக்கு ஏற்ற அப்ஹோல்சரி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் எக்கோஸ்போர்ட்டில், டெயில்கேட்டில் இருந்து ஸ்பேர் வீலை எடுத்துவிட்டது ஃபோர்டு.
 
 
 
 
ஆனால் இந்தியாவில் எஸ்யூவிகளின் டெயில் கேட்டில் ஸ்பேர் வீல் இருப்பதையே வாடிக்கையாளர்கள் விரும்புவர் என்பதால், ஆசிய சந்தைகளில் விற்பனை செய்யப்பட உள்ள எக்கோஸ்போர்ட்டில் இந்த வசதி நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் மாற்றம் இருக்காது என நம்பலாம். சீனா, பிரேஸில், தென் அமெரிக்கா போன்ற நாடுகளைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் டெஸ்ட் செய்யப்பட்டிருக்கும் இந்த காரை, சென்னையில் படம்பிடித்திருக்கிறார், மோட்டார் விகடனைச் சேர்ந்த கா. பாலமுருகன். 
 
 
 

 - ராகுல் சிவகுரு.
 
 

 

TAGS :   FORD, ECOSPORT, INDIA, AMERICA, RENAULT DUSTER, MARUTI SUZUKI, VITARA BREZZA, MAHINDRA, TUV 3OO, COMPACT SUV, 4 METER, DIESEL, PETROL, 5 SPEED MANUAL GEARBOX, TURBO ENGINE