மீண்டும் வருகிறதா 2 ஸ்ட்ரோக் பைக்ஸ்? கேடிஎம்மின் அதிரடி தொழில்நுட்பம்...!
Posted Date : 11:48 (19/05/2017)
Last Updated : 11:58 (19/05/2017)

 

2 ஸ்ட்ரோக் என்றவுடன் பலருக்கு ஞாபகம் வருவது, யமஹாவின் RX100 & RD350, சுஸூகியின் மேக்ஸ் 100R & ஷோகன், யெஸ்டி & ராஜ்தூத் பைக்குகள்தான். அதன் நீல நிறப் புகையும் - தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தமும், பைக் ஆர்வலர்களின் சுவாசமாகவும் காதுகளுக்கு சங்கீதமாகவும் இருந்தன என்றால் அது மிகையில்லை; இந்த அனுபவத்தை, அந்த பைக்கை ஓட்டியவர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆனால் உலகளவில் மாசு கட்டுப்பாட்டால், தனது இருப்பிடத்தை இழந்திருந்த 2 ஸ்ட்ரோக் தொழில்நுட்பத்துக்கு, மீண்டும் உயிர்கொடுத்திருக்கிறது கேடிஎம்.
 
 
 
 
ஆம்! ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளுக்கு எனத் தான் புதிதாக தயாரித்திருக்கும் இரண்டு புதிய 2018 என்டியுரோ வகை ஆஃப் ரோடு மோட்டார் சைக்கிள்களில் (250 EXC TPI & 300 EXC TPI), உலகின் முதல் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் செய்யப்பட்ட 2 ஸ்ட்ரோக் இன்ஜினைப் பொருத்தியிருக்கிறது கேடிஎம். ரேஸ் பைக்குகளில் காணப்படும் (EXC TPI) Transfer Port Injection முறையைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினின் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்துக்கு, தனது பேரில் காப்புரிமை கூட வாங்கிவிட்டது கேடிஎம்.
 
ஒரு சிலிண்டருக்குள் இருக்கும் Transfer Port-ல் இரண்டு இன்ஜெக்டர்கள் இருப்பதால், கார்புரேட்டர் உடனான 2 ஸ்ட்ரோக் இன்ஜினுடன் ஒப்பிடும்போது, இந்தப் புதிய இன்ஜின் ஸ்மூத்தாக இயங்குகிறது; திராட்டில் பாடியின் இயக்கத்துக்கு ஏற்ப, இருக்கும் பெட்ரோலுக்கு ஏற்பத் தேவையான காற்றும் ஆயிலும் அதில் துல்லியமாகக் கலக்கப்படுகிறது. ஆகவே பவர் டெலிவரியும் சீராக இருக்கும் என்கிறது கேடிஎம்.
 
 
 
 
 
மேலும் அதிக மைலேஜும் கிடைக்கும் என்பதுடன், ஃப்யூல் ஜெட்டை அட்ஜஸ்ட் செய்யாமலேயே, பல தரப்பட்ட சூழ்நிலையிலும் சிக்கலின்றி இந்த இன்ஜின் இயங்கும் என்கிறது கேடிஎம். வழக்கமான 2 ஸ்ட்ரோக் பைக்குகளைப் போல, இங்கே பெட்ரோலுடன் ஆயிலைக் கலக்கத் தேவையில்லை மக்களே. எனவே இதற்கெனப் பிரத்யேகமான Engine Management System (EMS), சென்சார்களின் உதவியுடன் இக்னிஷன் டைமிங் மற்றும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷனைக் கட்டுப்படுத்தும் Electronic Control Unit (ECU) ஆகியவற்றை வடிவமைத்திருக்கிறது கேடிஎம்.
 
இதுதவிர திராட்டில் பாடி -  சிலிண்டர் - ஏர் ஃபில்டர் பாக்ஸ் - ஆயில் பம்ப் - ஃப்யூல் டேங்க் - ஆயில் டேங்க்கை தன்னுள்ளே கொண்டிருக்கும் Chromoly Double Cradle ஸ்டீல் ஃப்ரேம் என மெக்கானிக்கல் பாகங்களும் முற்றிலும் புதிது.
 
 
 
 
இப்படி ஆஃப் ரோடு பிரியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக வந்திருக்கும் இந்த ஆஃப் ரோடு பைக்குகளை, சாலையில் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது என்பதுதான் கொஞ்சம் நெருடல். புதிய கிராஃபிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்துடன் ஈர்க்கும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள எடை குறைவான லித்தியம் ஐயான் பேட்டரி மற்றும் E-ஸ்டார்ட்டர், ஹைட்ராலிக் கிளட்ச், பிரெம்போ பிரேக்ஸ், WP சஸ்பென்ஷன் என டெக்னிக்கலாகவும் அசத்துகிறது.
 
எடை குறைவான ஆனால் பவர்ஃபுல்லான டர்ட் மற்றும் மோட்டோ கிராஸ் பைக்குகளுக்கு ஏற்றதாக இருக்கும் இந்த இன்ஜினை, கேடிஎம் தனது RC மற்றும் டியூக் பைக்குகளில் பொருத்தும் நாள், வெகு தொலைவில் இல்லை! ஹோண்டாவும் இதே போன்ற தொழில்நுட்பத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது. 
 
 
- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   KTM, 250 EXC TPI, 300 EXC TPI, FUEL INJECTION, TRANSFER PORT INJECTION, PATENT RIGHTS, INDIA, 2 STROKE, MOTOCROSS BIKES, EURO 4, EMISSION NORMS, 2017