டாடா ஹெக்ஸா, மஹிந்திரா XUV 5OO-க்குப் போட்டி.... டெஸ்ட்டிங்கில் ரெனோ காப்டூர்? ஸ்பை படங்கள் உள்ளே!
Posted Date : 12:05 (19/05/2017)Last updated : 13:05 (19/05/2017)

 


 

சந்தேகமே இல்லை; டஸ்ட்டர் மற்றும் க்விட் இல்லை என்றால், ரெனோ இந்தியாவில் இல்லை. இப்போதைக்கு காம்பேக்ட் 4X4 எஸ்யுவி வாங்க நினைக்கும் கணிசமானவர்களின் முதல் சாய்ஸாக இருப்பது டஸ்ட்டர்தான்! ‘டஸ்ட்டரில் ஆட்டோமேட்டிக் இல்லையே’ என்றவர்களுக்காக, டீசலில் 6 ஸ்பீடு AMT மற்றும் பெட்ரோலில் CVT என ஆட்டோமேட்டிக் ஆப்ஷன்களும் இப்போது வந்துவிட்டன. ‘ஆட்டோமேட்டிக் இருந்தால் மட்டும் போதுமா... BR-V போல 7 சீட்டர் இல்லையே’ என்பவர்களுக்காக, 7 சீட்டர் ஆப்ஷனுடன் ஒரு காரைக் களமிறக்க இருக்கிறது ரெனோ.
 
 
 
 
படையப்பா படத்தில் ரஜினி, ‘மாப்பிள்ளை அவருதான்; ஆனா சட்டை என்னோடது’ என்பதுபோல... பிளாட்ஃபார்ம், இன்ஜின் - கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் போன்றவை டஸ்ட்டரினுடையது என்றாலும், அந்த புதிய கார் டஸ்ட்டரின் மற்றொரு வெர்ஷன் இல்லை! எனவே சிம்பிளான விஷயங்களான கிரில், ஹெட்லைட், பம்பர் தொடங்கி டேஷ்போர்டு, பாடி பேனல்கள் வரை அதிரடியான மாற்றங்களுடன், 7 சீட்டர் ஆப்ஷனில் ‘காப்டுர்’ (Kaptur) என்ற பெயரில் ஒரு முழுமையான க்ராஸ்ஓவர் எஸ்யுவியை, இந்த ஆண்டு இறுதிக்குள், உத்தேசமாக 13 - 20 லட்ச ரூபாய் விலையில் அறிமுகப்படுத்துகிறது ரெனோ. விலையை வைத்துப் பார்க்கும்போது, இது டாடா ஹெக்ஸா மற்றும் மஹிந்திரா XUV 5OO ஆகிய கார்களுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்படும் சாத்தியங்கள் அதிகம்!
 
 
 
 
மேலும் ஹூண்டாய் டூஸான் மற்றும் ஹோண்டா CR-V ஆகிய சாஃப்ட் ரோடர் எஸ்யூவிகளுடன் போட்டியிடும் விதமாக, ரெனோ ஃப்ளூயன்ஸில் இருந்த 135bhp பவர் - 19kgm டார்க்கை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கூட்டணியுடனும் இந்த கார் வெளிவரலாம் எனத் தெரிகிறது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது ஃபோர்டு எக்கோஸ்போர்ட்டுக்குப் போட்டியாக விற்பனையாகும் Renault Captur மாடலைப்போலவே இதன் டிசைன் இருக்கலாம் எனக் கூறப்பட்ட நிலையில், சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருந்த இந்த காரைப் படம்பிடித்திருக்கிறார், மோட்டார் விகடனைச் சேர்ந்த சுப்ரமணியன்.

 
 - ராகுல் சிவகுரு.