27.98 லட்சத்துக்கு ஜெர்மன் எஸ்யூவியா - ஃபோக்ஸ்வாகன் டிகுவான்!
Posted Date : 19:58 (25/05/2017)
Last Updated : 20:06 (25/05/2017)

 

''ஃபோக்ஸ்வாகனில் ஹேட்ச்பேக் மற்றும் செடான் வகை கார்கள் மட்டும்தானா? எஸ்யூவிகளே இல்லையா?'' என்ற கார் ஆர்வலர்களின் கேள்விக்குப் பதிலாக, கடந்தாண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அந்நிறுவனம் காட்சிபடுத்தியதுதான் டிகுவான். தற்போது 27.98 - 31.38 லட்சத்தில் (டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை), 5 கலர்களில் (Tungsten Silver, Atlantic Blue, Deep Black, Oryx White, Indium Grey) அந்த எஸ்யூவி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
 
Comfortline, Highline எனும் இரு வேரியன்ட்டில் வெளிவந்திருக்கும் இந்த எஸ்யூவியை, மஹாராஷ்ட்ராவில் இருக்கும் தனது தொழிற்சாலையில் தயாரிக்கிறது ஃபோக்ஸ்வாகன். இந்நிறுவனத்துக்கே உரித்தான டிசைன் கோட்பாடுகளின்படியே, டிகுவான் எஸ்யூவியின் டிசைன் அமைந்திருக்கிறது. 
 
 
 

இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் கார்களில், லேட்டஸ்ட்டான MQB பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் முதல் ஃபோக்ஸ்வாகன் கார் டிகுவான் என்பது கவனிக்கத்தக்கது! பெட்ரோல் மற்றும் இன்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த ஜெர்மானிய எஸ்யூவி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 143bhp பவர் - 34kgm டார்க் - 17.06கிமீ அராய் மைலேஜை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் - 4WD ஆப்ஷனுடன் மட்டுமே களமிறங்கியிருக்கிறது டிகுவான். 
 
 
 

ABS, ESC, HDC, TPMS, ASR, முன்பக்க & பின்பக்க பார்க்கிங் சென்சார் & பனி விளக்குகள், ரெயின் சென்சார், 18 இன்ச் அலாய் வீல்கள், LED ஹெட்லைட் - டெயில்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், பேடில் ஷிஃப்ட்டர், ரிவர்ஸ் கேமரா, பனரொமிக் சன்ரூஃப், 6 காற்றுப்பைகள், 3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஹீட்டிங் வசதி கொண்ட முன்பக்க இருக்கைகள் மற்றும் ரியர் வியூ மிரர்கள், டிரைவிங் மோடுகள் (On-Road, Snow, Ice, Off-Road, Off-Road Individual), கிலெஸ் என்ட்ரி,
 
பேக்லிட் உடனான ஸ்கஃப் பிளேட், எலெக்ட்ரிக் டெயில்கேட், 4Motion ஆல் வீல் டிரைவ், ஆண்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் பிளே - USB - Aux-In - 8 ஸ்பீக்கர்கள் உடனான 8 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், லெதர் உள்ளலங்காரம், 40:20:40 ஸ்ப்ளிட் சீட், Self Sealing டயர்கள், ISOFIX,  என சிறப்பம்சங்களின் பட்டியல் மிக நீளம்!  
 
 
 

ஆக இந்த எஸ்யூவியின் சைஸுடன் ஒப்பிடும்போது, விலை கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தாலும், சிறப்பம்சங்களால் அதனை நியாயப்படுத்திவிடுகிறது ஃபோக்ஸ்வாகன். டிமாண்டைப் பொறுத்து, பின்னாளில் 2 வீல் டிரைவ் மற்றும் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல்கள் வெளிவரும் என நம்பலாம். ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்வி போன்ற சாஃப் ரோடர்களுடன் போட்டியிடுகிறது, 5 சீட்டர் எஸ்யூவியான டிகுவான். ஆனால் 149மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், ஒரு எஸ்யூவிக்கு ரொம்ப கம்மி மக்களே!
 
 
 

ஆனால் கிரவுண்ட் கிளியரன்ஸில் விட்டதை, பூட் ஸ்பேஸில் சரிகட்டிவிட்டது ஃபோக்ஸ்வாகன். காரின் 5 இருக்கைகளும் பயன்படுத்தப்பட்டாலும், 615 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கிறது. பின்பக்க இருக்கையை மடிக்கும்போது, ஒட்டுமொத்தமாக 1655 லிட்டர் பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. 4486மிமீ நீளம் - 1839 மிமீ அகலம் - 1672மிமீ உயரம் என அளவுகளில் டிகுவான் எஸ்யூவி காம்பேக்ட்டாக இருந்தாலும், 2677 மிமீ வீல்பேஸ் காரணமாக இடவசதி அசத்தலாக இருக்கிறது.
 
இந்த எஸ்யூவியின் எடை 1,720 கிலோ என்பது, அற்புதமான கட்டுமானத் தரத்தை நமக்கு உணர்த்திவிடுகிறது. 71 லிட்டர் ஃப்யூல் டேங்க் இருப்பதால், நீண்ட நேர நெடுஞ்சாலைப் பயணங்கள் கியாரன்ட்டி! அடுத்த 2 நாட்களில் டெலிவரிகள் துவங்கும் என ஃபோக்ஸ்வாகன் தெரிவித்துள்ளது.  

 
- ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   VOLKSWAGEN, INDIA, TIGUAN, SUV, HYUNDAI, TUSCON, HONDA, CR-V, SOFT ROADERS, CHASSIS, MONOCOQUE CONSTRUCTION, 4WD, TDI, 4 CYLINDER ENGINE, DSG AUTOMATIC, SAFETY, BUILD QUALITY, MAKE IN INDIA.