ஜிஎஸ்டி எதிரொலி - லக்ஸூரி கார்களின் விலை குறைந்தது!
Posted Date : 17:05 (29/05/2017)Last updated : 17:05 (29/05/2017)

 

கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஜிஎஸ்டி வரி, வருகின்ற ஜூலை 1, 2017 முதலாக அமலுக்கு வருகிறது. அதில் ஆட்டோமொபைல் துறையில் விற்பனை செய்யப்படும் பலவகை கார்களுக்கும், பல விதிகளின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 4 மீட்டர் நீளத்துக்கும் அதிகமான, 1,500சிசிக்கும் அதிகமான இன்ஜின் கொண்ட கார்கள் மற்றும் எஸ்யூவிகளுக்கு, இந்நாள்வரை 50 - 55 சதவீகிதம் (41.5 முதல் 44.5% வரி+ 27 முதல் 30% கலால் வரி + வாட்) வரை வரிகளைக் கொண்டிருந்தன.
 
 
 
 
ஆனால் விரைவில் வரவிருக்கும் ஜிஎஸ்டி வரியினால், முன்னே சொன்ன கார்களின் மீதான வரிகளின் அளவு, 43 சதவீதமாகக் (GST - 28% + CESS - 15%) குறைந்துள்ளது. எனவே இந்தவகைக் கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றின் விலைகளைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. 
 

 
 
இந்நிலையில், தான் உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யும் 9 கார்களின் (CLA, C-Class, E-Class, S-Class, Maybach S500, GLA, GLE, GLS) எக்ஸ் ஷோரூம் விலைகளை, 2 - 9 சதவீகிதம் (சராசரியாக 4%) வரை குறைத்திருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். இந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் செடான் காரான CLA-வின் விலை, முன்பைவிட 1.5 லட்ச ரூபாய் குறைவு; அதேபோல பென்ஸின் காஸ்ட்லி செடான் காரான Maybach S500-ன் விலை, முன்பைவிட 7 லட்ச ரூபாய் குறைவு! 
 
 
 

பென்ஸைத் தொடர்ந்து, மற்றொரு ஜெர்மன் நிறுவனமான பிஎம்டபிள்யூவும், ஜிஎஸ்டி வரிக்கு ஏற்ப தனது கார்களின் விலைகளை மாற்றியமைத்திருக்கிறது. இதனுடன் ஒரு வருடத்துக்கான இலவச இன்சூரன்ஸ் - 3 வருடம்/40,000 கிமிக்கான பராமரிப்பு மற்றும் சர்வீஸ் பேக்கேஜ் - 7.90 சதவீகித வட்டி விகிதம் என கூடுதலாகச் சலுகைகளையும் அள்ளி வீசியிருக்கிறது பிஎம்டபிள்யூ!
 
ஆனால் முன்பைவிடக் கார்களின் எவ்வுளவு விலை குறைவு என்பதைப் பற்றிய தகவலை இந்நிறுவனம் வெளியிடவில்லை; என்றாலும், ஜிஎஸ்டியுடன் தனது சலுகைகளும் சேரும்போது, அது 12 சதவீகிதம் அளவுக்கு இருக்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. 
 

 
 
''ஜெர்மன் நிறுவனங்கள் மட்டும்தான் விலையைக் குறைக்குமா? நாங்களும் பண்ணுவோம்ல!'' என்ற ரீதியில், டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான பிரிட்டிஷ் நிறுவனமான ஜாகுவார் லேண்ட்ரோவர், தனது கார்களின் விலைகளை, 4 லட்ச ரூபாய் வரை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரிகளுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்ட புதிய டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைகள் பின்வருமாறு;

ரேஞ்ச் ரோவர் இவோக் -  45.85 லட்ச ரூபாய்
டிஸ்கவரி ஸ்போர்ட் -  43 லட்ச ரூபாய்
ஜாகுவார் XE - 37.25 லட்ச ரூபாய் 
 
 
 

நாடெங்கும் ஜிஎஸ்டி அமலுக்கு வருவதற்கு, ஒரு மாதத்துக்கும் அதிகமான நாட்கள் இருந்தாலும், விலைகளை உடனடியாகக் குறைத்து, விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்திலேயே, மெர்சிடீஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார் லேண்ட்ரோவர் ஆகிய லக்ஸூரி கார் தயாரிப்பாளர்கள், தனது நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கின்றன. இந்நிறுவனங்களைப் போலவே, மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும், ஜிஎஸ்டி வரிகளை அடிப்படையாகக் கொண்டு, தமது கார்களின் புதிய விலைகளை, இனி வரும் நாட்களில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 - ராகுல் சிவகுரு.
 
 
 
உங்கள் கருத்து
Name:    Email Id:   
தமிழ்   English   (For type in tamil : அம்மா = ammaa, விகடன் = vikatan)
(குறிப்பு: தங்கள் கருத்து பதிவு நெறியாளர் பார்வைக்கு பிறகே பதிப்பிக்கப்படும்)
விகடன் இணையதள கருத்துப் பகுதியின் விதிகளும் - வேண்டுகோளும்