டாடாவின் புதிய கான்செப்ட் - வருகிறதா ஹெக்ஸா பிக்-அப்?
Posted Date : 21:05 (30/05/2017)Last updated : 17:06 (01/06/2017)

 

 

 

பிக்-அப்... இந்தியாவில் இந்த வகை வாகனங்கள் அவ்வளவாக பிரபலமாகவில்லைதான்; ஆனால் கரடு முரடான சாலைகள் நிறைந்த மலைப்பிரதேசங்களில், இவ்வகை வாகனங்கள்தான் டாப்! ஆனால் கடந்தாண்டு வெளியான இசுஸூவின் D-Max V-Cross, இந்த நிலையைக் கொஞ்சம் மாற்றியிருக்கிறது.
 
டாடா ஜெனான், மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கெட்-அவே போன்ற விலை குறைவான உள்நாட்டுத் தயாரிப்புகளுக்குப் போட்டியாகக் களமிறங்கிய இந்த ஜப்பான் மாடல், லக்ஸூரியான எஸ்யூவி போன்ற உணர்வைத் தந்தது குறிப்பிடத்தக்கது. எனவே எஸ்யூவி செக்மென்ட்டில், தான் கடந்தாண்டு அறிமுகப்படுத்திய ஹெக்ஸாவை அடிப்படையாகக் கொண்டு, பிரிமியம் பிக்-அப் வாகனத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
 
 
 
 
தனது போட்டியாளர்களைவிட ஹெக்ஸா, அசத்தலான டிசைன் மற்றும் மிரட்டலான அளவுகளைக் கொண்டிருப்பதுடன், கேபினும் அதிக சிறப்பம்சங்களுடன் பிரிமியமாக இருந்தது. மேலும் அதில் பொருத்தப்பட்டிருந்த 2.2 லிட்டர் டீசல் இன்ஜின், பல்வேறு பவர் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வெளிவந்தது கவனிக்கத்தக்கது.
 
ஆக கெத்தான வடிவமைப்பு - ஸ்டைலான கேபின் - பவர்ஃபுல் டீசல் இன்ஜின் - டிரைவிங் மோடுகள் (Auto, Comfort, Dynamic, Rough Road) உடனான 4 வீல் டிரைவ் என ஒரு பிக்-அப்புக்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் அனைத்தும் ஹெக்ஸாவில் இருப்பதால், அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு லக்ஸூரி பிக்-அப்பை டாடா தயாரிப்பதில் நியாயம் இருக்கிறது.
 
 
 
 
தற்போது ஐடியாவாக இருக்கும் இதனை, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவில் டாடா காட்சிபடுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்! எனவே அதற்குக் கிடைக்கும் மக்களின் ஆதரவைப் பொறுத்து, தயாரிப்புப் பணிகள் குறித்து டாடா முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. இது எல்லாம் சரியாக நடந்து, கச்சிதமான விலையில் (உத்தேசமாக 15 லட்ச ரூபாய்) மட்டும் இது களமிறங்கினால், இசுஸூவின் D-Max V-Cross பிக்-அப்புக்குச் சரியான போட்டி உருவாகும் என நம்பலாம். 

 
 - ராகுல் சிவகுரு.