விபத்தில் கார்கள் தீப்பிடிப்பது ஏன்?
Posted Date : 13:36 (01/06/2017)
Last Updated : 13:49 (01/06/2017)


மே மாதம் 29-ம் தேதி காலை, இப்படி ஒரு செய்தியுடன் தமிழகம் விழித்தெழும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆம். சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் சாலைகளுள் ஒன்றான கிழக்கு கடற்கரை சாலையில்தான் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் வழியில் மகாபலிபுரம் அருகே முந்தைய நாள் இரவு, சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு கார், திடீரென தீப்பிடித்து எரிந்ததில், ஒரு பெண் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள், மூன்று பேரின் உடல்களையும், காரிலிருந்து கருகிய நிலையில் மீட்டனர். இதுகுறித்து கல்பாக்கம் காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
இருப்பினும், இந்நாள்வரை விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இந்த விபத்தில், எப்படி சில நொடிகளில் கார் முழுதும் தீப்பிடித்தது என்பதுதான், விசாரிக்கப்பட வேண்டிய முக்கியமான கோணம்! பொதுவாக, ஒரு கார் விபத்துக்குள்ளாகி, அது ஸ்பாட்டில் தீப்பிடித்து எரியும்போது இருந்தவர்கள், ‘‘அது மோதுன வேகத்துல, கார் ‘டமார்’னு வெடிச்சு அடுத்த செகண்ட்லேயே எரிய ஆரம்பிச்சிடுங்க... பக்கத்துலயே போக முடியலை!'' - ''காரின் பெனட்டில் இருந்து திடீரென அதிகமாகப் புகை வந்தது. எனவே ரோட்டோரத்தில் காரை நிறுத்திவிட்டு, இறங்கிவிட்டோம். அதன்பிறகு ரொம்ப நேரம் கார் ‘தபதப’னு எரிஞ்சுக்கிட்டேதான் இருந்துச்சு!’’ எனச் சொல்லக் கேட்டிருப்போம். 
 
 
 

ஏனெனில் கார்கள் தீப்பிடித்து எரிவது என்பது மிகவும் அரிதான விஷயம். எலெக்ட்ரிக் கார் என்றால்கூட தீப்பிடிப்பதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன. பொதுவாகவே கார் விபத்தில் சிக்குபவர்களுக்கு, 10 விநாடிகள் வரை தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதையே உணர முடியாது. ஒருசில சந்தர்ப்பங்களில், அவர்கள் காருக்குள் இருந்து வெளியேற முடியாமல் அல்லது விபத்தின் அதிர்ச்சியால் சுயநினைவை இழந்திருக்கவும் வாய்ப்புகள் உண்டு. அந்நேரத்தில் மற்றவர்கள் உதவிக்கு வந்தால் மட்டுமே அவர்களைக் காப்பாற்ற முடியும். கார் தீப்பிடித்தால் நிலைமை மோசம்.
 
 
 
 
இதன்பின்னே எத்தனை லட்ச ரூபாய் காராக இருந்தாலும், கார்ப்பரேஷன் ஊழியர்கள் அதனைக் கரித்தூள்களாக ட்ராலியில் அள்ளி எடுக்க வேண்டியதுதான்! இந்த முறையில் நிகழ்ந்த மரணங்களில், 'பாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்'' படப்புகழ் பால் வாக்கர் மற்றும் சென்னையைச் சேர்ந்த கார்/பைக் ரேஸரான அஸ்வின் சுந்தர் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் இறந்ததில் இன்னுமே மர்மம் நீடித்தாலும், இருவருமே வேகமாகக் காரை ஓட்டி, கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால் இறந்தார்கள் எனச் சொல்லப்படுகிறது. கார் தீப்பிடிப்பது குறித்து ஆட்டோமொபைல் துறை நிபுணர்கள் கூறுவது பின்வருமாறு;
 
 
 

''காரின் முன் பகுதியில் ஏராளமான வயர்கள், மின் விளக்குகள், பேட்டரி, ஏசி கம்ப்ரஸர் என எளிதில் தீப்பிடிக்கக் கூடிய கருவிகள் அதிகமாக இருக்கும். ஆதலால் விபத்து ஏற்படும்போது இவற்றில் ஏதாவது சேதம் அடைந்தால், கார் உடனே தீப்பிடித்துக் கொள்ளும். தவிர மோதிய வேகத்தில், பெட்ரோல் டேங்க் வெடித்ததாலும், கார் முழுவதுமாக எரிந்துவிடும். மேலும் கார்களில் உள்ள 'எலெக்ட்ரிக்' சாதனங்களை இணைக்கும் வயர்களில் கோளாறோ, இணைப்பில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டாலோ, தீப்பொறி கிளம்பி, அது தீ விபத்தாக மாறும். ஒரு சிலர் தமது கார்களில், அந்தந்த நிறுவனங்கள் பொருத்தியிருக்கும் விளக்குகளை மாற்றிவிட்டு, அதிக ஒளி உமிழும், சக்திமிக்க பல்புகள் பயன்படுத்துவது நடக்கிறது; மேலும் அலங்காரத்துக்காக, 'எக்ஸ்ட்ரா பிட்டிங்' பல்ப் மற்றும் பவர்ஃபுல் ஹாரன்களை பொருத்துவதும், தீ விபத்துகள் நிகழும் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன.
 
 
 
 
பொதுவாக, நவீன வசதிகள் கொண்ட கார்களின் கதவுகள், வேகமாகச் செல்லும்போது கதவுகள் தானாகவே ‘லாக்’ ஆகும் என்றால், விபத்து நிகழ்ந்தால் அவை தானாகவே திறந்துகொள்ளும். அதற்கேற்ப காரின் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் வடிவமைக்கப்படுகிறது. அதேநேரத்தில், விபத்தின் தன்மையைப் பொறுத்து, கதவு ‘ஜாம்’ ஆகிவிடுவதற்கும் வாய்ப்புள்ளது. அஸ்வின் சுந்தர் மற்றும் பால் வாக்கரின் விபத்தில் இதுதான் நடந்திருக்கும். தற்போது வரும் கார்களின் பாதுகாப்பு கருதி, க்ரம்பிள் ஸோன் எனப்படும் விபத்தின்போது மோதல் தாக்கத்தை உள்வாங்கி கொள்ளும் பகுதியிலோ அல்லது பரந்த இடபரப்பை கொண்ட பகுதியிலோதான் பெட்ரோல் டேங்க்கை அமைக்கிறார்கள். எனவே அதிக சூடான புகை வெளியேறும் எக்ஸாஸ்ட் பைப் அமைந்த பகுதி மற்றும் மின்சார வயர்கள் செல்லும் பகுதியைத் தவிர்த்து, பெட்ரோல் டேங்க்கின் வாய்ப்பகுதியை பொருத்தவும் அறிவுறுத்தப்படுகின்றன'' என்கிறார்கள். 
 

 
 
நிபுணர்கள் சொல்வது போலவே, ஸ்டீயரிங் வீல் மற்றும் எக்ஸாஸ்ட் பைப்பின் பொசிஷனிங்கைப் பொறுத்து, ஜப்பானிய கார்களில் 90 சதவீதம் பெட்ரோல் டேங்க் மூடி காரின் இடது புறத்தில் கொடுக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வலது பக்கம் கொடுக்கப்படுகிறது. ஒருபுறம் தற்போதைய கார்கள் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பானதாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், இந்தியாவில் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒருவேளை விபத்து நிகழ்ந்தால், இன்ஜின் செயல்பாட்டையும், எரிபொருள் பம்ப் செய்யப்படுவதையும் காரின் ECU நிறுத்திவிடும்.
 
 
 
 
ஒருசிலர் கூடுதல் வேகத்துக்காக இன்ஜினை மாற்றி அமைத்திருந்தாலும், விபத்துகளின்போது அவை தீப்பிடிப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால் நவீன கார்களின் இன்ஜினை மாற்றியமைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எலெக்ட்ரானிக் சிப் டியூனிங்கைத்தான் பலர் கையாளுகிறார்கள். எனவே விபத்துக்கு உள்ளான காரின் இன்ஜினை டியூன் செய்திருக்கிறார்களா? எல்பிஜி கிட் எதும் சேர்த்திருந்தாரா? என்பதை விசாரித்தால் தீப்பிடித்ததற்கான காரணம் தெரிய வரலாம்.
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   CHENNAI, TAMILNADU, CAR ACCIDENT, ASHWIN SUNDAR, PAUL WALKER, CAR RACERS, INDIA, PORSCHE 911, BMW Z4, FIRE, SPARK, ELECTRIC WIRES, HYUNDAI SANTRO, DEAD BODIES.