என்னது... ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 376 கிமீ மைலேஜா?
Posted Date : 17:06 (01/06/2017)Last updated : 17:06 (01/06/2017)

 

இதோ... இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மீண்டும் உயர்ந்துவிட்டது! இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை, பைசாக்களில் விலை குறைவதும், ரூபாய்களில் விலை ஏறுவதும் வாடிக்கையாகி விட்டது. இதுவே பாண்டிச்சேரி என்றால், நாளுக்கு நாள் எப்படி முட்டையின் கொள்முதல் விலை மாறுகிறதோ, அங்கே அதே போல் பெட்ரோல்/டீசல் விலையும் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன.
 
இன்றைய நெரிசல்மிக்க அவசர உலகில், பெட்ரோல்/டீசல் விலை உயர்ந்தாலும், வாகன ஒட்டிகளின் எண்ணிக்கையோ குறைந்த பாடில்லை. ஏனெனில் ஒருபுறம் பைக் மற்றும் கார் என வாகனங்களின் மீதான மக்களின் மோகம் அதிகரித்தாலும், மறுபுறம் எரிபொருளின் விலையை நினைக்கும் போது, வயிறு கொஞ்சம் கலங்கத்தான் செய்கிறது! இப்படி பல கஷ்டங்கள் இருந்தாலும், அத்தியாவசிய போக்குவரத்துத் தேவைகளைத் தாண்டி, வாகனம் மீது பலருக்கும் ஆசை இருக்கவே செய்கிறது. 
 
 
 

எனவே இத்தகைய சூழலில், வெறும் 1 லிட்டர் பெட்ரோலில், அதாவது சுமார் 70 ரூபாயில், 376 கிமீ தூரம் சென்றால் எப்படி இருக்கும்? ''ஒருத்தர் ஆசைப்படலாம், ஆனா பேராசை படக்கூடாதுனு'' சொல்லுறீங்களா... ஆனா நல்லவிஷயத்துகாக பேராசைப்படுவதில் தப்பே இல்ல பாஸ்... திருச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் (Shivani Institute of Technology);
 
இறுதியாண்டு படிக்கும் நான்கு இளைஞர்கள், நிச்சயமாக 1 லிட்டர் பெட்ரோலில் 376 கிமீ செல்ல முடியும்னு சொல்லுறாங்க! முஹம்மது அசாரூதீன் மற்றும் இவரது குழுவில் இருக்கும் ஆர். அஜித்குமார், எம். சுதன், எஸ். புவனேஷ்வரன் ஆகிய இவர்கள்தான், இப்படிப்பட்ட அதிசய பைக்கைக் கண்டுபிடித்த கிள்ளாடிகள்! இந்த பைக்கின் மேக்கிங் பற்றி அவங்ககிட்ட பேசுனோம்.....

 
எப்படி இயங்குகிறது இந்த பைக்?

இந்த பைக், Dual mode முறையில் இயங்குகிறது; அதாவது பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கக்கூடிய இதை, Hybrid Technology என்று சொல்ல வேண்டும். ஏனெனில் உலகில் 93% மக்கள், பெட்ரோல்/டீசலால் இயக்கப்படும் வாகனங்களையே விரும்பி பயன்படுத்துகிறார்கள். மீதமுள்ள 7% மக்கள்தான் சோலார் மற்றும் பேட்டரியால் இயங்கும் வாகனத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆகவே பெட்ரோல் இன்ஜின் மற்றும் பேட்டரியை இணைத்து, புதிய முயற்சியில் Hybrid Technology-யால் உருவாக்கி இருக்கிறோம். இந்த பைக்கானது, பெட்ரோல் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்க கூடியது. எனவே முதலில் ஒரு லிட்டர் பெட்ரோலை டெங்க்கில் நிரப்பி வாகனத்தை ஸ்டார்ட் செய்து இயக்கும்போது, பைக்கின் முன்பக்க மற்றும் பின்பக்க சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார்கள் மூலமாக, முன் சக்கரம் மற்றும் பின் சக்கரம் என இரண்டிற்கும் தனித்தனி பேட்டரிக்களால் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
 
 
 

பின்பு பெட்ரோல் தீர்ந்தவுடன், முன் சக்கரத்தின் மூலம் உற்பத்தியான மின்சாரத்தை வைத்து பைக் செலுத்தப்படுகிறது. அப்போதும் கூட பின் சக்கரம் சுழலுவதால், அதே முறையில் மின்சாரம் தொடர்ந்து உற்பத்தியாகிக்கொண்டுதான் இருக்கும். இதனைத் தொடர்ந்து, முன் சக்கரத்தினால் உற்பத்தியான மின்சாரம் தீர்ந்தவுடன், பின் சக்கரத்தினால் உற்பத்தியான மின்சாரம், பைக்கை இயக்குவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. பைக் இப்படி இயங்கும்பொழுது, முன் சக்கரத்தில் மின்சாரம் உற்பத்தியாகும். இப்படி மாற்றிமாற்றி பேட்டரி பவரை உபயோகப்படுத்தும்போது, அந்த இரு பேட்டரிகளிலும் உள்ள மின்சாரம் ஒருநேரத்தில் காலியாகும்; எங்களது கணிப்பு சரியென்றால், எல்லாம் சேர்ந்து பைக் மொத்தமாக 350 கிமீ முதல் 370 கிமீ தூரம் வரை சென்றிருக்கும்! 
 

வாகனத்தின் தொழில்நுட்பம் என்ன?

''இந்த வாகனத்தின் அடிப்படை பாகமே, 8 பேட்டரிகள்தான்! இவை ஒவ்வொன்றும் 48 வாட் திறன் படைத்தவை! மேலும் நாம் பொதுவாக உபயோகிக்கும் இருசக்கர வாகனத்தின் வீல்களைப் பயன்படுத்தாமல், எடை குறைந்த, குறைவான Drag கொண்டிருக்கும் மெலிதான 2 எலெக்ட்ரிக்கல் E-bike சக்கரங்களைத்தான் பொருத்தியிருக்கிறோம். கூடவே பேட்டரிகளுக்கான சில பட்டன்களும் இடம்பெற்றுள்ளன. இவைதான் இந்த பைக்கின் உயிர்நாடி. முதலில் இந்த பைக்கில் நிரப்பப்படும் 1 லிட்டர் பெட்ரோலில், வெறும் 50 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே செல்ல முடியும்.
 
இதுதவிர முன் வீல்களுக்கு 4 பேட்டரியும், பின் வீல்களுக்கு 4 பேட்டரிகள் என மொத்தம் 8 பேட்டரிகள் பைக்கில் உபயோகப்படுத்துள்ளது. இதில் முன்பக்க வீல் இயங்கிக் கொண்டிருக்கும் போது. பின்பக்க வீலில் இருக்கும் பேட்டரி சார்ஜ் ஆகும்.இதுவே முன்பக்க வீலில் இணைக்கப்பட்டுள்ள பேட்டரியின் சார்ஜ் தீரும் போது, பின்பக்க வீல் மூலமாக பைக் இயங்கும்; அப்போது முன்பக்க வீலில் இருக்கும் பேட்டரி சார்ஜ் ஆகும். 
 
 
 

இப்படியே பைக் இயங்கி கொண்டிருக்கும் போது, ஒருகட்டத்தில் பேட்டரிகளின் சார்ஜ் முழுவதும் தீர்ந்து, இறுதியில் பைக் அதிகபட்சமாக 376 கிமீ தூரம் வரை பயணித்திருக்கும்! பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில், இந்த பைக்கில் சரியாக 376 கிலோ மீட்டர் செல்ல இயலாது. ஏனெனில் பைக்கில் பயணிக்கும் நபர்களின் எடை மற்றும் எண்ணிக்கை, சாலையின் தன்மை, பைக்கை ஓட்டும் தன்மை ஆகியவற்றை கணக்கில் கொள்ளும்போது, வாகனம் உத்தேசமாக 350 கிமீ முதல் 376 கிமீ வரை செல்லும் எனக் கண்டுபிடித்தோம்''
 
எனத் தன்னம்பிக்கையுடன் பேசினார்கள். இந்த அற்புதமான பைக்கைக் கண்டுபிடிக்க, கிட்டதட்ட 6 மாதங்களுக்கு மட்டும், அதற்கான ஆய்வுகளில் இந்த இளைஞர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக, இவர்களின் நண்பர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மிகவும் உதவியாக இருந்தனர் என்று பெருமைபடக் கூறிய பின்பு, இவர்கள் கண்டுபிடித்த பைக்கிலேயே புயலெனப் புறப்பட்டார்கள்!
 
 
 

செய்தி & படங்கள்: ஹ.ச.ஷஃபியுல்லா (மாணவப் பத்திரிகையாளர்)