இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் அப்பாச்சி RR 310S - 300சிசி டிவிஎஸ் பைக்கின் ஸ்பை படங்கள் உள்ளே!
Posted Date : 14:06 (02/06/2017)Last updated : 15:06 (02/06/2017)


 

 

தனது போட்டியாளர்களைவிட அசரடிக்கும் டிஸைன், அசத்தலான பெர்ஃபாமென்ஸ், அற்புதமான ஹேண்ட்லிங் என என்ட்ரி லெவல் ஸ்போர்ட்ஸ் பைக்குக்குத் தேவையான அம்சங்கள் அனைத்தையும், சரியான மிக்ஸிங்கில் கொண்டிருக்கும் அப்பாச்சி RTR சிரீஸ், இந்தியாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த ஆண்டு வெளியான அப்பாச்சி RTR 200 4V, பெர்ஃபாமென்ஸ் பைக் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
 
இந்தியாவில் பஜாஜ் - கேடிஎம் போலவே, பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைத் தயாரிப்பதற்காக, டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்கள் கூட்டணி அமைத்திருப்பது தெரிந்ததே. எனவே தனது பைக்குகளில் பஜாஜ், எப்படி கேடிஎம்மின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறதோ, அதேபோல டிவிஎஸ்ஸும் பிஎம்டபிள்யூ-வின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
 
 
 
 
பிஎம்டபிள்யூவின் என்ட்ரி லெவல் மாடலான G310R பைக்கை, இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றிருக்கிறது டிவிஎஸ். ஆதலால் அதனை அடிப்படையாகக் கொண்டு, டிவிஎஸ் வடிவமைத்த கான்செப்ட் பைக்தான் அக்குலா 310. இதைத்தான் கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
தன் தயாரிப்பு வெர்ஷனின் அதிகாரப்பூர்வ பெயர், அப்பாச்சி RR310S எனத் தகவல்கள் வந்த நிலையில், அந்த பைக் தற்போது இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கிறது. சென்னையில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றின் பார்க்கிங்கில், அப்பாச்சி RR310S நிறுத்தப்பட்டு இருந்தபோது அதனைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடனின் வாசகரான வி.வி. மணிபாரதி. 
 
 
 
 
விலை அதிகமான -  பவர்ஃபுல்லான - ஃபுல் பேரிங் உடனான டிவிஎஸ் பைக் போன்ற பெருமைகளுக்குச் சொந்தமாகப்போகும் அப்பாச்சி RR310S பைக்கின் ஆன்ரோடு விலை, 1.5 - 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டிவிஎஸ் காட்சிப்படுத்திய அக்குலா 310 பைக்தான், அப்பாச்சி RR 310S பைக்காக உருமாறியிருக்கிறது.
 
எனவே அதில் இருந்த பல ஹைலைட்டான விஷயங்களான தங்க நிற USD ஃபோர்க், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட், Omega வடிவ LED டெயில் லைட், LED இண்டிகேட்டர்கள், பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ், லிக்விட் கூலிங் உடனான 313 சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ட்ரெல்லிஸ் ஃப்ரேம், டிஜிட்டல் கன்சோல், ஸ்ப்ளிட் ஹேண்டில்பார் மற்றும் சீட்கள் என அதிக வசதிகள் இருப்பது ப்ளஸ்! மற்ற அப்பாச்சிகளைப் போலவே, இந்த பைக்கிலும் ஏபிஎஸ் அமைப்பை ஆப்ஷனலாக டிவிஎஸ் வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்!
 
 
 
 
அப்பாச்சி RTR 200 4V பைக்கில் Remora - பைரலி டயர்கள், கார்புரேட்டர் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் என அதிக ஆப்ஷன்கள் இருந்த நிலையில், அப்பாச்சி RR310S பைக்கில் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் மற்றும் மிஷ்லின் ரேடியல் டயர்கள் ஸ்டாண்டர்டாக அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்நாள் வரையில் தான் தயாரித்த பிரேக்குகளையே தனது தயாரிப்புகளில் பொருத்தி வந்த டிவிஎஸ், அப்பாச்சி RR310S பைக்கில் பிரெம்போ நிறுவனம் தயாரித்த Bybre கேலிப்பர்களைப் பொருத்தியுள்ளது.
 
அலாய் வீல்கள், ரியர் வியூ மிரர்கள், எக்ஸாஸ்ட் பைப், சஸ்பென்ஷன், இன்ஜின், ஸ்விட்ச்கியர் ஆகியவை, அப்படியே பிஎம்டபிள்யூ G310R பைக்கின் ஜெராக்ஸ்தான்! ஆகவே பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டில் லேட்டாக வந்தாலும், ஒரு லேட்டஸ்ட்டான பைக்கால் தனது மார்க்கெட் ஷேரை அதிகப்படுத்தும் விதமாக, அப்பாச்சி RR310S பைக்கை இந்தாண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் களமிறக்க உள்ளது டிவிஎஸ்! 
 
 
 
 
- ராகுல் சிவகுரு.