57.14 லட்சத்துக்குக் களமிறங்கியது, மெர்சிடீஸ் பென்ஸ் E 220d !
Posted Date : 18:10 (02/06/2017)
Last Updated : 18:14 (02/06/2017)

 


 

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், தான் அறிமுகப்படுத்திய 2017 E-க்ளாஸ் காரில், E 220d எனும் புதிய டீசல் வேரியன்ட்டைச் சேர்த்துள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். 57.14 லட்ச ரூபாய்க்குக் (புனே எக்ஸ் ஷோரூம் விலை) களமிறங்கியிருக்கும் இது, 3.0 லிட்டர் V6 டீசல் இன்ஜினைக் கொண்டிருக்கும் E 350d வேரியன்ட்டின் புனே எக்ஸ் ஷோரூம் விலையைவிட 12.32 லட்ச ரூபாய் குறைவு!
 
எனவே  E-க்ளாஸ் காரின் டீசல் மாடல்களின் விலை அதிகம் எனக் கருதியவர்களுக்கு, கச்சிதமான விலையில் ஒரு டீசல் வேரியன்ட்டை, மெர்சிடீஸ் பென்ஸ் வெளியிட்டிருக்கிறது என்றே சொல்லலாம். E 220d காரின் ஸ்டார் அட்ராக்‌ஷன், அதில் பொருத்தப்பட்டிருக்கும் முற்றிலும் புதிய 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்தான்!
 
 
 
 
ஏனெனில் முற்றிலும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினின் எடை வெறும் 168 கிலோதான் என்பதுடன், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முதல் 2,000சிசி டீசல் இன்ஜின் இது என்பது குறிப்பிடத்தக்கது! 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த அலுமினியத்தால் ஆன டீசல் இன்ஜின், 194bhp பவர் மற்றும் 40kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.
 
ரியர் வீல் டிரைவ் அமைப்பைக் கொண்டிருக்கும் E 220d, 0 - 100 கிமீ வேகத்தை 7.8 விநாடிகளில் எட்டுவதுடன், அதிகபட்சமாக 240 கிமீ வேகம் செல்லும் என மெர்சிடீஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தைகளில் Euro-VI மாசு விதிகளுக்கு ஏற்ப டியூன் செய்யப்பட்டிருக்கும் இந்த இன்ஜின், இந்தியாவில் BS-VI மாசு விதிகள் அமலுக்கு வரும் 2020-ம் ஆண்டில்தான் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த இன்ஜினை இப்போதைய BS-IV மாசு விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்திருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ்.
 
 
 
 
E-க்ளாஸ் காரின் விலை குறைவான  E 220d மற்றும் விலை அதிகமான E 350d டீசல் வேரியன்ட்களின் ஸ்டைலான தோற்றத்தில், பேட்ஜிங் மற்றும் புதிய 17 இன்ச் அலாய் வீல் டிசைனைத் தவிர, வேறு எந்த வித்தியாசங்களும் இல்லை; E 220d வேரியன்ட்டின் சொகுசான கேபினில் இடம்பெற்றுள்ள மர வேலைப்பாடுகள் மற்றும் அப்ஹோல்சரியைத் தாண்டி, வேறுபாடுகள் ஏதும் இல்லை. 34 டிகிரி Reclining வசதியுடன் கூடிய பின்பக்க இருக்கை, LED ஹெட்லைட் - டெயில் லைட், ஆம்பியன்ட் லைட்டிங், பனரோமிக் சன்ரூஃப்;
 
3 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, 7 காற்றுப்பைகள், ஏபிஎஸ், எலெக்ட்ரிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், Parktronic Active Parking Assist, இபிடி, 12.3 இன்ச் COMAND டச் ஸ்க்ரீன் சிஸ்டம், MID, டச் கன்ட்ரோல்களுடன் கூடிய லெதர் சுற்றப்பட்ட 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், Chauffeur பேக்கேஜ் எனப் பெரும்பான்மையான சிறப்பம்சங்கள் நீடித்தாலும், E 350d வேரியன்ட்டில் இருக்கும் ஏர் சஸ்பென்ஷன், பர்மிஸ்டர் ஹைஃபை ஆடியோ சிஸ்டம், சீட் மெமரி உடனான முன்பக்க இருக்கை, 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் இங்கே மிஸ்ஸிங்!
 
 
 
 
ஆடி A6, பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ஜாகுவார் XF, வால்வோ S90 ஆகிய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, E-க்ளாஸ் காரின் விலை சற்றே தூக்கலாக இருப்பதற்கு, அந்த காரின் LWB வடிவமைப்பே காரணம்! ஆனாலும் வாடிக்கையாளர்கள் இதற்கு அமோகமான ஆதரவை அளித்துள்ளதாக மெர்சிடீஸ் பென்ஸ் கூறியுள்ளது. E 220d வேரியன்ட்டின் சர்வீஸ் பேக்கேஜ், 2 ஆண்டுகளுக்கு வெறும் 76,600 ரூபாயிலிருந்து தொடங்குகிறது! 
 

- ராகுல் சிவகுரு. 
 
 
TAGS :   MERCEDES BENZ, INDIA, GERMANY, E-CLASS, 2017, LWB, CHINA, JAGUAR XF, VOLVO S90, AUDI A6, BMW 5 SERIES, DIESEL, PETROL, LUXURY SEDAN