ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனுக்குப் போட்டி... ஹோண்டா XRE 300 !
Posted Date : 07:31 (08/06/2017)
Last Updated : 07:44 (08/06/2017)
 
ஹோண்டா டூ-வீலர்ஸ் என்றவுடன், பலரது நினைவுக்கு உடனடியாக வருவது ஆக்டிவா, ஷைன், யூனிகார்ன் ஆகிய கம்யூட்டர் வகை டூ-வீலர்கள்தான்; முன்னே சொன்னவை அனைத்தும் ''அங்கில்ஸ் பைக்'' எனச் சொல்லுமளவிற்கு பழமையான டிசைனைக் கொண்டிருக்கின்றன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் ஹோண்டா அறிமுகப்படுத்திய லிவோ, ஷைன் SP, ஹார்னெட், நவி ஆகியவற்றைப் பார்க்கும்போது, தனது மரபுகளை உடைத்துவிட்டு, புதிய பாதையில் செல்ல யத்தனிப்பது புரிகிறது. இதன் வெளிப்பாடாக, இந்தியாவில் தற்போது டிரெண்ட்டிங்கில் இருக்கும் ஸ்போர்ட்ஸ்/அட்வென்ச்சர் டூரர் வகை  பைக் செக்மென்ட்டில், தனது XRE 300 பைக் வாயிலாக நுழையத் தயாராகிவிட்டது ஹோண்டா!
 
 
 
 
உலகளவில் 2009-ல் அறிமுகமான இந்த பைக், பிரேசிலின் டூ-வீலர் சந்தைக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட மாடலாகும். அட்வென்ச்சர் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் XRE 300 பைக்கில் இருப்பது, அதன் பெயருக்கு ஏற்ப 300சிசி இன்ஜின்தான்; (சரியாகச் சொல்வதென்றால், 4V - DOHC உடனான 291.6சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்). ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியைக் கொண்டிருக்கும் இந்த பைக், 25.4bhp பவரையும் - 2.76kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 
 
 
 
 
ஹீரோவின் இம்பல்ஸ் இந்தவகை பைக்தான் என்றாலும், அதனை எப்போதோ அந்நிறுவனம் தயாரிப்பில் இருந்து நிறுத்திவிட்டது. எனவே ஹோண்டாவின் XRE 300 பைக் இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, அதனோடு உடனடியாகப் போட்டி போடப்போகும் பைக்காக, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்தான் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்! அதனுடன் ஒப்பிடும்போது, 20மிமீ குறைவான நீளம் - 180மிமீ குறைவான உயரம் - 48 மிமீ குறைவான வீல்பேஸ் எனப் படுகாம்பேக்ட்டான பைக்காக இருக்கிறது XRE 300. ஆனால் ஹிமாலயனைவிட 60மிமீ கூடுதல் சீட் உயரம் மற்றும் 39 மிமீ கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதால், இந்தியர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்ற பைக்காகவும் இது இருக்கும் என நம்பலாம்.
 
 
 
 
முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் - 256மிமீ டிஸ்க் பிரேக் - 21 இன்ச் ஸ்போக் வீல்கள் மற்றும் பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்ஷன் - 220 மிமீ டிஸ்க் பிரேக் - 18 இன்ச் ஸ்போக் வீல்கள் என சஸ்பென்ஷன், பிரேக், வீல் ஆகிய மெக்கானிக்கல் பாகங்கள் சிம்பிளானதாக இருந்தாலும், அவை XRE 300 பைக்கின் அட்வென்ச்சர் டூரர் டிசைனுக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. பெரும்பாலான ஹோண்டா பைக்குகளில் இல்லாத இன்ஜின் கில் ஸ்விட்ச், டிஜிட்டல் மீட்டர்கள், அலுமினிய ஸ்விங் ஆர்ம் ஆகியவை, XRE 300 பைக்கில் இருக்கிறது; 
 
 
 
 
மேலும் கம்பைண்டு ஏபிஎஸ் மற்றும் Metzeler Enduro 3 டயர்கள் ஆப்ஷனலாக வழங்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க அம்சம். 13.8 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைக் கொண்டிருக்கும் இந்த பைக்கின் எடை வெறும் 146 கிலோதான் - அதாவது ஹிமாலயன் பைக்கைவிட 36 கிலோ எடை குறைவு மக்களே! இதுவே ஏபிஎஸ் உடனான XRE 300 பைக் என்றால், அதன் எடை 153 கிலோவாக அதிகரித்துவிடுகிறது. எனவே இந்த பைக்கின் 150 - 160 கிமீ டாப் ஸ்பீடு மற்றும் 25 - 30 கிமீ மைலேஜ் என்பது, நம்பக்கூடியதாகவே இருக்கிறது! இது ஹோண்டாவின் என்ட்ரி லெவல் அட்வென்ச்சர் டூரர் பைக் என்பதால், இதனை உள்நாட்டில் இருந்து பெறப்பட்ட பாகங்களைக் கொண்டு இங்கேயே தயாரிக்கும்போது, பைக்கைக் கச்சிதமான விலையில் களமிறக்குவது சுலபமானதாக இருக்கும் என நம்பலாம்.
 
 
 
 
 
ஆனால் இந்நாள்வரை இந்த பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து, ஹோண்டா அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை; ஆனால் இந்தியாவில் XRE 300 என்ற பெயருக்கான காப்புரிமையையும், ஆரம்பகட்ட டெஸ்ட்டிங் பணிகளைச் சத்தமில்லாமல் ஹோண்டா துவங்கிவிட்டதாகத் தகவல்! சுமார் 2 லட்ச ரூபாயில், உத்தேசமாக அக்டோபர் மாதத்தில் வெளிவரப்போகும் இந்த பைக்கிற்கு, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயனைத் தவிர, பிஎம்டபிள்யூவின் G310GS மற்றும் கேடிஎம் 390 அட்வென்ச்சர் ஆகிய அட்வென்ச்சர் பைக்குகள், கடும் சவாலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
 
 
- ராகுல் சிவகுரு. 
 
 
TAGS :   ROYAL ENFIELD, HIMALAYAN, HONDA, XRE 300, HERO IMPULSE, KTM 390 ADVENTURE, ADVENTURE BIKES, BMW, G310GS, INDIA, WORLD''S BIGGEST TWO WHEELER MARKET.