இனி தங்கம் போல. பெட்ரோல்/டீசல் விலையும் தினசரி மாறும்..!
Posted Date : 19:55 (16/06/2017)
Last Updated : 20:02 (16/06/2017)

 

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் நிகழும் மாற்றம் & அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவைக்கு ஏற்ப, நாடெங்கும் பெட்ரோல் - டீசல் விலையை, 15 நாள்களுக்கு ஒரு முறை, எண்ணெய் நிறுவனங்கள் இப்போது மாற்றிவருகின்றன. ஆனால் தங்கம் போலவே, பல சர்வதேச நாடுகளில் பெட்ரோல் - டீசல் விலை தினசரி மாற்றத்துக்கு உள்ளாகிறது. எனவே இந்தியாவிலும் பெட்ரோல் - டீசல் விலையை தினசரி மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.

 

 
எனவே பாண்டிச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டீகர் ஆகிய 5 நகரங்களில், பரிசோதனை அடிப்படையில் கடந்த மே 1, 2017 முதலாக, பெட்ரோல் - டீசல் விலை தினசரி மாற்றப்பட்டுவருகிறது. இது வெற்றிகரமாக அமைந்ததால், இம்முறையை நாடு முழுதும் அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்தது.
 
 
திடீர் ஸ்டிரைக் அறிவிப்பு... வாபஸ்.. நடந்தது என்ன?
 
 
இந்நிலையில் BP, HP, IOC ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், மத்திய பெட்ரோலியத்துறை மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சர் தர்மேந்திர பிராதனைக் கடந்த வாரம் இதுதொடர்பாகச் சந்தித்தனர். அப்போது பெட்ரோல் - டீசல் விலையை தினசரி மாற்றுவது குறித்து அவர்கள் மத்திய அமைச்சருடன் பேசினர். இதனைத் தொடர்ந்து, நாடெங்கும் பெட்ரோல் - டீசல் விலையை தினசரி மாற்றியமைக்க அவர் ஒப்புதல் அளித்து விட்டார். எனவே அதன்படி, நாளை முதல் (மே 16, 2017) முதல் இந்த விதிமுறை இந்தியா முழுதும் அமலுக்கு வருகிறது. தமிழ்நாடு மர்ரூ புதுச்சேரியில், சுமார் 4850 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்ளன.
 
 
 
 
இதற்கு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மத்திய அரசின் இந்த விலை நிர்ணயக் கொள்கையைக் கண்டித்து, நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. இந்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சரான தர்மேந்திர பிரதானை, அகில இந்திய பெட்ரோலியம் டீலர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் பிரபாகர் ரெட்டி சந்தித்துப் பேசினார். இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, நாளை முதலாக பெட்ரோல் பங்க் டீலர்கள் மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார். 
 
 
 
 
党பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக எங்களுக்கு எழுந்த பல பிரச்னைகளை, அமைச்சர் தீர்த்து வைத்தார். இதையடுத்து எங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றோம்・என இதுகுறித்து பிரபாகர் ரெட்டி கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு, அடுத்த நாளுக்கான விலை குறித்த விவரம் டீலர்களுக்கு தெரிவிக்கப்படும். கூடவே பெட்ரோல் பங்க்கில் இருக்கும் LED ஸ்க்ரீன் மூலம், அன்றைய பெட்ரோல் - டீசல் விலை விவரங்கள் பார்வைக்கு வரும். ஆக தினசரி நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் - டீசல் விலை, நள்ளிரவு 12 மணிக்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் அமல்படுத்தப்படும் என BP, HP, IOC ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
 
 
தினமும் விலையைத் தெரிந்து கொள்வது எப்படி?
 
 
ஆகவே பெட்ரோல் - டீசல் விலைகள் தினமும் எவ்வுளவு மாறுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள, அதற்கேற்ற முன்னேற்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் செய்துவிட்டன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், Fuel@IOC என்ற ஆப்பைப் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் இல்லாதவர்கள், RSP < SPACE > DEALER CODE போன்ற விபரங்களை, 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்பியும், அன்றைய பெட்ரோல் - டீசல் விலைகளைத் தெரிந்து கொள்ளலாம். 
 
 
 
 
இவர்களைத் தொடர்ந்து, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷனும் 党HPPRICE < SPACE > DEALER CODEh ஆகிய தகவல்களை, 9222201122 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி, அன்றைய பெட்ரோல் - டீசல் விலைகளைத் தெரிந்து கொள்ளும் வசதியைக் கொண்டுவந்திருக்கிறது; பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், 党RSP <SPACE > DEALER CODEh என்ன என்பதை, 9223112222 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி, அன்றைய பெட்ரோல் - டீசல் விலைகளைத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. 
 
 
 
 
இதுதவிர, 1800 - 22 - 4344 என்ற ஹாட்லைன் டோல் ஃப்ரி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். இப்படி அரசாங்கத்தைச் சேர்ந்த பெட்ரோலிய கார்ப்பரேஷன் நிறுவனங்கள், பெட்ரோல் - டீசல் விலைகளை அறிவதற்கு பல வசதிகளைச் செய்து தந்திருக்கும் நிலையில், தனியார் பெட்ரோலிய நிறுவனங்களான ஷெல், எஸ்ஸார் ஆகியோரிடமிருந்து எவ்விதமான அறிவிப்பும் இந்த நிமிடம் வரை வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
 
 - ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   PETROL, DIESEL, INDIA, IOC, SHELL, BP, HP, ESSAR, RELIANCE, PETROL BUNK, DAILY PRICE CHANGE, GOLD, SILVER.