இதை செய்தால், மழைக்காலத்தில் டூ-வீலர் ஓட்டுவது ஈஸி!
Posted Date : 11:31 (23/06/2017)
Last Updated : 11:37 (23/06/2017)

 

கோடை வெயிலின் உக்கிரம் முடிந்து, மழை துவங்கி விட்டதற்கான சாயல்கள் தென்படுகின்றன. வழுக்கலான சாலைகளில் டூ-வீலர்களில் செல்வது, சவால்மிக்க விஷயம் என்பதால், பாதுகாப்பில் அதிக கவனம் தேவை. எனவே மழைக்காலத்தில் பின்பற்றவேண்டிய முக்கியமான 5 டிப்ஸ்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை! இவற்றை முன்னெச்சரிக்கையுடன் கவனமாகச் செயல்பட்டு, சரியாகப் பின்பற்றினாலே, டூ-வீலர்களை ஓட்டுவதில் கிடைக்கும் மனநிறைவை எப்போதும் அனுபவிக்கலாம். 
 
 
 

பளிச் உடைகள் அவசியம்: மழை பெய்யும்போது, மற்ற வாகனங்களை நீங்கள் பார்ப்பதும், அவர்கள் உங்களைப் பார்ப்பதும் கடினமாகிவிடும். எனவே விலை அதிகமாக இருந்தாலும், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கக்கூடிய வாட்டர் ஃப்ரூப் ரெயின் கோட்டை வாங்கிவிடவும்; டூ-வீலரில் ஆங்காங்கே ரிஃப்ளெக்டர்கள் இருக்கும் என்றாலும், ரிஃப்ளெக்டிங் தன்மை கொண்ட ஸ்டிக்கர்களை பைக்கின் முக்கியமான இடங்களில் ஒட்டிவிடுவது நல்லது. மேலும் ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட்டைப் பயன்படுத்தினால், மழைநீர் முகத்தில் படுவதைத் தவிர்க்க முடியும். வைசரில் அதிக கீறல்கள் இருந்தால், முதல் வேளையாக வைசரை மாற்றிவிடுங்கள்; அதில் கார்களுக்குப் பயன்படுத்தப்படும் மெழுகைத் தடவும்போது, மழைநீர் அதில் தங்காமல் அப்படியே கீழே இறங்கிவிடும்!
 
 
 

பக்கா டயர் & எலெக்ட்ரிக்கல்ஸ்: நமக்கு கால்கள் எப்படியோ, டூ-வீலர்களுக்கு டயர்கள் அப்படி; எனவே அது எப்போதும் பெர்ஃபெக்ட்டாக இருப்பது அவசியம். எனவே டயரில் த்ரெட் பாதியளவுக்கும் குறைவாக இருந்தால், சற்றும் தாமதிக்காமல் டயர்களை மாற்றிவிடுங்கள். மேலும் ஹெட்லைட் - டெயில்லைட், இண்டிகேட்டர்கள், ஹாரன், இன்ஸ்ட்ரூமென்ட் டயல்கள் சரியாக இருக்கின்றனவா என்பதைச் செக் செய்யவும். வயர்களில் இன்சுலேஷன் டேப்பைச் சுற்றிவிட்டால், அதில் மழைநீர் தேங்காது என்பதுடன், வெட்டுகள் இருந்தாலும் அவை மூடப்பட்டுவிடும் என்பது ப்ளஸ். மழையால் பைக் விரைவில் அழுக்காகிவிடும் என்பதால், துருப்பிடிப்பதைத் தவிர்க்கவும், அடிக்கடி பைக்கைக் கழுவி விடுவது நன்மை தரும்.  
 
 
 

த்ராட்டில் & பிரேக்கில் கவனம்: எப்போதும் டூ-வீலரை விரட்டுபவரா நீங்கள்? அது எல்லா நேரத்திலும் கைகொடுக்காது பாஸ்! எனவே மழைக்காலத்திலாவது அதை மூட்டை கட்டிவைத்து விட்டு, டூ-வீலரை மென்மையாகக் கையாளுங்கள். த்ராட்டிலைத் தேவைக்கேற்ப மட்டும் பயன்படுத்துவதுடன், திருப்பங்களில் அதிகமாக டூ-வீலரை வளைக்காமல் இருக்கும்போது, டயர்களின் தடம் முழுதும் சாலையில் படிவதற்கான வாய்ப்புகள் அதிகம். த்ராட்டிலைப் போலவே, பிரேக்கிலும் முழு பலத்தைக் காட்டாமல், அளவாகப் பயன்படுத்தவும். மிக முக்கியமாக, முன்பக்க - பின்பக்க பிரேக்கை ஒரே நேரத்தில் பிடிக்கும்போது, வழுக்கலான சாலையில் டூ-வீலர் அலைபாயாமல் நிலையாக இருக்கும். 
 
 
 

வாகனங்களுக்கு இடையேயான இடைவெளி: மழை நேரத்தில் பிரேக் மற்றும் புலப்படும்தன்மை குறைந்துவிடும் என்பதால், முன்னே செல்லும் வாகனத்தை ஒட்டியபடியே செல்வதைத் தவிர்த்தல் நலம். ஏனெனில் ஒருவேளை அந்த வாகனம் திடீரென பிரேக் பிடித்தாலும், நீங்கள் உங்களது வாகனத்தை நிறுத்துவதற்கான நேரம் கிடைக்கும் என்பதுடன், முன்னே இருக்கும் வாகனத்தை இடிக்காமல் இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! மேலும் கனமழையாகவோ, பலத்த காற்றாகவோ இருக்கிறது என்றால், சாலையின் ஓரத்தில் டூ-வீலரை நிறுத்திவிட்டு, நீங்களும் சாலையில் இருந்து ஒதுங்கி நிற்பது பாதுகாப்பானது.   
 
 
 

சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும்: மற்ற நேரத்தைவிட, மழைக் காலத்தில் செல்லும்போது சாலையில் அதிக கவனத்துடன் இருக்கவும். ஏனெனில் கீழே விழுந்துகிடக்கும் மரம், சாலை நடுவே நடப்பவர்கள், குறுக்கே இருக்கும் விலங்குகள் என எதுவுமே சரிவரத் தெரியாது. டூ-வீலரின் வீல் உயரத்துக்குத் தேங்கி இருக்கும் நீரில் செல்லப்போகிறீர்கள் என்றால், இன்ஜின் ஆஃப் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்; அது எக்ஸாஸ்ட் பைப்பில் நீர் புகுவதைத் தவிர்த்துவிடும். அதேபோல பள்ளத்தின் உண்மையான ஆழம், மேலிருந்து தெரியாது என்பதால், நீர் தேங்கியிருக்கும் பள்ளங்களிலோ, தாழ்வான பகுதிகளிலோ, ஏறி இறங்குவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. 
 

 – ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   MONSOON, RIDING TIPS, SAFETY, WET ROAD, TYRE, BRAKES, RAIN COAT, LIGHTS, WIRING, FLOOD, CROSS WINDS, RAIN FALL, TWO WHEELER.