பெனெல்லி 302R... ஜீப் காம்பஸ்... புக் பண்ணிட்டீங்களா?
Posted Date : 15:06 (23/06/2017)Last updated : 15:06 (23/06/2017)

 

 

ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த நிபுணர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் காம்பஸ் எஸ்யூவியின் புக்கிங்கை, அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து விட்டது ஜீப்! இந்நிறுவனத்தின் முதல் 'Made in India' தயாரிப்பு என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான இந்த எஸ்யூவி, ஃபியட் க்ரைஸ்லர் நிறுவனத்துக்குச் சொந்தமான ரஞ்சன்கவுனில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. ஜீப்பின் இணையதளம் மற்றும் டீலர்களில், 50 ஆயிரம் ரூபாயைச் செலுத்தி, 5 வேரியன்ட் மற்றும் கலர்களில் பிடித்தமானதை புக் செய்ய முடியும்;

 

 

பெட்ரோல்/டீசல் இன்ஜின், 2 வீல் டிரைவ்/4வீல் டிரைவ், மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் எனப் பல ஆப்ஷன்களில் கிடைக்கும் காம்பஸ், முதற்கட்டமாக 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் -  6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் செட்-அப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசலில் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலும், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடலும், ஒன்றன்பின் ஒன்றாக பின்னர் வெளியாகும் எனத் தகவல்கள் வந்துள்ளன!   

 


 
 
ஜூலை மாதத்தில் தான் அறிமுகப்படுத்த உள்ள ஃபுல் ஃபேரிங் கொண்ட 300சிசி பைக்கான 302R பைக்கின் புக்கிங்கை, இந்தியா முழுக்க இருக்கும் தனது 25 ஷோரூம்களில் துவங்கிவிட்டது பெனெல்லி. இதில் நேக்கட் பைக்கான TNT 300 பைக்கில் இருக்கும் அதே 300சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் ஃப்ரேம், சஸ்பென்ஷன் ஆகியவற்றில் கணிசமான மாற்றங்கள் இருப்பது கவனிக்கத்தக்கது. சுமார் 190 கிலோ எடையுள்ள இந்த பைக்கை, ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்காகப் பொசிஷன் செய்ய உள்ளது பெனெல்லி.
 
 
 
 
மேலும் இது விற்பனைக்கு வருவதற்கு முன்பே, வாடிக்கையாளர்களிடம் இருந்து பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார், DSK மோட்டோ வீல்ஸ் நிறுவனத்தின் சேர்மன் சிரிஷ் குல்கர்னி. பெனெல்லி 302R பைக்கின் உத்தேச விலை பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை; என்றாலும், TNT 300 பைக்கின் சென்னை ஆன் ரோடு விலையே, 3.7 லட்சத்தைத் தாண்டும்போது, இதன் சென்னை ஆன் ரோடு விலை 4 லட்ச ருபாயைத் தாண்டுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது! 

 
 - ராகுல் சிவகுரு.