இதை செய்தால், மழைக்காலத்தில் டூ-வீலர் ஓட்டுவது ஈஸி! - பகுதி 2
Posted Date : 11:06 (26/06/2017)Last updated : 11:06 (26/06/2017)

 

 கோடை வெயிலின் உக்கிரம் முடிந்து, மழை துவங்கி விட்டதற்கான சாயல்கள் தென்படுகின்றன. வழுக்கலான சாலைகளில் டூ-வீலர்களில் செல்வது, சவால்மிக்க விஷயம் என்பதால், பாதுகாப்பில் அதிக கவனம் தேவை. எனவே மழைக்காலத்தில் பின்பற்றவேண்டிய 10 முக்கியமான டிப்ஸ்களின் தொகுப்பே இந்தக் கட்டுரை! இவற்றை முன்னெச்சரிக்கையுடன் கவனமாகச் செயல்பட்டு, சரியாகப் பின்பற்றினாலே, டூ-வீலர்களை ஓட்டுவதில் கிடைக்கும் மனநிறைவை எப்போதும் அனுபவிக்கலாம். 

 


 
 
1. A Stitch in Time Saves Nine என்ற கூற்றுக்கு ஏற்ப, சரியான இடைவெளியில் டூ-வீலரைச் சர்வீஸ் செய்துவிடுவது நல்லது; அதனால் டூ-வீலரின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்பதுடன், முக்கியமான சூழ்நிலைகளில் அது உங்களை நடுரோட்டில் தவிக்கவிடாமல் காப்பாற்றிவிடும். கடுமையாக மழை பெய்துகொண்டிருக்கும் போது, உங்கள் டூ-வீலர் பிரேக்-டவுன் ஆனால் எப்படி இருக்கும்? ஆத்தி கேட்கவே பயங்கரமாக இருக்குல்ல...

2. நீங்கள் பெட்ரோல் பங்க்குகளில், உங்களது டூ-வீலரின் டயர்களுக்குக் காற்றடிப்பவரா? உங்களுக்குத்தான் இந்த செய்தி. அங்கே எப்போதும் வழக்கத்தைவிட அதிகமான அழுத்தத்தில்தான் காற்றை நிரப்புவார்கள். மழைக்காலங்களில் சாலை வழுக்கும்தன்மை கொண்டதாக மாறிவிடும் என்பதால், டயர் சைஸுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அழுத்தத்தில் மட்டும் காற்றை நிரப்பவும்; அதனால் டயர்கள் முழுதும் சாலையில் தடம் பதிக்கும் என்பதுடன், ரோடு க்ரிப்பும் அதிகரிக்கும். 

3. பிரேக்குகளின் இறுக்கத்தைத் தேவையான அளவு வைத்துக்கொள்வதுடன், பிரேக் பேடுகளின் கண்டிஷன் மற்றும் பிரேக் ஆயிலின் அளவையும் செக் செய்துகொள்ளவும். ஏனெனில் மழையினால் சாலை ஏற்கனவே வழுக்க ஆரம்பித்துவிடும் என்பதால், மோசமான நிலையில் இருக்கும் பிரேக்குகளைப் பயன்படுத்தும் போது, ரைடரின் பய உணர்வு மேலும் அதிகரிக்கும். 
 
 
 

4. வாட்டர் ஃப்ரூப் ரெயின் கோட் போல, டூ-வீலரைப் பார்க் செய்யும்போது, வாட்டர் ஃப்ரூப் கவர் கொண்டு மூடிவிடவும்; இதனால் பெட்ரோல் டேங்க், பேட்டரி & ஏர் ஃபில்டர் பாக்ஸ், லைட்கள், செயின் ஸ்ப்ராக்கெட்டில் மழை நீர் புகுவதைத் தவிர்க்கலாம். தவிர சாவி துவாரம் மற்றும் ஸ்விட்ச்களின் மீது WD40-யைப் பயன்படுத்தும்போது, அது ஜாம் ஆகாமல் ஸ்மூத்தாக இயங்கும். 

5. சாலையின் இடதுபுறத்தில், நிலையான வேகத்தில் பயணிப்பது, பாதுகாப்பான உணர்வைத் தரும். ஏனெனில் அப்போதுதான் மழையினால் சாலையில் உண்டாகியிருக்கும் பள்ளங்கள், ஆயில் படிமம், சேறு, வீழ்ந்திருக்கும் மரக்கிளை ஆகியவற்றை முன்கூட்டியே கணித்து, அவற்றிலிருந்து ஒதுங்கிச் செல்ல முடியும். இந்நேரத்தில் உங்கள் டூ-வீலரில் Hazard லைட் இருந்தால், அதனை உபயோகப்படுத்தலாம். 

6. மழைக்காலத்தில் ஜிபிஎஸ் மீது கூடுதலாகக் கவனம் இருக்கட்டும்; அதில் நீங்கள் செல்லவேண்டிய இடத்தை விரைவில் எட்டிப்பிடிப்பதற்கான குறுக்குவழியைக் காண்பிக்கும் என்பதுடன், டிராஃபிக் அதிகமாக இருக்கும் ரூட்டையும் உங்களுக்கு உணர்த்திவிடும். இதனால் கணிசமான நேரம் மற்றும் பெட்ரோல் விரயமாவது தடுக்கப்படும் என்பதுடன், மழையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும் முடியும்.  
 

 
 
7. கரடுமுரடான சாலை அல்லது சேற்றினால் சூழப்பட்டிருக்கும் இடத்தில் பயணிக்க நேர்ந்தால், முன்னே சென்ற வாகனத்தின் டயர் தடத்தைப் பின்பற்றி அப்படியே சென்றுவிடுவது நன்மை பயக்கும். க்ளோவ்ஸ் மற்றும் பூட்ஸ்களைப் பயன்படுத்தும்போது, சேறு மேலே தெறித்தாலும், அது ஆடையில் படிவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு.

8. உங்கள் ஹெல்மெட்டில் வைசர், கூளிங் கிளாஸ் போல கருப்பாக இருக்கிறதா? ஆம் என்றால் அந்த Tinted வைசரைக் கழற்றிவிட்டு, Clear வைசரை வாங்கி மாட்டிவிடுங்கள். மேலும் ஈரம் படியாத துணி ஒன்றை, டூ-வீலரில் எப்போதுமே வைத்திருப்பது ஓகே. அது வைசரையும், ரியர் வியூ மிரர்களையும், கண்ணாடிகளையும் துடைப்பதற்கு உதவிகரமாக இருக்கும். 

9. கூடுமான வரை, மழை நேரத்தில் சாலையில் இருக்கும் Zebra Crossing, Lane Seperator, சாக்கடை மூடி ஆகியவற்றின் மீது செல்வதைத் தவிர்க்கலாம். ஏனெனில் அதன் மீது செல்லும்போது, டயர் சற்று வழுக்குவது போன்ற உணர்வைத் தரும். 
 

 
 
10. திருப்பங்களில் டூ-வீலரைச் செலுத்தும்போது, குறைவான வேகத்தில் செல்வதுடன், பிரேக் அடிக்காமலும் இருப்பது அவசியம். மேலும் அப்போது தேவையில்லாமல் உங்கள் சீட்டிங் பொசிஷனையும் மாற்றாதீர்கள். 
 

- ராகுல் சிவகுரு.