2018-ல்தான், பிஎம்டபிள்யூவின் G310R பைக் இந்தியாவுக்கு வருமாம்!
Posted Date : 12:06 (26/06/2017)Last updated : 12:06 (26/06/2017)

 

2015-ல் வெளியான நாளிலிருந்து, இந்தியாவில் இருக்கும் பைக் ஆர்வலர்கள் அனைவரையும் தன்வசம் ஈர்த்திருக்கும் பைக் எது என்றால், தயங்காமல் பிஎம்டபிள்யூவின் G310R பைக்கைக் கைகாட்டலாம். இந்தியாவுக்கு இப்போ வரும்... அப்போ வரும் எனத் தொடர் இழுபறியில் இருக்கும் இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகம், 2017-ன் பிற்பகுதியில் இருந்து 2018-ம் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தனது சூப்பர்பைக் ரேஞ்ச்சை (R1200, K1600, R NineT, S1000, S1000RR,  S1000XR , S1000R) சமீபத்தில் இந்தியாவில் களமிறக்கிய இந்நிறுவனம், தனது என்ட்ரி லெவல் பைக்கான G310R பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்ட போது, அமைதி காத்தது;
 
 
 
 
அதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ''இந்தியாவில் பிஎம்டபிள்யூவிற்கு, நாடெங்கும் வெறும் 4 டீலர்கள் மட்டுமே இப்போது உள்ளனர். ஒரு மாஸ் மார்க்கெட் என்ட்ரி லெவல் பைக்கை விற்பனை செய்வதற்கு அதிக எண்ணிக்கையில் டீலர்கள் வேண்டும் என்பதால், அதனைத் தேவைக்கு ஏற்ப அதிகரித்துவிட்ட பிறகு, பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் பிஎம்டபிள்யூ இருக்கிறது'' எனக் கூறியுள்ளார், பிஎம்டபிள்யூ இந்தியாவின் President விக்ரம் பவா. ஆகவே, இதனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி RR310S பைக், பிஎம்டபிள்யூ பைக்கிற்கு முன்பாகவே விற்பனைக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.
 

- ராகுல் சிவகுரு.