டெஸ்ட்டிங்கில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட்! என்ன எதிர்பார்க்கலாம்? #MahindraScorpio
Posted Date : 20:29 (27/06/2017)
Last Updated : 20:36 (27/06/2017)

 

 

இந்தியாவில் யுட்டிலிட்டி வாகன விற்பனையில் முன்னணி வகிக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவிகளில் ஒன்றுதான் ஸ்கார்ப்பியோ. டாடா சஃபாரி ஸ்டார்ம் தவிர அதன் செக்மென்ட்டில் இருக்கக்கூடிய ரெனோ டஸ்ட்டர், நிஸான் டெரானோ, ஹூண்டாய் க்ரெட்டா, மாருதி சுஸூகி எஸ்-க்ராஸ், ஹோண்டா BR-V என மாடர்ன் கார்களால் கடுமையான போட்டி நிலவி வருவதால்,
 
தற்போது 17 வேரியன்ட்களில் விற்பனையாகும் இரண்டாம் தலைமுறை மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனைக் களமிறக்கத் திட்டமிட்டுள்ளது மஹிந்திரா. கர்நாடகாவைத் தொடர்ந்து, சென்னையில் டெஸ்ட் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த எஸ்யூவியைப் படம் பிடித்திருக்கிறார், மோட்டார் விகடன் போட்டோ க்ராஃபர் ஜெயவேல்.
 
 
 
 
 
படங்களைப் பார்க்கும்போது, காரின் க்ரில் - ஹெட்லைட் - டெயில் லைட் - பம்பர்களின் பகுதி, முன்பக்க ஃபெண்டர், டெயில்கேட், அலாய் வீல்கள், பாடி க்ளாடிங் ஆகியவை Camouflage செய்யப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே அந்த இடங்களில் எஸ்யூவியின் ஸ்டைலை உயர்த்தும்படியான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்! இதில் இருக்கும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின்,
 
140bhp பவரை வெளிப்படுத்தும்படி ரீ-டியூன் செய்யப்படும் எனத் தகவல்கள் வருகின்றன, முன்பைவிட 20bhp கூடுதலாகக் கிடைப்பதால், டார்க் அளவுகளிலும் வித்தியாசம் இருக்கும் எனலாம். தற்போதைய மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் XUV 5OO-ல் இருக்கும் ஜப்பானிய நிறுவனமான Aisin Seiki தயாரித்திருக்கும் ரெஸ்பான்ஸிவான 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்படும் எனத் தெரிகிறது.
 
 
 
 
 
மேனுவல் கியர்பாக்ஸைப் பொறுத்தவரை, XUV 5OO-ல் இருக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் இங்கே இடம்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை! அதற்கேற்ப ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடல்களின் விற்பனையை, இந்த மாதத்தின் துவக்கத்திலேயே மஹிந்திரா நிறுத்திவிட்டது கவனிக்கத்தக்கது. மேலும் XUV 5OO-ல் சமீபத்தில் சேர்க்கப்பட்ட (Android Auto, Ecosense, Connected Apps, Emergency-Call)
 
போன்ற வசதிகளுடன் கூடிய புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட்டில் பயன்படுத்தப்படலாம். ஜூலை 1, 2017 முதலாக நாடெங்கும் ஜிஎஸ்டி வரி அமலாக இருப்பதால், மாற்றியமைக்கப்பட்ட விலையில் ஆகஸ்ட் மாதத்தில்தான் பெரும்பாலும் ஸ்கார்ப்பியோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமாகும் எனச் சொல்லப்படுகிறது.
 
 
 
 
 
இதனுடன் இதன் பிக்-அப் வெர்ஷனான ஸ்கார்ப்பியோ கெட்-அவே (Getaway)-வையும் அப்டேட் செய்ய இருக்கிறது மஹிந்திரா. இதில் சிங்கிள் கேப் / டூயல் கேப் (Single Cab / Double Cab) ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் இரண்டு மாடல்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தற்போதைய ஸ்கார்ப்பியோவின் தோற்றம் மற்றும் 120bhp பவரை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் mHawk டீசல் இன்ஜின் ஆகியவை, இங்கே அப்படியே இடம்பெயர்ந்துள்ளன. ஸ்பை படங்கள் இதனை உறுதிபடுத்துகின்றன.
 
ஆனால் இந்தவகை வாகனங்களை, கமர்ஷியல் வாகனமாக மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பதுடன், கமர்ஷியல் வாகனத்தை ஓட்டக்கூடிய லைசென்ஸ் இருக்க வேண்டியதும்தான் நெருடல்! டாடா ஸெனான் XT, இசுஸூ டி-மேக்ஸ் வி-க்ராஸ் (D-Max V-Cross) ஆகியவற்றுடன் போட்டியிடும் இந்த பிக்-அப்பின் அப்டேட் மாடல், ஏற்கனவே ஆஸ்திரேலியா, பார்சிலோனா ஆகிய நாடுகளில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது!   
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   MAHINDRA, INDIA, SCORPIO, SUV, TATA, SAFARI STORME, MARUTI, S-CROSS, RENAULT, DUSTER, NISSAN, TERRANO, HYUNDAI, CRETA, HONDA, BR-V, PREMIUM COMPACT VEHICLES, PETROL, DIESEL, FACELIFT.