2004 - 2012 வரையிலான காலத்தில், சென்னையில் அமைந்திருக்கும் தனது தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முந்தைய தலைமுறை ஃபிகோ மற்றும் ஃபியஸ்டா க்ளாசிக் கார்களை, ரீ-கால் செய்ய முடிவெடுத்திருக்கிறது, அமெரிக்க நிறுவனமான ஃபோர்டு. அதிகப்படியான அழுத்தத்தில் இயங்கும் தன்மைகொண்ட அந்த கார்களின் பவர் ஸ்டீயரிங்குக்கான ஹோஸில் ஏற்பட்டிருக்கும் பிரச்னையை இலவசமாகச் சரி செய்வதே, இத்தகைய ரீ-காலுக்கான காரணமாகச் சொல்லப்படுகிறது.
 
 
 
 
ஏனெனில் பவர் ஸ்டீயரிங்கிற்கான திரவம் லீக் ஆகி, அது ஒருவேளை காரின் எக்ஸாஸ்ட் பகுதியில் பட்டுவிட்டால், புகை உண்டாவதற்கான சாத்தியம் இருப்பதுடன், சில சந்தர்ப்பங்களில் கார் தீப்பிடிக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனவே குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட கார்களை வாங்கியுள்ளோருக்கு, ஃபோர்டு டீலர்களில் இருந்து அழைப்பு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற ரீ-கால், ஃபோர்டு நிறுவனத்துக்குப் புதிதல்ல; ஏற்கனவே கடந்த செப்டம்பர் 2013-ல், (ஜனவரி 2010 - ஆகஸ்ட் 2010) மற்றும் (மார்ச் 2011 - நவம்பர் 2011) ஆகிய மாதத்தில் தோராயமாகத் தயாரிக்கப்பட்ட 1.66 லட்சம் ஃபிகோ மற்றும் ஃபியஸ்டா கார்களை, இதே காரணத்துக்காக ஃபோர்டு ரீ-கால் செய்தது கவனிக்கத்தக்கது. 
 
 

- ராகுல் சிவகுரு.