ஜிஎஸ்டி - எந்தெந்த கார்களுக்கு எவ்வுளவு வரி? #GST #gstrollout
Posted Date : 12:01 (30/06/2017)
Last Updated : 12:10 (30/06/2017)

 

ஜூலை 1, 2017 முதலாக, நாடெங்கும் அமலுக்கு வருகிறது ஜிஎஸ்டி வரி. இந்நிலையில் இந்தப் புதிய வரியால், கார்களின் விலையில் என்னென்ன மாற்றம் இருக்கும்? இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், விலை வித்தியாசம் குறித்த தகவல்கள், தற்போது கிடைக்கப் பெற்றுள்ளன. ஜிஎஸ்டியின் அதிகபட்ச வரியான 28%தான், ஆட்டோமொபைல் துறையின் மீது விதிக்கப்பட்டுள்ளது. அதில் சிறிய கார்கள், பெரிய கார்கள், ஹைபிரிட் கார்கள், எலெக்ட்ரிக் கார்கள் என 4 செக்மென்ட் கார்களுக்கும்,
 
 
 
 
அவற்றின் நீளம் மற்றும் இன்ஜின் அளவுகள் பொறுத்து வரிகள் மாறுபடுகின்றன. எனவே தோராயமாக 2.25% முதல் 12% வரை, கார்களின் விலையில் மாறுதல் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால் கார் உற்பத்தியாளர்கள் அனைவரும், ஒட்டுமொத்த விலைக்குறைப்பை அப்படியே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்களா என்பதை, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! இதில் இடைப்பட்ட காலத்தில், மாத விற்பனை இலக்கு பாதிப்படையாமல் இருப்பதற்காக, லக்ஸூரி கார்கள் மற்றும் பட்ஜெட் கார்களின்மீது அதிக தள்ளுபடிகள் கிடைத்தன.     

 
4 மீட்டருக்கும் குறைவான நீளம் - 1.200சிசிக்கும் குறைவான பெட்ரோல் இன்ஜின் கொண்ட சிறிய கார்கள்
 
 
 

நானோ, க்விட், ஆல்ட்டோ, வேகன்-ஆர், செலெரியோ, இயான், இக்னிஸ் போன்ற ஹேட்ச்பேக் கார்களுக்கும், டிசையர், ஏமியோ, டிகோர் போன்ற காம்பேக்ட் செடான்களுக்கும், இந்நாள்வரை 31.5% வரி (Excise Duty+Cess+VAT+NCCD) விதிக்கப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டியின் வரவால், அது 29% வரியாக (28%GST+1%Cess) குறைந்துவிடும்! எனவே சிறிய கார்களின் விலையில், 2.5% வரை வீழ்ச்சி இருக்கும்.
 

4 மீட்டருக்கும் குறைவான நீளம் - 1,500சிசிக்கும் குறைவான டீசல் இன்ஜின் கொண்ட சிறிய கார்கள்
 
 
 

ஸ்விஃப்ட், பெலினோ, எலீட் i20, இக்னிஸ், ஃபிகோ, போலோ, ஜாஸ் போன்ற ஹேட்ச்பேக் கார்களுக்கும், டிசையர், ஏமியோ, ஆஸ்பயர், அமேஸ், எக்ஸென்ட், டிகோர் போன்ற காம்பேக்ட் செடான்களுக்கும், இந்நாள்வரை 33.25% வரி (Excise Duty+Cess+VAT+NCCD) விதிக்கப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டியின் வரவால், அது 31% வரியாக (28%GST+3%Cess) குறைந்துவிடும்! எனவே சிறிய கார்களின் விலையில், 2.25% வரை வீழ்ச்சி இருக்கும். 
 

4 மீட்டருக்கும் குறைவான நீளம் - 1.2 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் இன்ஜின் & 1.5 லிட்டருக்கும் அதிகமான டீசல் இன்ஜின் கொண்ட சிறிய கார்கள்
 
 
 

ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ, அவென்ச்சுரா, அர்பன் க்ராஸ் ஆகிய கார்களின் அபார்த் மாடல்கள், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டுள்ளன. அதேபோல ஃபோர்டு நிறுவனத்தின் எக்கோஸ்போர்ட் மற்றும் ஃபிகோ ஆட்டோமேட்டிக் கார்களில், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளன. ஹூண்டாய் எலீட் i20 காரில் ஆட்டோமேட்டிக் மாடலில், 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. மஹிந்திராவின் ஆஃப் ரோடு வாகனமான தார் ஜீப்பில், 2.5 லிட்டர் டீசல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வாகன் GTi காரில், 1.8 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இருக்கிறது. மினி கூப்பர் கார்களில், 2.0 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் உள்ளது. இப்படிப்பட்ட கார்களுக்கு, இந்நாள்வரை 46.7% வரி (Excise Duty+Cess+VAT+NCCD) விதிக்கப்பட்டது. ஆனால் ஜிஎஸ்டியின் வரவால், அது 43% வரியாக (28%GST+15%Cess) குறைந்துவிடும்! எனவே முன்னே சொன்ன கார்களின் விலையில், 3.7% வரை வீழ்ச்சி இருக்கும். 

 
4 மீட்டருக்கும் அதிக நீளம் - 1.2 லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் இன்ஜின் & 1.5 லிட்டருக்கும் அதிகமான டீசல் இன்ஜின் கொண்ட பெரிய கார்கள்
 
 
 

இது பெரும்பாலும் சிட்டி, வென்ட்டோ, சியாஸ், கரோலா, எலான்ட்ரா, ஆக்டேவியா, A6, E-க்ளாஸ், 5 சீரிஸ், A8, S-க்ளாஸ், 7 சீரிஸ் போன்ற அனைத்து வகை செடான் கார்களுக்கும் பொருந்தும். இந்நாள்வரை 51.8% வரி (Excise Duty+Cess+VAT+NCCD) விதிக்கப்பட்ட நிலையில், ஜிஎஸ்டி-யினால் அது 43% (28%GST+15%Cess) குறைந்துவிடும்! இதனால் செடான் கார்களின் விலையில், 8.8% வரை வீழ்ச்சி இருக்கும். 
 

பெட்ரோல் & டீசல் எஸ்யூவிகள்

 
 
 
க்ரெட்டா, டஸ்ட்டர், டூஸான், CR-V, ஃபார்ச்சூனர், எண்டேவர், GLE, X5 ஆகிய அனைத்து வகை எஸ்யூவிகளுக்கும், இந்நாள்வரை 55.3% வரி (Excise Duty+Cess+VAT+NCCD) விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி-யினால் அது 43% (28%GST+15%Cess) குறைந்துவிடும்! இதனால் எஸ்யூவிகளின் விலையில், 12.3% வரை வீழ்ச்சி இருக்கும். இது கமர்ஷியல் வாகனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ஹைபிரிட் கார்கள்
 
 
 

அக்கார்டு, கேம்ரி, RX450H, ES300H, ப்ரையஸ், i8, XC90 ஆகிய ஹைபிரிட் கார்களுக்கும், சியாஸ், எர்டிகா, ஸ்கார்ப்பியோ போன்ற ஹைபிரிட் தொழில்நுட்பங்களைக் கொண்ட கார்களுக்கும், இந்நாள்வரை 30.3% வரி (Excise Duty+Cess+VAT+NCCD) விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி-யினால் அது 43% (28%GST+15%Cess) அதிகரித்துவிடும்! எனவே ஹைபிரிட் கார்களின் விலையில், 12.7% வரை ஏற்றம் இருக்கும்.
 

எலெக்ட்ரிக் கார்கள்
 
 
 

e20, e-வெரிட்டோ, e-சுப்ரோ போன்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு, இந்நாள்வரை 20.5% வரி Excise Duty+Cess+VAT+NCCD) விதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி-யினால் அது 12 சதவிகிதமாகக் குறைந்துவிடும்! இதனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் கார்களின் விலையில், 8.5% வரை வீழ்ச்சி இருக்கும். 
 
 - ராகுல் சிவகுரு.
 
 
 
TAGS :   GST, INDIA, 28%, SMALL CARS, BIG CARS, SUV, HYBRIDS, ELECTRIC CARS, COMMERCIAL VEHICLES, SEDANS, MPV, 4 METER, 1,200 CC PETROL, 1,500 CC DIESEL, ENGINES.