இந்தியாவில் மாருதிக்குப் போட்டி; சீனாவின் மாருதி வருகிறது! #SAIC #China
Posted Date : 15:33 (01/07/2017)
Last Updated : 15:41 (01/07/2017)

 

 

 

கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியாவில் தனது கார்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கு ஏற்ற இடம் மற்றும் நேரத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது, சீனாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான SAIC நிறுவனம். இந்தியாவில் மாருதி சுஸூகி எப்படியோ, சீனாவில் Shanghai Automotive Industry Corporation அப்படி; தற்போது போட்டிமிகுந்த இந்திய கார் சந்தையில் கால்பதிக்க, அந்நிறுவனம் நாள் குறித்துவிட்டதாக, அதிகாரப்பூர்வமான தகவல்கள் வருகின்றன. தனது குழும நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டனைச் சேர்ந்த MG-யுடன் சேர்ந்தே, இந்தியாவில் கார்களைத் தயாரிக்க உள்ளது.
 
SAIC நிறுவனம், 10 ஆண்டுகளுக்கு முன்பு, கன்வர்ட்டபிள் மற்றும் ஸ்போர்ட்ஸ் கூபே கார்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற 93 ஆண்டுகளாக கார்களைத் தயாரிக்கும் Morris Garages நிறுவனத்தின் தாய் கழகமான Nanjing Automobiles நிறுவனத்தை, 2007-ல் வாங்கியது. அதற்கேற்ப MG மோட்டார் இந்தியா என்ற பெயரில்தான் அந்நிறுவனம் களமிறங்க உள்ளதுடன், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் CEO-வான ராஜீவ் சாபாவையே, தனது நிறுவனத்தின் இந்திய பிரிவுக்கான தலைவராக நியமித்திருக்கிறது. ஆக சீன நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவைச் சேர்ந்த ஒருவரையே தலைவராக நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

 
 
ஜெனரல் மோட்டார்ஸ் சீனா நிறுவனமும், SAIC நிறுவனமும் கூட்டாளிகளாக இருந்தது அறிந்ததே. மேலும் ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா ஆகிய நிறுவனங்களுடனும் கூட்டணி அமைத்திருக்கிறது SAIC. கடந்த ஜூலை 2011 முதல் ஜூலை 2013 வரை, ஜெனரல் மோட்டார்ஸ் சீனா நிறுவனத்தின் சேல்ஸ் & மார்க்கெட்டிங் பிரிவின் Vice President-ஆக சிறப்பான முறையில் பணியாற்றியதாலேயே, MG மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் என்கின்ற உயர்ந்த பதவி, ராஜீவ் சாபாவைத் தேடி வந்திருக்கிறது எனத் தெரிகிறது.
 
மேலும் பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நஷ்டத்தில்தான் இயங்கி வந்திருக்கிறது என்றாலும், 2005-2006 காலகட்டத்தில் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் CEO-வாக ராஜீவ் சாபா இருந்தபோது, அந்நிறுவனம் கணிசமான லாபத்தைப் பெற்றிருக்கிறது கவனிக்கத்தக்கது. இவரைத் தவிர, ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த பி. பாலேந்திரனை, MG மோட்டார் இந்தியா நிறுவனத்தின் Executive Director-ஆக நியமனம் செய்திருக்கிறது SAIC. 
 
 
 

2019 முதலாக இந்தியாவில் கார் உற்பத்தி துவங்கும் என்பதுடன், SAIC நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இங்கே தயாரிக்கப்படும் என்பதுடன், அவை MG லோகோவுடன்தான் விற்பனைக்கு வரும்; மேலும் SAIC-யின் குழும நிறுவனங்களான Maxus, Roewe போன்றவையும், இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதற்கான சாத்தியங்களும் அதிகம்! உலகளவில் ஹேட்ச்பேக், செடான், எம்பிவி, எஸ்யூவி, ஹைபிரிட், எலெக்ட்ரிக் என அனைத்து செக்மென்ட்களிலும் கார்களைத் தயாரித்து விற்பனை செய்துவரும் SAIC நிறுவனம்,
 
இந்தியாவில் முதற்கட்டமாக எஸ்யுவிகளையே அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு அந்த செக்மென்ட்டில் தற்போது நிலவி வரும் டிமாண்டே காரணமாகச் சொல்லப்படுகிறது. ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம், கடந்த மாதத்தின் இறுதியில்தான், குஜராத்தை அடுத்த Halol-ல் இருக்கும் தனது கார் தொழிற்சாலைக்கு மூடுவிழாவை நடத்தியது. அந்த தொழிற்சாலையையே, தனது MG மோட்டார் இந்தியா நிறுவனத்தின் கார்களைத் தயாரிப்பதற்காகக் கையகபடுத்திக் கொள்ளும் முடிவில் இருக்கிறது SAIC.  
 
 
 

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும், Competition Commission of India, விற்பனைக்கான அனுமதியை ஏற்கனவே வழங்கிவிட்டது. ஆனால் ஊழியர்கள் - டீலர்கள் - அரசாணை எனப் பலபிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா. ஒருவேளை SAIC நிறுவனம், Halol கார் தொழிற்சாலையை வாங்கிவிட்டால், சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாயை அங்கே முதலீடு செய்ய உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு, அனைவருக்கும் கட்டுபடியாகக்கூடிய விலையில், அதிக வசதிகளுடன் கூடிய ஸ்டைலான, தரமான கார்களை உற்பத்தி செய்வதே,
 
MG மோட்டார் இந்தியா நிறுவனத்தின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் SAIC நிறுவனத்தின் தயாரிப்புகளான என்ஜாய் மற்றும் செயில் ஆகியவை, குறைவான விலையைக் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த தரத்தில் பின்தங்கியே இருந்தன என்பதை இங்கு சொல்லியாக வேண்டும். இந்நிலையில் 2020-க்குள்ளாக, உலகின் 3-வது பெரிய கார் சந்தையாக மாறவிருக்கிறது இந்தியா. எனவே ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் போல, இடையிலேயே கார் விற்பனையை நிறுத்தாமல், தொடர்ந்து செயல்படும் eMake in Indiaf நிறுவனமாக MG மோட்டார் இந்தியா நிறுவனம் இருக்கவேண்டும் என்பதே, பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது!   
 
 
 


- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   MG, SAIC, CHINA, INDIA, CHEVROLET, GENERAL MOTORS, HALOL, RAJEEV CHABA, ROVER, TATA INDICA, SONALIKA RHINO, ENJOY, SAIL, SAIL U-VA, MARUTI SUZUKI, MAXUS, ROEWE.