2017-ல் விற்பனையில் சாதனை படைத்த மாருதி கார்கள் இவைதான்!
Posted Date : 18:41 (01/07/2017)
Last Updated : 18:45 (01/07/2017)

 

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்துவரும் மாருதி சுஸூகி, தனது மே-2017 மாத விற்பனையில், இரண்டு சாதனைகளைச் செய்திருக்கிறது. ஆம்! 2017 துவங்கி, இன்றோடு ஆறு மாதங்கள் முடிந்துவிட்டது. இந்நிலையில் மே-2017 மாத நிலவரப்படி, 2017-ன் முதல் 5 மாதங்களின் முடிவில், 1.07 லட்சத்துக்கும் அதிகமான ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன; அதன்படி பார்த்தால், மாதத்துக்குச் சராசரியாக 21,400 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், மே-2017ல் அதிகபட்சமாக 23,618 ஆல்ட்டோ கார்கள் விற்பனையானது கவனிக்கத்தக்கது.
 
 
 
 
ஆனால் ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரவிருப்பதால், ஜூன் மாதத்தில் ஒட்டுமொத்த கார் விற்பனையே குறைந்திருப்பதாகத் தகவல்கள் வந்த நிலையில், ஆல்ட்டோ தனது விற்பனை எண்ணிக்கையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறதா என்பது, அடுத்த வாரத்தில் தெரிந்துவிடும்! ரெனோ க்விட் காரால் கடும் போட்டி ஏற்பட்டாலும், அறிமுகமான நாள் முதலாக, அதாவது 17 ஆண்டுகளாக, இந்தியாவின் நம்பர்-1 செல்லிங் காராக, ஆல்ட்டோ திகழ்ந்து வருகிறது!

மாருதி சுஸூகியின் பட்ஜெட் ஹேட்ச்பேக்கான ஆல்ட்டோவைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் பிரிமியம் ஹேட்ச்பேக்கான பெலினோவும், விற்பனையில் அசத்தி வருகிறது. இது அறிமுகமாகி, இன்னும் 2 ஆண்டுகளே நிறைவடையாத நிலையில் (20 மாதங்கள்), 2 லட்சம் கார்கள் என்கின்ற விற்பனை எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது பெலினோ! கடந்த 3 மாதங்களில், மாதத்துக்குச் சராசரியாக 16 ஆயிரம் கார்கள் விற்பனையானதை இங்கு சொல்லியாக வேண்டும். ஏப்ரல்-17 மாதத்தில் அதிகபட்சமாக, 17,530 பெலினோ கார்கள் விற்பனையாகின.
 
 
 
 
அந்த 2 லட்சத்தில், சுமார் 1.54 லட்சம் பெட்ரோல் மாடல்களும்,  44 ஆயிரம் டீசல் மாடல்களும் அடக்கம். மேலும் இந்த 20 மாத காலத்தில், பெலினோவின் எக்ஸ் ஷோரூம் விலை, சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது. ஆனால் என்ன, மாதாந்திர விற்பனையும் கூடவே அதிகரித்திருக்கிறதே? மாருதி சுஸூகியின் நெக்ஸா டீலரில் விற்பனை செய்யப்படும் பெலினோவின் ஸ்போர்ட்டி வேரியன்ட்டான RS, போலோ GT TSI காருக்குப் போட்டியாக, இந்தாண்டு மார்ச் மாதத்தில் வெளிவந்தது.  
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   MARUTI SUZUKI, INDIA, ALTO, 800, K10, BALENO, RS, PETROL, DIESEL, FIAT, 2017.