ஜி.எஸ்.டி - டூவீலர்களுக்கு எவ்வுளவு வரி? #gstrollout
Posted Date : 20:36 (03/07/2017)
Last Updated : 20:49 (03/07/2017)

 

2017... பெரும்பாலோனோருக்கு கொஞ்சம் சுமாராகவே இருந்திருக்கிறது என்றாலும், டூவீலர் வாங்கியவர்களுக்கு இது நிச்சயம் மறக்க முடியாத ஆண்டுதான்! ஏப்ரல் 1, 2017 முதலாக, நாடெங்கும் அமலுக்கு வந்த BS-IV மாசு விதிகள் காரணமாக, அதற்கு முந்தைய இரண்டு தினங்களுக்கு (மார்ச் 30-31, 2017), டூவீலர் தயாரிப்பாளர்கள் அனைவரும், போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகளை வழங்கினர். இதற்குத் தங்கள் கைவசம் இருக்கும் BS-III டூ-வீலர்களை விற்பனை செய்வதற்குத்தான் என்றாலும், அது வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் டூவீலர்களைப் பெற உதவியது என்றால் அது மிகையில்லை. (ஜூலை 1, 2017) முதலாக, நாடு முழுவதும் ஜி.எஸ்.டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி பயன்பாட்டிற்கு வந்துவிட்டது! இதனால் கார்களைத் தொடர்ந்து, டூவீலர்களின் விலையிலும் மாற்றம்... முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
 
 
 
 
இந்நாள்வரை, அனைத்து வகையான டூவீலர்களுக்கும், 30% வரி (Excise Duty + VAT + CST + NCCD) பின்பற்றப்பட்டது. ஜி.எஸ்.டியின் அதிகபட்ச வரி வரம்பான 28%தான், ஆட்டோமொபைல் துறையின் மீது விதிக்கப்பட்டுள்ளது. எனவே இனி 350சிசிக்கும் குறைவான டூவீலர்களுக்கு 28% வரியும், 350சிசிக்கும் அதிகமான டூவீலர்களுக்கு 31% வரியும் (28% GST + 3% CESS) செலுத்தினாலே போதுமானது; இதனால் ஸ்கூட்டர்கள், கம்யூட்டர் பைக்குகள், என்ட்ரி லெவல் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளின் எக்ஸ் ஷோரூம் விலை, 2% குறையும்; ஆனால் ராயல் என்ஃபீல்டின் 500சிசிக்கும் அதிகமான மாடல்கள், கேடிஎம்மின் 390சிசி மாடல்கள், பஜாஜின் டொமினார், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரிமியம் & சூப்பர் பைக்ஸ் (ஹார்லி டேவிட்சன், ட்ரையம்ப், பெனெல்லி, கவாஸாகி) ஆகியவற்றின் எக்ஸ் ஷோரூம் விலை, 1% உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 

ஜி.எஸ்.டியினால், பட்ஜெட் டூவீலர்களின் விலை குறையுமா?

ஒருபுறம் 350சிசிக்கும் குறைவான டூவீலர்களின் விலை குறையும் எனச் சொல்லப்பட்டாலும், உண்மை நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது. ஏனெனில் இதே ஜி.எஸ்.டியினால் புதிய டூவீலர்களின் ரெஜிஸ்டரேஷன் - இன்சூரன்ஸ் - உதிரிபாகங்கள் ஆகியவற்றின் விலையும், சுமார் 10% வரை அதிகரிக்க உள்ளது. ஆகவே ஒருவர் இந்த மாதத்தில் புதிதாக வாங்கும் டூவீலரின் எக்ஸ் ஷோரூம் விலையில் சேமிக்கும் பணம்,
 
 
 
 
அதன் முன்பதிவு - காப்பிடு - பராமரிப்புச் செலவுகள் ஆகியவற்றில் மறைமுகமாகப் பறிக்கப்படுகிறது! எனவே 350சிசிக்கும் குறைவான டூ-வீலர்களின் எக்ஸ் ஷோரூம் விலையில், முன்பைவிடப் பெரிய வித்தியாசம் ஏதும் இருக்காது என்றே தெரிகிறது. ஆனால் 350சிசிக்கும் அதிகமான பிரிமியம் & சூப்பர் பைக்குகளின் எக்ஸ் ஷோரூம் விலை, கணிசமாக உயர்வதற்கான சாத்தியங்கள் அதிகம்! ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கும் 28% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் கணிசமாக அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. 

இதுவரை விலை மாறிய டூவீலர்கள் எவை?
 
 
 

UM மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், தான் இந்தியாவில் விற்பனை செய்யும் Renegade ஸ்போர்ட் எஸ் மற்றும் கமாண்டோ ஆகிய க்ரூஸர் பைக்குகளின் விலைகள், முறையே 4,200 ரூபாய் மற்றும் 5,685 ரூபாய் குறைந்துள்ளது. அந்த பைக்குகளில் 280சிசி இன்ஜின் இருப்பதாலேயே, இந்த விலைக்குறைப்பு சாத்தியமானதாகத் தெரிகிறது. டொமினாரைத் தவிர, மீதமுள்ள பஜாஜ் மாடல்கள் (பல்ஸர், CT100, டிஸ்கவர், பிளாட்டினா) அனைத்தும் 350சிசிக்குள்ளாகவே இருப்பதால், அந்நிறுவன டூவீலர்களின் விலையும் 2,000 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. ஆனால் பஜாஜுக்குச் சொந்தமான கேடிஎம்மின் தயாரிப்புகளின் விலை, கணிசமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை கிடைக்கப் பெறவில்லை! 350சிசிக்குட்பட்ட டூவீலர்களாக இருந்தாலும், டியூக் 200 & RC 200 பைக்குகளின் விலை,
 
 
 
 
முறையே 4,065 ரூபாய் & 4,790 ரூபாய் அதிகரித்துள்ளது. இதுவே டியூக் 250 என்றால், அது முன்பைவிட 4,430 ரூபாய் அதிகம்;  ஆனால் 373சிசி இன்ஜின் கொண்ட டியூக் 390 பைக்கின் விலை, வெறும் 630 ரூபாய் மட்டுமே உயர்ந்திருப்பது வியப்பளிக்கிறது!  ஆனால் RC 390 பைக்கின் விலையோ, 5,800 ரூபாய் ஏற்றப்பட்டிருக்கிறது. யமஹா, ஹோண்டா, சுஸூகி, ஹீரோ, டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்புகள் அனைத்தும் 350சிசிக்குள்ளானதாக இருப்பதால், அவற்றின் விலைகளும் 2% குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்! இதுவே ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 350சிசி மாடல்கள் (புல்லட், எலெக்ட்ரா, க்ளாஸிக், தண்டர்பேர்டு) அனைத்தும், முன்பைவிட 3,000 ரூபாய் வரை விலை குறையும் எனத் தெரிகிறது.  
 

 - ராகுல் சிவகுரு.
 
TAGS :   HONDA, HERO, YAMAHA, SUZUKI, TVS, KTM, BAJAJ, INDIA, ROYAL ENFIELD, GST, PRICE CUT, DISCOUNT, BS-III, BS-IV, AHO, 350CC, 28%, 30%, FI