2017 வெர்னாவின் டீசரை வெளியிட்டது ஹூண்டாய் ! #Hyundaiaccent
Posted Date : 18:26 (04/07/2017)
Last Updated : 18:39 (04/07/2017)

 

 

 

ஹோண்டா சிட்டி, மாருதி சுஸூகி சியாஸ், ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, ஸ்கோடா ரேபிட் போன்ற மிட் சைஸ் செடான் கார்களுக்குப் போட்டியாக, முற்றிலும் புதிய வெர்னாவைக் களமிறக்க உள்ளது ஹூண்டாய். இது ஏற்கனவே ரஷ்யா, கனடா, சீனா ஆகிய நாடுகளில், கடந்தாண்டு இறுதியிலேயே விற்பனைக்கு வந்துவிட்டது;

Fuidic Sculpture 2.0 டிசைன் கோட்பாடுகளின் படியே இந்தப் புதிய செடான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாலும், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட் - டெயில் லைட், 17 இன்ச் டயமன்ட் கட் அலாய் வீல்களுடன், பார்ப்பதற்கு மினி எலான்ட்ரா போன்ற தோற்றத்தில் கவர்கிறது புதிய வெர்னா!

 

 

மேலும் காரின் அளவுகளில் (15 மிமீ அதிக நீளம் - 29மிமீ அதிக அகலம் - 10மிமீ அதிக வீல்பேஸ் - 16 லிட்டர் அதிக பூட் ஸ்பேஸ்) முன்னேற்றம் இருப்பதால், முன்பைவிட அதிக இடவசதியை இதில் எதிர்பார்க்கலாம்; கிரவுண்ட் கிளியரன்ஸ் 10மிமீ குறைந்துவிட்டதுடன், பழைய காரைவிடப் புதிய காரின் எடை, வெறும் 10 கிலோ என்பது கவனிக்கத்தக்கது.

அதேபோல புதிய வெர்னாவின் கேபினிலும், எலான்ட்ராவின் பாதிப்பு தூக்கலாகவே இருக்கிறது; சில்வர் ஃப்னிஷுடன் கூடிய சென்டர் கன்சோல், ஆன்ட்ராய்டு ஆட்டோ - ஆப்பிள் கார் ப்ளே - மிரர் லிங்க் ஆகிய கனெக்ட்டிவிட்டி வசதிகளைக் கொண்ட 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோ டெயின்மென்ட் சிஸ்டம், கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவற்றை, இதற்கானச் சிறந்த உதாரணங்களாகக் கைகாட்டலாம்.

 

 

இன்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை, தற்போதைய காரில் இருக்கும் அதே 1.4 லிட்டர் & 1.6 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின்களே இங்கும் இடம்பெற்றுள்ளன; என்றாலும் மாருதி சுஸூகி சியாஸ் போல, Mild ஹைபிரிட் சிஸ்டத்தைச் சேர்க்கும் முடிவில் இருக்கிறது ஹூண்டாய். தவிர ஸ்டார்ட்-ஸ்டாப் சிஸ்டம், Brake Energy Regeneration போன்ற தொழில்நுட்பங்கள் காரில் இடம்பெறும் என்பதால், பழைய காரைவிட 2-5% கூடுதல் மைலேஜை எதிர்பார்க்கலாம்;

ஆனால் ஹைப்ரிட் கார்களின் மீதான ஜிஎஸ்டி வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், இதைக் காரில் சேர்ப்பது குறித்து, ஹூண்டாய் விரைந்து முடிவெடுக்கும் என நம்பலாம். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர, 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் ஆப்ஷனலாக வழங்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்!

 

 

புதிய வெர்னாவின் கட்டுமானத்தில் 54.5% High Strength ஸ்டீல் & Structural Adhesives இடம்பெற்றுள்ளதால், முன்பைவிட காரின் உறுதித்தன்மை 32% அதிகரித்திருக்கிறது. இதனுடன் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷனும், சிறப்பான ஓட்டுதல் அனுபவத்துக்காக டியூன் செய்யப்படும் எனலாம். 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், ABS, 2 காற்றுப்பைகள் ஆகியவை அனைத்து வேரியன்ட்களிலும் ஸ்டாண்டர்டாக இருப்பதுடன்,

டாப் வேரியன்ட்டில் EBD,ESP, 6 காற்றுப்பைகள் என அதிக பாதுகாப்பு வசதிகள் இருப்பது பெரிய ப்ளஸ். வருகின்ற ஆகஸ்ட் 22, 2017 அன்று அறிமுகமாக உள்ள புதிய வெர்னாவின் டீசர்கள், தற்போது வைரலாகி வருகின்றன. இவற்றில் காரின் க்ரில், ஹெட்லைட், டேஷ்போர்டு ஆகியவற்றின் டிசைன் அம்சங்கள், தெளிவாகத் தெரிகின்றன.

 


– ராகுல் சிவகுரு.
 
 
 

 

TAGS :   HYUNDAI, VERNA, INDIA, MIDSIZE SEDAN, HONDA, CITY, MARUTI SUZUKI, CIAZ, SKODA, RAPID, VOLKSWAGEN, VENTO, PETROL, DIESEL, AUTOMATIC GEARBOX, 4 CYLINDER ENGINE.