பயணிகளின் பாதுகாப்பிற்காக, உறுதிமொழி ஏற்ற, சேலம் அரசு போக்குவரத்து மண்டலம்!
Posted Date : 16:22 (10/07/2017)
Last Updated : 16:33 (10/07/2017)

 

தமிழகத்தில் செயல்பட்டுவரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில், சேலம் அரசுப் போக்குவரத்து கழகமும் ஒன்று; அங்கே பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தங்களுடைய பணியில் கூடுதல் கவனம் செலுத்தி, பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில், உறுதிமொழி ஏற்றுக் கொண்டுள்ளனர்! மேலும் அவர்கள் ஏற்ற உறுதிமொழியை, தங்களுடைய சீருடையில் அணிந்து, பணிக்கு வந்துள்ளனர்; இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ''பாதுகாப்பான - விபத்தில்லாத பயணம், பயணிகளின் பாதுகாப்பு, அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு ஆகியவற்றைப் பயணிகளுக்கு உணர்த்தும் விதமாக,

 

 

இந்த உறுதிமொழியினை ஓட்டுநர்களும் நடத்துநர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சேலம் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்பட்டு வரும் புறநகர் மற்றும் மாநகரப் பேருந்துகளில் பணியாற்றுபவர்கள், இந்த உறுதிமொழியைக் கடைப்பிடிக்க உள்ளனர். இதுவரை சேலம் - நாமக்கல் - தர்மபுரி - கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் பணியாற்றும் பணியாளர்கள் (11500 பேர்) உறுதிமொழி ஏற்றுள்ளனர். இவர்களைத் தவிர, பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், தனித்தனியாக தங்களுடைய பணியில் கவனம் செலுத்தும் விதமாக உறுதி ஏற்றுள்ளனர்'' என்றார். 

 

''நான்கு வழிச் சாலைகளில், இடதுபுறமாக பேருந்தை இயக்குதல்; இடதுபுறத்தில் பேருந்தை முந்தாமல், பாதுகாப்பாகப் பேருந்தை இயக்குதல்; முன்னால் செல்லும் வாகனத்தைத் தொடர்ந்து செல்லும்போது, 10 மீட்டர் இடைவெளி விட்டுச் செல்வது; பேருந்தில்  மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்யும்போதோ அல்லது யாராவது சாலையை கடக்க முயன்றாலோ, மிகவும் கவனமாகப் பேருந்தை இயக்குவேன்'' போன்ற உறுதிமொழிகளை, பேருந்து ஓட்டுநர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதே போல நடத்துநர்களும், ''பயணிகள் படியில் பயணம் செய்தால், அவர்களை மேலே வருமாறும்; பேருந்து நிலையம் வருவதற்கு முன்பாகவே, பேருந்து நிலையத்தின் பெயரைக் கூறி, பயணிகள் சரியான பேருந்து நிலையத்தில் இறங்க உதவிபுரிவேன்; மாற்றுத்திறனாளிகள் மீது கூடுதல் கவனத்தைச் செலுத்தி, அவர்களுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வேன்'' போன்ற பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றுள்ளனர்.
 
 
 
 
''ஓட்டுநர்களும் - நடத்துநர்களும், ஜூலை ஒன்றாம் தேதி முதல், இத்தகைய உறுதிமொழியினை ஏற்றுப் பணிக்கு வந்துள்ளனர். இம்மாதம் இறுதிவரை, அந்த உறுதிமொழி அட்டையை, தங்களது சீருடையில் அணிந்தே பணிக்கு வருவார்கள்; ஆக தினமும் இந்த உறுதிமொழிகளைப் பார்க்கும்போது, அவர்கள் மனதில் பயணிகள் பாதுகாப்பு பற்றிய கவனம் நிரந்தரமாக ஏற்பட்டுவிடும்; விரைவில் ஓட்டுநர்கள் & நடத்துநர்கள் பார்வையில் படும்படி, பயணிகளின் பாதுகாப்பு பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்க உள்ளோம். சேலம் போக்குவரத்துக் கழகம் சார்பில், இதே போன்று கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், பாதுகாப்பான பயணம் மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்றவற்றை வலியுறுத்தி, மூவிங் கியர் உறுதிமொழி என்ற பெயரில் அதனைப் பின்பற்றினோம். தற்போது இரண்டாவது முயற்சியாக, ஒட்டுநர் - நடத்துநர் உறுதிமொழி ஏற்பைக் கடைபிடிக்க உள்ளோம்" என்றார்.
 
 
இதுகுறித்து, நடத்துநர் ஒருவரிடம் பேசினோம், "அரசுப் பேருந்துகளில் பணியாற்றும் ஒருசில ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், பயணிகளின் பாதுகாப்பைப் பற்றி எவ்விதமான அக்கறையும் கொள்ளாமல், தரக்குறைவாக நடந்துகொள்கின்றனர். இதனால் அரசு பேருந்து பற்றி, மக்களிடம் தவறான எண்ணம் உடனடியாக ஏற்பட்டுவிடுகிறது. மேலும் கவனக்குறைவு காரணமாக, விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால்தான், அரசுப் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
 
 
 
 
இது போன்ற குறைகளைப் போக்கும் விதமாக, சேலம் போக்குவரத்துக் கழகம் சார்பில், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சிதான், இந்த உறுதிமொழி ஏற்பு; தினமும் உறுதிமொழியை அணிந்து வருவதால், பணியின் போது நம்முடைய மனதில் மாற்றம் ஏற்பட்டு, பயணிகள் நலனில் அக்கறை கொண்டாலே, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதுடன், போக்குவரத்துக் கழகத்தையும் சிறப்பாகச் செயல்பட வைக்க முடியும்; எனவேதான், இதுபோன்ற நடவடிக்கைகளை வரவேற்கிறோம்" என்றார்.
 

 
 
சேலம் போக்குவரத்துக் கழகம், தொடர்ச்சியாகப் பயணிகளின்மீது அக்கறை கொண்டு, பாதுகாப்பான & விபத்தில்லாத பயணம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளைச் செயல்படுத்திவருகிறது. அவர்களுக்கு நம்முடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரித்துகொள்வோம்! தமிழகத்தில் உள்ள மற்ற போக்குவரத்துக் கழகங்களும், இதுபோன்ற முன்மாதிரி நடவடிக்கைகளின் உதவியுடன், பயணிகளின்மீது அக்கறை கொள்வதோடு மட்டுமல்லாமல் போக்குவரத்து கழகங்களையும் சிறப்பாகச் செயல்படுத்த முடியும் எனத் தோன்றுகிறது!


கட்டுரை: லோ.பிரபுகுமார் - மாணவப் பத்திரிகையாளர்

படங்கள்: க.மணிவண்ணன் - மாணவப் பத்திரிகையாளர்
 

 

TAGS :