2 ஸ்ட்ரோக் சாம்பியன்கள்! பகுதி-1: யமஹா!
Posted Date : 19:09 (15/07/2017)
Last Updated : 19:20 (15/07/2017)

 

2 ஸ்ட்ரோக்... இதைக் கேட்டவுடன் பலரது நினைவுகள், 1980-களை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடும்; அப்போது இளையராஜாவின் பாடல்களைத் தவிர, யமஹா RX100 & RD350, சுஸூகி மேக்ஸ் 100R & ஷோகன், யெஸ்டி & ராஜ்தூத் பைக்குகளும் ட்ரெண்டிங்கில் இருந்தன! அந்த 2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கே உரிய நீல நிறப் புகை மற்றும் ஸ்பெஷலான எக்ஸாஸ்ட் சத்தம், அப்போதும் இப்போதும் எப்போதுமே, பைக் ஆர்வலர்களின் இதயத்துக்கு ஆக்ஸிஜனாகவும், அவர்களின் காதுகளுக்கு சங்கீதமாகவும் இருந்து வருகின்றன. அந்த பைக்குகளை ஓட்டும்போது கிடைக்கும் பரவச அனுபவத்தை, அந்த பைக்கை ஓட்டியவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஆனால் எத்தகைய வெற்றிகரமான தயாரிப்பாக இருந்தாலும், எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டுதானே? அதேபோல  உலகளவில் ஏற்பட்ட கடுமையான மாசு கட்டுப்பாடு விதிகளால், தனது இருப்பிடத்தை இழந்திருந்த 2 ஸ்ட்ரோக் தொழில்நுட்பத்தை, கேடிஎம் நிறுவனம் உயிர்பித்திருக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களின் பட்டியலில் இடம்பிடித்துவிட்ட 2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கு,  இன்றைய மில்லினியல் யுகத்திலும், யூஸ்டு பைக் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பதால்,எந்த நிலையில் பைக் இருந்தாலும், என்ன விலையாக இருந்தாலும், அவற்றைப் போட்டிப் போட்டுக் கொண்டு வாங்க, இதன் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்! அவ்வுளவு ஏன்? இன்னும் சில ரேஸ்களில், 2 ஸ்ட்ரோக் பைக்குகள் பயன்படுத்தப்படுவதே, அதன் தரத்துக்கும் - மங்காத புகழுக்கும் சாட்சி! இந்தியாவில் பைக்குகளின் பொற்காலம் எனக் கூறப்படும் 1980-1990களில் அதிகம் விற்பனையான 2 ஸ்ட்ரோக் பைக்குகளை, மீண்டும் திரும்பிப் பார்ப்போமா? 


யமஹா RD350
 
 
 

''பைக் என்றால், அதிக மைலேஜ் தரவேண்டும்'' என்ற எண்ணம், மக்களிடையே பரவிக் கொண்டிருந்த காலத்தில் வெளிவந்த ''பெர்ஃபாமென்ஸ் பைக்'' தான் RD350. ராயல் என்ஃபீல்டு புல்லட் மற்றும் ஜாவா யெஸ்டி ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக, 1983 முதல் 1990 வரை இந்தியாவில் இந்த பைக் விற்பனையானது. ஜப்பானிய நிறுவனமான யமஹாவிடமிருந்து அனுமதி பெற்ற எஸ்கார்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் இதனைத் தயாரித்தது. அதாவது ஜப்பானில் யமஹா 350B என்ற பெயரில் விற்பனையான பைக்தான், இந்தியாவுக்கு ஏற்ற சின்னச் சின்ன மாற்றங்களுடன். RD350 என்ற பெயருடன் விற்பனைக்கு வந்தது.
 
அதன் பெயரில் இருக்கும் RD-க்கு, Rajdoot என அர்த்தம் சொன்னாலும், அதன் உண்மையான விரிவாக்கம் gRace Developedh. அதற்கேற்ப 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், 7-Port 2 ஸ்ட்ரோக் அலுமினியம் இன்ஜின், பேரலல் ட்வின் சிலிண்டர் அமைப்பு, இரண்டு சைலன்ஸர், இரண்டு கார்புரேட்டர் என RD350-ன் இன்ஜின், அந்த காலத்தில் மிகவும் மாடர்ன்னான தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்தது. 0 - 60 கிமீ வேகத்தை, 4 விநாடிக்கும் குறைவான நேரத்தில் எட்டக்கூடிய அந்த பைக், மிரட்டலான பெர்ஃபாமென்ஸுக்குப் பெயர் பெற்றது. ஒன்றைப் பெற வேண்டுமானால், மற்றொன்றை இழக்க வேண்டியதுதானே உலக மரபு?
 
 
 
 
அதற்கேற்ப இந்த பவர்ஃபுல் பைக்கின் மைலேஜ், மிகவும் சுமாராகவே இருந்தது. இந்த குறைபாட்டைக் களையும் விதமாக, eHTf (High Torque - 30.5bhp) & eLTf (Low Torque - 27bhp) எனும் இரு வேரியன்ட்களில் வெளிவந்தது RD350. ஆனால் பைக்கின் விலையைக் கட்டுக்குள் வைக்க, இருபுறமும் 7'' டிரம் பிரேக்குகளையே பொருத்தியிருந்தது யமஹா. இதனால் 150கிமீ வேகம் வரை செல்லக்கூடிய பைக்காக இருந்தாலும், திறன் குறைவான பிரேக்குகள் இருந்ததால், அனுபவமற்றவர்கள் இந்த பைக்கை ஓட்டும்போது, ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டிருக்கின்றன. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எம்ஜிஆர் போல, பைக்கர்கள் மத்தியில் அழியாப் புகழைப் பெற்றிருக்கும் RD350,
 
யூஸ்டு பைக் மார்க்கெட்டில் அதிகப்படியான விலை மற்றும் டிமாண்டைப் பெற்றிருக்கிறது! 1983-ல் அறிமுகமானபோது, புத்தம் புதிய RD350 பைக்கின் விலை, வெறும் 18,000 ரூபாய் மட்டுமே! ஆனால் தற்போது 27 ஆண்டுகள் முதல் 34 ஆண்டுகள் வரையிலான இந்த பைக்குகளின் தற்போதைய விலை, சுமார் 1.50 லட்சத்தில் இருந்துதான் துவங்குகிறது! அதுவும் பைக் நல்ல கண்டிஷனில் இருந்தால், 2.5 லட்சம் வரை விலை போவதற்கும் சாத்தியங்கள் அதிகம்! ஆனால் இப்போதைக்கு, இந்த பைக்கை வைத்திருப்பவர்கள் யாரும், அதனை விற்பதற்குத் தயாராக இல்லை; தவிர இந்த பைக்கை வாங்கியவுடன் பலர் செய்யும் முதல் விஷயம், முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக்கை மாட்டுவதுதான்!

 
யமஹா RX100
 
 
 

குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் சிக்கல் இல்லாத இன்ஜின் ஆகியவற்றால் புகழ்பெற்றிருந்த சுஸூகியின் AX-100 பைக்குக்குப் போட்டியாக, யமஹா அறிமுகப்படுத்திய பைக்தான் RX100. இரண்டுமே 100சிசி திறன் கொண்டவையாக இருந்தாலும், குணத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தன என்பதே உண்மை! 100சிசியில் ஒரு கம்யூட்டர் பைக்காக சுஸூகி AX-100 இருந்தது என்றால், 100சிசியில் ஒரு பெர்ஃபாமென்ஸ் பைக்காக யமஹா RX100 இருந்தது; RD350 பைக்கைத் தொடர்ந்து, RX100 பைக்கை இந்தியாவில் தயாரிப்பதற்கான உரிமையைப் பெற்றது எஸ்கார்ட்ஸ் நிறுவனம்.
 
எனவே ஜப்பானில் விற்பனையான RX100 பைக்கின் உதிரிபாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு, இங்கு விற்பனைக்கு வந்தது RX100. அப்படி ஆரம்பகாலங்களில் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட பைக்குகளின் இன்ஜின் கேஸில், ''Made In Japan'' எனப் பதியப்பட்டிருக்கும். ''கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது'' என்பதற்கேற்ப, 11 bhp பவருடன் அட்டகாசமான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்திய இந்த பைக்கின் இன்ஜின், அளவில் 98சிசிதான் என்பதையே பலர் நம்ப மறுத்தனர். இன்னும் சொல்லப்போனால், 100சிசியில் 100கிமீ வேகம் செல்லக்கூடிய ஒரே பைக் இதுதான் மக்களே!
 
 
 
 
ஏனெனில் முன்னெ சொன்ன RD350 பைக் அண்ணன் என்றால், RX100தான் தம்பி; அதற்கேற்ப RX100 பைக்கிலும் 7-Port 2 ஸ்ட்ரோக் அலுமினியம் இன்ஜின், பராமரிப்பே தேவைப்படாத எலெக்ட்ரானிக் இக்னீஷன், இன்டேக் போர்ட்டில் Reed Valve போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. 1984 முதல் 1996 வரை தயாரிக்கப்பட்ட இந்த பைக், நாட்டில் கடுமையான மாசு கட்டுப்பாட்டு விதிகள் அமலுக்கு வந்ததால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதன் பிறகு 135சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன், RX-G மற்றும் RX-Z எனும் இரு வேரியன்ட்களில்,  RX100-ன் அடுத்த தலைமுறை மாடல் வெளிவந்தது. இதில் டேக்கோமீட்டர், டிஸ்க் பிரேக், பிகினி ஃபேரிங், ஃப்யூல் கேஜ், இன்ஜின் கில் ஸ்விட்ச் என மாடர்ன் வசதிகள் இருந்தாலும், குறைவான பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜ் காரணமாக, இரண்டுமே RX100 அளவுக்கு இந்திய சந்தையில் வெற்றி பெறவில்லை.
 
 
 
 
இறுதியாக 2003 முதல் 2005 வரை விற்பனையான RX135 பைக்கில், 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் ஆகியவை பொருத்தப்பட்டு, விற்பனை செய்யப்பட்டது. முன்னே சொன்ன RD350 பைக்கைப் போலவே, RX100 பைக்கின் வரலாற்றிலும் ஒரு கரும்புள்ளி உண்டு. அதாவது, செயின் திருட்டு மற்றும் போதைப் பொருள் கடத்தல் போன்ற விஷயங்களுக்கு, இந்த பைக் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு இந்த பைக்கின் உடனடி பிக்-அப், சுலபமான கையாளுமை, குறைவான எடை, காம்பேக்ட் சைஸ், பொறி பறக்கும் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் இன்ஜின் ஆகியவை பிரதானமான காரணிகள்.

இன்று யமஹா பைக்குகளைப் பற்றிப் பார்த்துவிட்டோம்... சுஸூகியின் 2 ஸ்ட்ரோக் பைக்குகளைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்!  
 
- ராகுல் சிவகுரு.
 
 

 

TAGS :   YAMAHA, RD350, RX100, HT, LT, INDIA, 2 STROKE, SINGLE CYLINDER, PARALLEL TWIN, POWER, PICKUP, PERFOMANCE, MILEAGE, POLLUTION, DISC BRAKE, SELF START, DRUM BRAKE, GRAPHICS, FAIRING.