2 ஸ்ட்ரோக் சாம்பியன்கள்! பகுதி-2: சுஸூகி!
Posted Date : 20:51 (18/07/2017)
Last Updated : 21:02 (18/07/2017)

 

2 ஸ்ட்ரோக்... இந்த வார்த்தையைக் கேட்டவுடன் பலரது நினைவுகள், 1980-1990களை நோக்கிப் பயணிக்கத் துவங்கிவிடும்; ஏனெனில் அப்போது இளையராஜாவின் பாடல்களைத் தவிர, யமஹா RX100 & RD350, சுஸூகி மேக்ஸ் 100R & ஷோகன், யெஸ்டி & ராஜ்தூத் போன்ற 2 ஸ்ட்ரோக் பைக்குகளும் டாப் ட்ரெண்டிங்கில் இருந்தன! 2 ஸ்ட்ரோக் பைக்குகளுக்கே உரித்தான நீலநிறப் புகை, அதிரடியான பெர்ஃபாமென்ஸ், தனித்துவமான எக்ஸாஸ்ட் சத்தம் ஆகியவை, அப்போதும் இப்போதும் எப்போதுமே, பைக் காதலர்களின் இதயத்துக்கு ஆக்ஸிஜனாகவும், அவர்களின் காதுகளுக்கு சங்கீதமாகவும் இருக்கின்றன.

அத்தகைய பைக்குகளை ஓட்டும்போது கிடைக்கும் மனநிறைவை, அந்த பைக்கை ஒருமுறையாவது ஓட்டியவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்! ஆனால் சந்தையில் வெற்றிகரமான தயாரிப்பாக இருந்தாலும், அதற்கும் ஒரு முடிவு உண்டுதானே? உலகளவில் பயன்பாட்டிற்கு வந்த கடுமையான மாசு கட்டுப்பாடு விதிகளால், தனது இருப்பிடத்தை 2 ஸ்ட்ரோக் பைக்குகள் இழக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. தற்போது 2 ஸ்ட்ரோக் தொழில்நுட்பத்தை, தனது மோட்டோ-க்ராஸ் பைக்குகளால் கேடிஎம் நிறுவனம் உயிர்பித்திருக்கிறது.

 

 

வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் 2 ஸ்ட்ரோக் பைக்குகள், இன்றைய மில்லினியல் யுகத்திலும், யூஸ்டு பைக் மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றுக்கு அதிகப்படியான டிமாண்ட் இருப்பதால், எந்த நிலையில் பைக் இருந்தாலும், என்ன விலையாக இருந்தாலும், அவற்றைக் கொத்திக் கொண்டு போக, இதன் ரசிகர்கள் ரெடியாக இருக்கிறார்கள். இன்றைக்கும் சில ரேஸ்களில், 2 ஸ்ட்ரோக் பைக்குகள் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதே, அதன் தரத்துக்கும் - பவருக்கும் சாட்சி!

மேலும் எத்தனையோ நவீனமான பைக்குகள் வந்திருந்தாலும், கிளாஸிக் பைக்குகளில் சாலையில் கெத்தாகச் செல்லும்போது, எல்லா கண்களும் நம் மீதுதான் இருக்கும்; அப்போது நமக்குள் ஏற்படும் உணர்வை, விவரிக்க வார்த்தைகளே இல்லை! இந்தியாவில் பைக்குகளின் பொற்காலம் எனக் கூறப்படும் 1980-1990களில் அதிகம் விற்பனையான 2 ஸ்ட்ரோக் பைக்குகளை, மீண்டும் திரும்பிப் பார்ப்போமா? யமஹா பைக்குகளைத் தொடர்ந்து, மற்றொரு ஜப்பானிய நிறுவனமான சுஸூகியின் 2 ஸ்ட்ரோக் பைக்குகளைப் பற்றி இப்போது பார்ப்போம்;

 
சுஸூகி AX100
 
 
 

இந்திய பைக் மார்க்கெட்டில், 1984-ம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட பைக்குகளான புல்லட், ஜாவா, ராஜ்தூத் ஆகியவை, பெரிதாகவும் கனமாகவும் இருந்ததால், அவற்றைக் கையாள்வது கடினமான ஒன்றாக இருந்தது. மேலும் இந்த காரணத்தாலேயே, அந்த பைக்குகளின் மைலேஜும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. எனவே இந்த ''ஹெவி-வெயிட்'' பைக்குகளை, ''லைட்-வெயிட்'' பைக்கான சுஸூகியின் AX100 வீழ்த்தியதுதான் முரண்; இந்தியாவின் வாகன சந்தையில் பெரிய புரட்சிக்கு வித்திட்ட இந்த பைக்கை, அப்போது மொபெட் தயாரிப்பில் வெற்றிகரமாக இருந்த இந்திய நிறுவனமான டிவிஎஸ், ஜப்பானின் சுஸூகியுடன் இணைந்து,
 
'இந்த் சுஸூகி' என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.  'ஒரு இந்திய நிறுவனம், வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து, முதன்முதலாக தயாரித்த பைக்' என்ற பெருமை இதற்கு உண்டு. 7.8 bhp பவரை வெளிப்படுத்தும் சிங்கிள் சிலிண்டர், 2 ஸ்ட்ரோக், 98.2 சிசி இன்ஜினைக் கொண்டிருந்த இந்த பைக், போதுமான பெர்ஃபாமென்ஸுடன் அதிக மைலேஜையும் சேர்த்துத் தந்ததால், மிகவும் குறுகிய காலத்திலேயே பிரபலமடைந்தது! இந்த பைக்கின் இன்ஜின், காலத்தைத் தாண்டிய பல நவீன தொழில்நுட்பங்களோடு இருந்ததால், சுமார் 20 ஆண்டு காலத்துக்கு, எந்தவித மாற்றங்களும் செய்யாமல், இந்த பைக் நமது நாட்டில் விற்பனையானது!
 
 
 
 
எப்படி ஸ்ப்ளெண்டரில் இருக்கும் இன்ஜினைக் கொண்டு, ஹீரோ பல பைக்குகளைத் (HF Dawn, HF Deluxe, Splendor Pro, Splendor +, Passion Pro) தயாரிக்கிறதோ, அதைப் போலவே ஒரே இன்ஜின் - பல மாடல் பைக் என்ற உத்தியைப் பின்பற்றியது சுஸூகி. Supra, Samurai, Max 100R ஆகிய பைக்குகளை, இதற்கான சிறந்த உதாரணங்களாகச் சொல்லலாம். நாம் முன்பே சொன்னது போல. இந்த ''லைட்-வெயிட்'' பைக்கின் எடை, வெறும் 98 கிலோ மட்டுமே! இதனால் மற்ற பைக்குகளுடன் ஒப்பிடும்போது, கையாள்வதற்கு மிகவும் சுலபமாக இருந்ததுடன், முதன்முறையாக பைக் ஓட்டுபவர்களுக்கு ஏற்ற பைக்காகவும் AX100 இருந்தது.
 
மேலும் அப்போது விற்பனை செய்யப்பட்ட பைக்குகளுடன் ஒப்பிடும்போது, இதன் பராமரிப்புச் செலவுகளும் மிகக் குறைவாக இருந்தது. ஜப்பானிய தயாரிப்புகளுக்கே உரித்தான தரம் மற்றும் நம்பகத்தன்மையும் கொண்ட தயாரிப்பாக, 'இந்த் சுஸூகி AX100' பைக் பெயர் பெற்றது. இதன் தரத்தை எடுத்துரைப்பது போல, டிவிஎஸ் இதனை ''No Problem Bike'' என்றே விளம்பரப்படுத்தியது. தவிர இந்த பைக்கைக் காலத்துக்கு ஏற்ற வகையில், சுஸூகி பலவித மாற்றங்களுக்கு உட்படுத்தியதால், விற்பனையில் தொடர்ந்து அசத்த முடிந்தது. பின்பு டிவிஎஸ்ஸின் ரேஸிங் அணியிலும் இடம்பிடித்து, பைக் ரேஸ்களில் பல வெற்றிகள் மற்றும் கோப்பைகளைத் தட்டிச் சென்றது வரலாறு! 
 
 
சுஸூகி ஷோகன்
 
 
 

யமஹாவுக்கு RX100 எப்படியோ, சுஸூகிக்கு ஷோகன் அப்படி; ஜப்பானிய மொழியில் 'ஷோகன்' என்றால் 'பாஸ்' என்று அர்த்தம். அதற்கேற்ப டிவிஎஸ் நிறுவனம் இந்த பைக்கை, ''Shogun The Boss'' என்ற அடைமொழியுடனே இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. 7.8 bhp பவரை வெளிப்படுத்திய AX100 பைக்கின் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டுதான், ஷோகனில் இருந்த 108.2சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜின் தயாரிக்கப்பட்டது. ஆனால் புதிய Bore, Intake & Exhaust Ports ஆகியவற்றால், இது அதிக பெர்ஃபாமென்ஸை அளிப்பது போல வடிவமைக்கப்பட்டது.
 
மேலும் இதன் எக்ஸாஸ்ட் பைப்பிலும், சிறிய Expansion Chamber மற்றும் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டரும் பொருத்தப்பட்டிருந்தது. இவையெல்லாம் ஒன்று சேரும்போது, ஷோகனில் AX100 பைக்கைவிடச் சுமார் இருமடங்கு பவர் கிடைத்தது (அதாவது 14bhp)! எனவே 0- 60 கிமீ வேகத்தை, வெறும் 5 விநாடிகளில் எட்டிப்பிடித்த இந்த பைக்கின் அதிகபட்ச வேகம், 110 கி.மீ-க்கும் அதிகம்;
 
 
 
 
ஆக 100சிசி RX100 பைக், 100கிமீ வேகம் சென்றது என்றால், 110சிசி ஷோகன், 110கிமீ வேகம் சென்றது! மேலும் இதன் எக்ஸாஸ்ட் சத்தமும் மிரட்டலாக இருந்தது. இப்படி அட்டகாசமான பிக்-அப் மற்றும் அதிரடியான டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பைக் தயாரிக்கப்பட்டிருந்ததால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு, 25-40 கி.மீ வரைதான் மைலேஜ் கிடைத்தது. ''All show, But No Go'' என்ற கூற்றைப் பொய்யாக்கும்படியாக, பிகினி ஃபேரிங் உடனான பவர்ஃபுல் ஹெட்லைட், ஸ்டைலான இண்டிகேட்டர் மற்றும் டெயில் லைட்,
 
இன்ஜின் ஆர்பிஎம்மைக் காட்டும் டேக்கோ மீட்டர், ஸ்போர்ட்டி பாடி கிராஃபிக்ஸ் மற்றும் பின்பக்க கவுல், வசதியான சீட், கில் ஸ்விட்ச் என AX100 பைக்கைவிடப் படு மாடர்ன்னாக இருந்தது ஷோகன். 1993 - 1998 வரை தயாரிப்பில் இருந்த இந்த பைக்கின் அப்போதைய ஆன்ரோடு விலை, 44,000 ரூபாய் மக்களே! இப்போதும் யூஸ்டு பைக் மார்க்கெட்டில், கிட்டத்தட்ட அந்த விலைக்கே இது கிடைப்பதுதான், அந்த பைக்கின் அடையாளம்!  

 
- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   SUZUKI, 2 STROKE, SHAOLIN, SHOGUN, AX100, MAX 100, SUPRA, INDIA, YAMAHA, KAWASAKI, EMISSION, PETROL, POWER, PERFORMANCE, MILEAGE.