எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க, அசோக் லேலண்ட் - SUN Mobility நிறுவனங்களின் புதிய கூட்டணி!
Posted Date : 21:07 (21/07/2017)
Last Updated : 21:29 (21/07/2017)

 

கமர்ஷியல் வாகனங்களைத் தயாரிப்பதில் புகழ்பெற்ற அசோக் லேலண்ட் நிறுவனம், உலகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் முடிவில் இருக்கிறது. இதற்காக SUN Mobility நிறுவனத்துடன், அசோக் லேலண்ட் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்தியாவில் முதன்முதலாக எலெக்ட்ரிக் கார்களைத் தயாரித்த ரேவாவின் (Reva) நிறுவியவரான சேத்தன் மைனி அவர்களின் தலைமையில் இயங்கும் SUN Mobility, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான  புதுமையான தொழில்நுட்பங்களை வடிவமைக்கும். அவற்றின் உதவியுடன், இந்திய சந்தைக்கு ஏற்ற எலெக்ட்ரிக் வாகனங்களை, அதிக எண்ணிக்கையில் தயாரிக்க உள்ளது அசோக் லேலண்ட். 2020க்குள் 70 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் எனும் இந்தியாவின் 'மின்சார கனவு'-க்கு, உற்சாக டானிக்காக, இந்த செய்தி அமைந்திருக்கிறது.

 


 
 
எலெக்ட்ரிக் பஸ், ஹைபிரிட் பஸ், டீசல் மற்றும் CNG-யில் இயக்கப்படும் பஸ், LCV ஆகியவற்றைத் தயாரித்து, இந்திய மற்றும் உலக சந்தைகளில் விற்பனை செய்துவருகிறது அசோக் லேலண்ட். ஸ்மார்ட் பேட்டரிகள் மற்றும் பேட்டரிகளைச் சார்ஜ் செய்துகொள்ளவோ, தேவைபட்டால் பேட்டரிகளை மாற்றிக்கொள்ளக்கூடிய பேட்டரி ரீ-சார்ஜ் ஸ்டேஷன்களால், இந்தியாவின் போக்குவரத்துத் துறையை SUN Mobility நிறுவனம் மாற்றியமைக்கும் நோக்கில் இருக்கிறது. அந்த பேட்டரி ரீ-சார்ஜ் ஸ்டேஷன்களுக்குத் தேவையான மின்சாரத்தை, Renewable Energy வாயிலாகப் பெறப்படும் என்பதால், பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களின் ரன்னிங் காஸ்ட்டைவிட, எலெக்ட்ரிக் வாகனங்களின் ரன்னிங் காஸ்ட் குறைவாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
 

 
 
இந்த கூட்டணி குறித்து, அசோக் லேலண்ட் நிறுவனத்தின் CEO வினோத்.கே. தசரி கூறியதாவது, ''Make In India, For India, By India'' என்ற கோட்பாட்டுக்கு ஏற்ப, உலகத்தரமான தயாரிப்புகளை வெளிக்கொண்டு வருவதற்காக,  SUN Mobility நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். எனவே புதுமையான தொழில்நுட்பங்களுடன் கூடிய எலெக்ட்ரிக் வாகனங்களை, நாங்கள் அறிமுகப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை'' எனக் கூறியுள்ளார். 2016-ல், ஏசி - Low Floor - Fire Protection உடனான CIRCUIT எனும் மினி எலெக்ட்ரிக் பஸ்ஸை அறிமுகப்படுத்தியது அசோக் லேலண்ட். SUN Mobility கூறியுள்ள அதே தொழில்நுட்பத்தைப் பின்பற்றித் தயாரிக்கப்பட்டிருக்கும் இது, சிங்கிள் சார்ஜில் 120 கிமீ தூரம் செல்லக்கூடியது. இதனால் தமிழக அரசின் கவனத்தையும் இது தன்வசம் ஈர்த்துள்ளது.
 
 
 
 
'' பெட்ரோல்/டீசல் வாகனங்களைப் போல, அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்களும் புழக்கத்தில் வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இதற்காக அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம். வழக்கமான வாகனங்களுக்கு இருக்கும் பங்க் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் எப்படியோ, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஸ்மார்ட் பேட்டரிகள் மற்றும் பேட்டரிகளை மாற்றிக்கொள்ளக்கூடிய பேட்டரி ரீ-சார்ஜ் ஸ்டேஷன்களை வடிவமைக்க உள்ளோம். எனவே குறைவான ரன்னிங் காஸ்ட், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத, அதிக மைலேஜ் ஆகியவை மக்களுக்குக் கிடைக்கும்'' என SUN Mobility நிறுவனத்தின் Vice Chariman சேத்தன் மைனி தெரிவித்துள்ளார்.

 
 
 
ஆகவே, கனரக கமர்ஷியல் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிப்பதற்காக, அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ள SUN Mobility, கார் - பஸ் - ஆட்டோ - ஸ்கூட்டர் போன்றவற்றின் எலெக்ட்ரிக் மாடல்களுக்காக, அந்தந்த வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கூட்டணி அமைக்கும் முடிவில் இருக்கிறது. IOT உடனான ஸ்மார்ட் பேட்டரிகளை, வேகமாக ரீ-சார்ஜ் செய்ய முடியும்; வாகனத்தின் திறனுக்கு ஏற்ப தயாரிக்கப்படும் பேட்டரிகள், பாதுகாப்பான வடிவமைப்பையும், எளிதாக கழட்டி மாற்றக்கூடிய வசதியையும் கொண்டிருக்கின்றன. இந்தக் கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், வருங்காலத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
 
 
- ராகுல் சிவகுரு.  
 
 
TAGS :   ASHOK LEYLAND, INDIA, SUN MOBILITY, MAINI REVA, VINOD.K.DHASARI, ELECTRIC VEHICLES, CIRCUIT, TAMILNADU GOVERNMENT, BUS, TRUCK, JV.