3.48 லட்சத்துக்கு அறிமுகமானது பெனெல்லி 302R!
Posted Date : 14:07 (29/07/2017)Last updated : 14:07 (29/07/2017)

 


 

தனது நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான TNT 300 பைக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் 302R பைக்கை, 3.48 லட்சத்துக்குக் (இந்திய எக்ஸ் ஷோரூம் விலை) களமிறக்கியுள்ளது பெனெல்லி. 2015-ல் மிலனில் நடைபெற்ற EICMA மோட்டார் ஷோ மற்றும் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்ட இந்த பைக்கில், TNT 300 பைக்கில் இருக்கும் அதே BS-IV, 300சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் இன்ஜின்தான் (38.8bhp பவர் & 2.65kgm டார்க்) பொருத்தப்பட்டுள்ளது.
 
 
 
 
ஆனால் புதிய ஸ்டீல் ட்யுப் Trestle ஃப்ரேம் - பாக்ஸ் செக்‌ஷன் ஸ்விங்ஆர்ம், மாற்றியமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் செட்-அப், ஏபிஎஸ் பிரேக்ஸ், 17 இன்ச் METZELER டயர்கள் எனப் புதிய விஷயங்கள் இருப்பதும் கவனிக்கத்தக்கது. இதனுடன் நாம் வேகமாகச் செல்லும்போது, முகத்தில் காற்று அறைவதை தடுக்கக்கூடிய ஃபுல் ஃபேரிங் இடம்பெற்றிருப்பதும் பெரிய ப்ளஸ். TNT 300 பைக்கைவிடச் சுமார் 2 கிலோ மட்டுமே எடை அதிகரித்திருக்கிறது, 14 லிட்டர் பெட்ரோல் டேங்க்கைக் கொண்டிருக்கும் 302R (198 கிலோ). ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்காகப் பொசிஷன் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கின் புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில்,
 
 
 
 
இது வாடிக்கையாளர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுவிட்டதாக, DSK மோட்டோ வீல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீட் உயரம் 790மிமி - கிரவுண்ட் கிளியரன்ஸ் 150மிமி மற்றும் ஹேண்டில் பார் சற்று தாழ்வாகவும் இருப்பதால், முதன்முறையாக பைக் ஓட்டுபவர்களுக்கும், இந்த பைக்கைக் கையாள்வது எளிதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். TNT 300 பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை 3.68 லட்சம் எனும்போது, 302R பைக்கின் சென்னை ஆன்ரோடு விலை, 4 லட்ச ருபாயைத் தாண்டுவதற்கான சாத்தியங்கள் அதிகம்!  
 
- ராகுல் சிவகுரு.