ஜாகுவாரின் காம்பேக்ட் எஸ்யூவி - E-Pace !
Posted Date : 15:05 (31/07/2017)
Last Updated : 15:13 (31/07/2017)


 

உலகளவில் செடான் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களைவிட, எஸ்யூவிகளுக்குத்தான் இப்போது அதிக டிமாண்ட் இருக்கிறது! அதற்கேற்ப செயல்பட்டுள்ளது, டாடா மோட்டார்ஸுக்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம். தனது F-Pace எஸ்யூவியைத் தொடர்ந்து, தனது இரண்டாவது எஸ்யூவியை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. E-Pace எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவி, லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் மற்றும் ரேஞ்ச் ரோவர் இவோக் ஆகிய எஸ்யூவிகள் தயாரிக்கப்படும் அதே LR-MS ஸ்டீல் D8 ஃப்ளாட்ஃபார்மில்தான் தயாரிக்கப்படுகிறது.
 
ஆடி Q3, பிஎம்டபிள்யூ X1, மெர்சிடீஸ் பென்ஸ் GLA ஆகிய பிரிமியம் காம்பேக்ட் எஸ்யூவிகளுக்குப் போட்டியாகப் பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் E-Pace எஸ்யூவியின் முன்பக்கம், பார்ப்பதற்கு மினி F-Pace போல இருக்கிறது. ஆனால் இதன் பக்கவாட்டுப் பகுதி -  ரூஃப் லைன் - 17 இன்ச் அலாய் வீல்கள் - LED ஹெட்லைட் & டெயில் லைட் ஆகியவை, F-Type ஸ்போர்ட்ஸ் கூபே காரை நினைவுபடுத்தும்படி அமைந்திருக்கிறது.
 
 
 
 
இப்படி ஜாகுவார் கார்களுக்கே உரித்தான டிசைன் அம்சங்களைக் கொண்டிருக்கும் E-Pace, ஒரு ஸ்போர்ட்டியான ஓட்டுதலுடன் கூடிய பிராக்டிக்கலான எஸ்யூவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார், ஜாகுவாரின் டிசைன் பிரிவுத் தலைவர் Ian Callum. 4,345 மிமீ நீளம் - 1,984 மிமீ அகலம் - 1,649 மிமீ உயரம் - 2,681 மிமீ வீல்பேஸ் - 480 லிட்டர் பூட் ஸ்பேஸ் என அதன் செக்மென்ட்டிலே சிறிய எஸ்யூவிகளில் ஒன்றாக இருக்கும் E-Pace, ஓட்டுனரை முன்னிருந்தும் கேபினைக் கொண்டிருக்கிறது.
 
கிராப் ரெயில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் லீவர், மூன்று ரோட்டரி கன்ட்ரோலருடன் கூடிய 10 இன்ச் Incontrol TouchPro இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், TFT டிஸ்பிளே - சாட்டிலைட் நேவிகேஷன் உடனான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை பொசிஷன் செய்யப்பட்டிருக்கும் விதத்தை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். 
 

 
 
தனது Ingenium சீரிஸின் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் அனைத்தையும், E-Pace காரில் பொருத்தியுள்ளது ஜாகுவார். ஆரம்ப E-Pace வேரியன்ட்டில், 150bhp பவரை முன்பக்கச் சக்கரங்களுக்கு வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கூட்டணி இருக்கிறது. இதுவே விலை அதிகமான வேரியன்ட்களில், 180bhp பவர் - 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் Active Driveline All Wheel Drive சிஸ்டம் ஆகியவை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுவே டாப் வேரியன்ட் என்றால், 300bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அமைப்பு இடம்பெற்றுள்ளது. எனவே 0 - 100கிமீ வேகத்தை, 5.9 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் இந்த மாடல், அதிகபட்சமாக 242 கிமீ வேகம் வரை செல்லும் என்கிறது ஜாகுவார்.
 
 
 
 
Adaptive Dynamics Damper உடனான முன்பக்க மெக்ஃபர்ஸன் ஸ்ட்ரட் - பின்பக்க மல்ட்டி லிங்க் சஸ்பென்ஷன் மற்றும் உறுதியான சேஸியும் சேரும்போது, ஜாகுவார் ஸ்பெஷல் ஹேண்ட்லிங் கிடைக்கும் என்றே தெரிகிறது. E-Pace எஸ்யூவியின் பூட் லிட், பானெட், ஃபெண்டர் ஆகியவை அலுமினியத்திலும், சேஸி High-Strength ஸ்டீல்லாலும் தயாரிக்கப்பட்டுள்ளது; இருந்தாலும், இந்த எஸ்யூவியின் எடை 1700 கிலோ என்பது, போட்டியாளர்களைவிடச் சற்றே அதிகம்தான்!
 
''Furthest Barrel Roll in a Production Vehicle'' என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்திருக்கும் E-Pace, லண்டனில் கடந்த ஜூலை 13, 2017 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆஸ்திரியாவில் இருக்கும் தனது தொழிற்சாலையில், இந்த எஸ்யூவியைத் தயாரிக்கிறது ஜாகுவார். ஆனால் இது அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வரும்போது, இங்கேயே அசெம்பிள் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம்! மேலும் ஜாகுவாரின் மூன்றாவது எஸ்யூவியாக, E-Pace எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடலான I-Pace வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  
 

- ராகுல் சிவகுரு.
 
 
TAGS :   JAGUAR, E-PACE, INDIA, COMPACT PREMIUM SUV, AUDI Q3, BMW X1, MERCEDES BENZ GLA, PETROL, DIESEL, F-PACE, F-TYPE, COUPE, 4WD, STEEL.